Saturday, October 28, 2023
HomeAalayangalஅக்னி பகவானுக்கு அருள்செய்த திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்

அக்னி பகவானுக்கு அருள்செய்த திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்

https://swasthiktv.com/madhura-gaanam-registration/

நாகபட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் உள்ளது அக்னீஸ்வரர் ஆலயமாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

ஆலயத் தோற்றம்உலகத்தைக் காப்பதற்காக பல்வேறு வடிவங்களில் மக்களிடையே தோன்றி அருள்தருகிறான், இறைவன். முன்காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களையும் உணர்த்தும் விதமாக ஓரிடத்தில் இறைவன் இருந்தால் எத்தனை சிறப்பு. அங்கு சென்று நாம் வணங்கும் போது முக்காலத்தையும் உணரும் ஆற்றல் நமக்கு கிடைக்கிறது அல்லவா?- அப்படியொரு அற்புதத் தலம்தான் நாகபட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயமாகும்.

தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான சுந்தரர், சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அவருக்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருநாளில் பெரும் விழா எடுப்பது சுந்தரரின் வழக்கம். அந்த விழாவில் மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்களுக்கு ஆடை அணிவித்து அமுதூட்டி வணங்குவதை தவறாது செய்து வந்தார். இந்த புனித சேவையில் சுந்தரரின் துணைவியார் பரவை நாச்சியாரம்மாள் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்வார்.

இவ்வாறு இவர்கள் வழக்கம் போல நடத்தும் இந்த விழாவில் ஒரு சமயம் சுந்தரருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. ‘என்ன செய்வது?.. யாரிடம் கேட்பது?’ என தெரியாமல் தவித்தப்படியே பயணித்தார் சுந்தரர். பல ஆலயங்களுக்கு சென்று இறுதியில் திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஆலயத்தில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் செங்கற்களும் மணலும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. நெடுந்தூரம் பயணம் செய்த காரணத்தினால் அவருக்கு அலுப்பு ஏற்பட்டது. திருப்புகலூரில் சற்று ஓய்வு எடுத்தார். மணலை படுக்கையாக்கினார். செங்கற்களை தலையணையாக்கி துயில் கொண்டார்.

அவர் தூங்கினாலும் கூட அவரது சிந்தனையோ, ‘மகேஸ்வர பூஜையை எப்படி நடத்துவது?’ என்பதிலேயே இருந்தது. அவரது கனவில் “பங்குனி உத்திரத்துக்கு காசு எங்கே?” என்று மனைவி கேள்வி கேட்பதுபோல இருந்தது. உடனே கண் விழித்து பார்த்த போது அவரது தலையணைக்கு பயன்படுத்திய செங்கற்கள் தங்கக் கட்டிகளாக மாறி இருந்ததை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். என்ன இறைவனின் லீலை என ஆனந்தப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு பின் இத்தலம் வாஸ்து பரிகார தலமாகவும் விளங்க ஆரம்பித்தது. இன்றும் புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் 3 செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வடகிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும். இந்த வாஸ்து பூஜை இத்தலத்தின் அனைத்து நாட்களிலும் செய்யப்படுகிறது.

ஒரு சமயம் அக்னி தேவனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அக்னி தேவன் “நானே பெரியவன், என்னை எதிர்த்தால் யாராக இருந்தாலும் பொசுக்கி சாம்பலாக்கி விடுவேன். நான், தாக்கத் தொடங்கினால் மலையானாலும் வெடித்து சிதறும்” என்று தற்பெருமை கொண்டார்.

இதனைக் கேட்ட வாயு தேவன், “அக்னியே நீ எவ்வளவு சக்தி படைத்தவனாக இருந்தாலும், நீ என் மகன்தான். பஞ்ச பூதங்களின் தோற்றத்தில் என்னிடம் இருந்தே நீ தோன்றினாய். ஆதலால் நீ எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் என் ஆற்றலே உன்னிடம் உள்ளது. ஆதலால் நீ என் ஆற்றலுக்கு முன்னே நிற்காது ஒழிவாயாக’ என சாபமிட்டார்.

தன்னுடைய தந்தையின் சாபத்தை நீக்க என்ன வழி என தன் குல குருவாகிய பிரகஸ்பதியிடம் கேட்டார் அக்னி.

“தந்தையின் சாபம் பொல்லாதது. அதனால் நீ சோழ நாட்டில் புன்னாக வனம் என்று ஒரு தலம் இருக்கிறது. அங்கே சென்று நாற்புறமும் அகழியை தோண்டி அங்கிருந்து சிவ நாமம் சொல்லி, சிவ பூஜை செய்து வா. அவ்வாறு செய்தால் எந்த சாபமும் உன்னை அண்டாது. உனக்குள்ள இகழ்ச்சிகள் அனைத்தும் நீங்கும்” என்று அருளினார்.

அக்னி பகவானும் அவ்வாறே சென்று புன்னாக வனத்தின் நடுவில, சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இவருடய பூஜைக்கு மனம் இரங்கிய சிவபெருமான், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அக்னிதேவனுக்கு காட்சி கொடுத்தார்.

அக்னிதேவன் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கி, “பெருமானே! நான் எதைத் தீண்டினாலும், எதை உண்டாலும் என்னுடைய புனிதத் தன்மை கெடாமல் இருக்க வேண்டும். நீங்கள் இத்தலத்திலும் வீற்றிருந்து உலக மக்களுக்கு அருள் வழங்க வேண்டும்” என்று வேண்டினார்.

அதன்படியே அக்னிக்கு அருள்புரிந்ததால், இத்தல இறைவன் ‘அக்னீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் புன்னை மரம். இந்த ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள அகழி, ‘பாண தீர்த்தம்’ என்றும், ‘அக்னி தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

 

இத்தல இறைவியின் திருநாமம் கருந்தாள் குழலி என்பதாகும். சாயரட்சை காலத்தில் அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 

இத்தலத்தில் நிகழ்கால நாதர் என்னும் வர்த்தமானீஸ்வர், கடந்தகால நாதர் பூதேஸ்வரர், எதிர்கால நாதர் பவிட்ச்சேயேஸ்வர் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். இவர்களை வழிபட்டால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் தோஷங்கள் நிகழ்காலத்தில் கிடைக்க வேண்டிய நன்மைகள், வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழலாம் என்கிறார்கள். அப்பர் பெருமான் உழவாரப் பணி செய்து கொண்டிருந்த போது, இறைவனடி சேர்ந்த திருத்தலம் இதுவாகும்.

அனுக்கிரக சனீஸ்வரர்

நள சக்கரவர்த்தியும், சனீஸ்வரனும் திருப்புகலூர் தலத்தில் ஒரே சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். இது மிகவும் விசேஷமாகும். ஒரு சமயம் நள சக்கரவர்த்திக்கு சனி தோஷம் ஏற்பட்டது. சனி தோஷத்தில் இருந்து விடுபட திருநள்ளாறு செல்வதற்கு முன்பாக இத்தலத்தில் உள்ள சனீஸ்வரனை வழிபட்டார். அப்போது இறைவன் “திருநள்ளாற்றில் உன்னைப் பிடித்த சனியை விலக்கி கொள்கிறேன்” என அசரீரி வாக்காக கூறினார். அதனால் இங்குள்ள சனீஸ்வரனை ‘அனுக்கிரக சனி’ என்று அழைக்கிறார்கள். இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

பாணாசுரனால் உண்டான தீர்த்தம்

பாணாசுரன் என்ற அசுரனின் தாய், சிவன் மீது மிகுந்த பற்று கொண்டவர். தனது தாய் வழிபடுவதற்காக பாணாசுரன் தினமும் பூலோகத்தில் இருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வருவான். அவ்வாறு ஒரு நாள் புகலூருக்கும் வந்தான். இங்கே உள்ள அக்னீஸ்வரரை பெயர்தெடுக்க முயன்றான்; முடியவில்லை. நான்கு புறமும் அகழி போல குழி தோண்டி லிங்கத்தை தூக்கிப் பார்த்தான். அப்போதும் மூர்த்தியின் அடித்தளத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. நான்கு புறமும் தண்ணீர் தோன்றி தீர்த்தமானது. தன் தவறை உணர்ந்த பாணாசுரன், இறைவனை வேண்டி இந்த தீர்த்தம் மக்களின் நோய் தீர்க்கும் மருந்தாக வேண்டும் என்று வேண்டினான். பாணாசுரன் ஏற்படுத்திய அகழி தீர்த்தம் என்பதால் ‘பாண தீர்த்தம்’ என்றும், இந்த தீர்த்தத்தைக் கொண்டு அக்னி பகவான் சிவனை பூஜித்ததால் ‘அக்னி தீர்த்தம்’ என்றும் பெயர் பெற்றது. முன்பு நான்கு புறமும் தண்ணீரால் சூழப்பட்டிருந்த ஆலயத்தை அப்பர் சுவாமிகள் கூட படகில்தான் கடந்து சென்று வழிபட்டுள்ளார். பிற்காலத்தில் மண்டபம் கட்டப்பட்ட காரணத்தால் தற்போது மூன்று பக்கம் மட்டும் நீர் உள்ளது.

இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் அருகே திருப்புகலூர் உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மாயவரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்புகலூரை அடையலாம்.

-முத்தாலங்குறிச்சி காமராசு

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =

Most Popular