விபூதி தாரண பலம்

135

விபூதியை யணிந்தவர் எவ்விடத்திற் போசனஞ் செய்கின்றாரோ அவ்விடத்திற் பார்வதி சமேதராகிய பரமசிவனும் உண்கின்றனர். உடம்பு முழுதுந் திருநீற்றை யணிந்தவரை எவர் பின்செல்கின்றனரோ அவர்கள் மகாபாதகராயினும் பரிசுத்தராகின்றனர் எனச் ஸூத சங்கிதை கூறுகின்றது. காலை, உச்சி, மாலையென்னு முக்காலங்களினுந் தரிக்கின்ற மெய்யன்பர் எக்குலத்தவராயினும் அவரைச் சிவபெருமான் என்றே பாவிக்கக்கடவர் என மானவ சங்கிதையிற் சொல்லப்பட்டிருக்கின்றது. மெய்யன்புடன் விபூதிதரிப்பவரிடம் சிவபெருமான் நீங்காது நிற்பர். அதனால் சர்ப்பம், சூரியன் முதலிய கிரகங்கள், நட்சத்திரங்கள், திசைத் தெய்வம், யமன், காலன், யமதூதர், அக்கினி, கொடுநோய்கள், அவுணர், இடி, பூதங்கள், சிங்கம், புலி, கரடி முதலிய கொடியனவற்றால் வருந் துன்பங்கள் அவரை யணுக மாட்டா வாம். அவர் இருவினைகளையும் வென்று சிவஞானம் பெற்று முத்தியடைவார் என்பது சத்தியம், முக்காலுஞ் சத்தியமே யாம்.
பகைபிணி மண்ணைபன் மந்தி ரத்தினா
மிகையறன் கடையுள வெருட்சி பித்திடர்
வகையெனைத் தையுமற மாற்றி யாவர்க்குந்
தகைநல மளிப்பது தவள நீறரோ.
– தணிகைப் புராணம்
விபூதி தரிக்குங் காலங்களில் ஓதவேண்டிய திருநீற்றுப் பதிகம் திருவருண்ஞானச் செல்வராய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாராற் கூன்பாண்டியனுடைய வெப்புநோயைத் தீர்த்தற்காகவும், எம்மனோரது பிறவித் துன்பங்களை வேரறக் களைதற்காகவும் ஓதியருளப்பட்டது. ஆதலால் தரிக்குங் காலத்து ஒவ்வொருவரும் அதனை மெய்யன்புடன் ஓதக்கடவர்.
யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்த மகாசரபம் சிவஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை அவர்கள்
இயற்றிய சைவபூஷண சந்திரிகை என்னும் நூலிலிருந்து…