தென்னாட்டில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது “திருக்கருகாவூர்” என்னும் திருக்களாவூர். இத்தலத்து இறைவன் முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ளதால் மாதவீ வனேஸ்வரர் என்றும் முல்லைவனநாதர் என்றும் மகப்பேறு அளிப்பதால் கர்ப்பபுரீஸ்வரர் என்றும் அழைப்பர்.
தாயின் வயிற்றிலுள்ள கருவைச் சிதையாமல் காக்கும் கருக்காத்த நாயகி கர்ப்பரட்சாம்பிகை – திருவருள் திறம் மிக்கதாய் இங்கே கோயில் கொண்டிருக்கிறாள். எல்லா நலன்களும் நிறைந்து விளங்கும் திருத்தலம் திருக்கருகாவூர்.
உண்மை உணர்ந்து, நம்பிக்கையோடு ஆயிரக்கணக்கானோர் ஆண்டு முழுவதும் வந்து தரிசித்துப் பயன்பெறும் திருத்தலம் திருக்கருகாவூர்.
ஸ்தல வரலாறு :
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் இப்பூவுலக மக்கள் பெற்று உய்யும் வண்ணம் கருணா மூர்த்தியாகிய சிவபெருமான் திருவருளே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்தலங்கள் பலவாகும். அவற்றுள் மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் மூவர் தேவாரத்தையும் பெற்று மக்கள் பலரும் நாளும் வந்து தம் காரியசித்தியை அடையும் தலமாக விளங்கும் இத் திருக்கருகாவூர் மிகச் சிறப்புடையதாகும்.
புராண மகிமை :
முன் காலத்தில் முல்லைவனம் என்ற இத்தலத்தில் கௌதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர். நித்துருவர் என்பவரும் அவருடைய மனைவி வேதிகை என்பவரும் ஆசிரமத்தில் தங்கி தவம் செய்து வந்த முனிவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தனர். அவர்கள் தமக்கு குழந்தையில்லையே என்ற குறையை முனிவர்களிடம் கூற, முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கினால் வேண்டியது கிடைக்கும் என்று உபதேசித்தனர். அவ்வாறே நித்துருவரும், வேதிகையும் முல்லைவனநாதரையும் இறைவியையும் வணங்கினர். அதனால் அவர்களுக்கு மகப்பேறு உண்டாயிற்று.
வேதிகை கருவுற்றிருந்தபோது கணவர் இல்லாமல் தனித்து இருந்த சமயம் கர்ப்பாவஸ்தையால் சுய நினைவிழந்து மயக்கமுற்றிருந்தபோது ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, மயக்கமுற்றிருந்தபடியால் வேதிகையால் முனிவருக்கு பிட்சையிட முடியவில்லை. அது அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட அம்பாள் கர்ப்பரட்சகியாகத் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக் காப்பாற்றி நைதுருவன் என்று குழந்தையாகக் கொடுத்தாள்.
இறைவியின் அருள் மகிமையைக் கண்டுணர்ந்த வேதிகை இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாகவே எழுந்தருளி, உலகில் கருத்தரித்தவர்களையும், கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்க, அம்பாள் அவ்வாறே அருள்பாலித்தாள். அது முதற்கொண்டு இத்தலத்திற்கு திருக்கருகாவூர் என்றும் அம்பாளுக்கு ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை என்றும் பெயர்.
குழந்தை நைதுருவனுக்கு தாய்ப்பால் இல்லாதபடியால் அம்பாள் காமதேனுவை அனுப்பி பால்கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் கீறவும் பால்குளம் தோன்றியது. அது ஆலயத்திற்கு முன்புறம் க்ஷீரகுண்டம் என்று இன்றும் இருந்து வருகிறது. எனவே தான் இத்தலத்து நாயகியை நினைந்து வணங்கினால் கரு உண்டாகிறது. கரு நிலைக்கிறது. சுகப்பிரசவம் ஏற்படுகிறது.
தலப் பெயர்கள் :
திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப் பெறும் இத்தலம் மாதவி வனம் முல்லை வனம், திருக்கருகாவூர் கர்ப்பபுரி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது என புராண நூல்களில் குறிப்பிடப்படுகிறது.
மாதவி (முல்லைக் கொடியை) ஸ்தல விருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும் கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, காத்த (காக்கின்ற), ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.
தல விருட்சம் தலப் பெயர் தரிசிக்க வேண்டிய நேரம்
முல்லை முல்லை வனமாகிய திருக்கருகாவூர் விடியுமுன் முதற்காலமாகிய உஷத் காலத்தில்
தரிசிக்க வேண்டும்.
கோயில் அமைப்பு :
இவ்வூரின் நான்கு வீதிகளுக்கிடையில் அமைந்துள்ள இக்கோயிலானது 460 அடி நீளமும் 284 அடி அகலமும் உடையது. இதற்குக் கிழக்கில் ஓர் இராஜகோபுரமும், தென்பக்கம் ஒரு நுழைவுவாயிலும் இருக்கிறது.
உள்ளே நுழைந்ததும் வடப்பக்கம் வசந்த மண்டபம் இருக்கின்றது. அடுத்து முதலில் அமைந்துள்ள பெரிய பிரகாரத்தில் ஸ்வாமி கோயிலும் இதன் வடப்பக்கம் அம்பிகைக் கோயிலும் தனித்தனி பிராகாரத்திற்குள் இருக்கின்றன.
சுவாமி கோயிலுக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவையும், தென்கிழக்கில் மடப்பள்ளி அறுபத்து மூன்று நாயன்மாரும் வடகிழக்கில் நடராஜர் சபா மண்டபமும் யாகசாலையும் இருக்கின்றன. இதற்கடுத்து மேல்பக்கம் சுவாமிக்கு வடகிழக்கில் நடராஜர் சன்னதியும் நவக்கிரகங்களும் தென்பக்கம் சோமாஸ்கந்தர் சன்னதியும் அருகில் தென்கிழக்கில் தல விநாயகர் கற்பகப்பிள்ளையார் சன்னதியும் இருக்கின்றன.
உட்பிரகாரத்தில் நடராஜருக்கு எதிரில் சேக்கிழார் சந்தனாச்சாரியார் நால்வர் சன்னதிகளும் தென்பக்கம் தட்சிணாமூர்த்தி நிருதிவி நாயகர் சன்னதிகளும் மேற்புரம் அர்த்த நாரீஸ்வரர் மகாலஷ்மி சன்னதிகளும் வடபுறம் ஆறுமுகர் பிரம்மன் துர்க்கை சண்டிகேஸ்வரரும் மற்றும் ஸ்தல விருட்சமாகிய முல்லைக்கொடியும் அமைந்துள்ளன.
அம்பிகையின் திருக்கோயில் தனியே ஒரு திருச்சுற்றுடனும் முன்னால் ஒரு நீண்ட மண்டபத்துடனும் விளங்குகிறது. அம்மன் கோயிலுக்கு வெளிப்பக்கம் கௌதமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
மூர்த்திகள் :
இத்தலத்து ஏகநாயகரும் சுயம்பு மூர்த்தியுமாகிய மூலலிங்கமூர்த்தி மாதவி வனேச்சுரர் முல்லை வனநாதர் கர்ப்ப புரீச்சுரர் கருகாவூர்க் கற்பகம் என்று அழைக்கப் பெறுகிறார்.
முல்லைவனத்தில் புற்றுருவில் சுயம்புவாகத் தோன்றியதால் லிங்க திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்த வடுவை இன்றும் காணலாம். புற்றுருவாக இருப்பதால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. எனவே இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் தீராத நோய்களனைத்தும் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.
இக்கோயில் கல்வெட்டில் திருக்கருகாவூர் மகாதேவர ், திருகருகாவூர் ஆழ்வார ், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்றெல்லாம் குறிக்கப் பெற்றுள்ளது.
அடுத்து இங்கு அகிலாண்ட கோடி அன்னையாய் அனைத்துயிர்களின் கருவைக் காத்தளிப்பவளாய் கண்கண்ட தெய்வமாய் கோயில் கொண்டு அருளும் அம்மை கர்ப்பரட்சக ி, கருக்காத்த நாயகி கரும்பனையாள் என்று அழைக்கப் பெறுகிறாள்.
தல விநாயகர் கற்பகவிநாயகர் என அழைக்கப் பெறுகிறார். இவர் சுயம்பு மூர்த்தி மற்றும் இங்கு முருகன் ஆறுமுகத்தோடு தனிப்பெருங் கோயிலில் விளங்குகிறார்.
மேலும் இங்கு மூலவராகிய முல்லை வனநாதர் சன்னதி, கர்ப்பரட்சகி அம்மையின் சன்னதி இடையில் அமைந்துள்ள ஆறுமுகர் சன்னதி இவை மூன்றும் ஒரே வரிசையில் இருக்கும் காலத்தில் தரிசிப்பது பெரும் பேறாகும்.
அதாவது மகேஸ்வர வடிவங்களில் முதன்மையானதும் மக்களுக்கு வேண்டுவனவற்றை வேண்டிய பேறு தரும் போகமூர்த்தியானதும் சிவாலயத்தே தனியாட்சி செலுத்தித் தேரூர்ந்து விழாக்கொள்ளும் மூர்த்தி ஆனதும் சச்சிதானந்த வடிவான சோமாஸ்கந்த மூர்த்தியே ஆவார்.
முல்லை வனநாதர் ஆறுமுகர் கர்ப்பரட்சாம்பிகை
இந்த சோமாஸ்கந்த அமைப்பில் இங்கு இம்மூன்று சன்னதிகளும் அமைந்து தரிசிப்பவர்களுக்கு புத்திரப்பேற்றையும் அப்புத்திரப் பேறு சிதைவின்றிக் கிடைக்க அக்கருவைக் காத்தருளுகின்ற அருள் பேற்றையும் வழங்கும் ஸ்தலமாக விளங்குகின்றது. எனவே சோமாஸ்கந்தர் வடிவமைப்பில் உள்ள இந்த திருக்கோயிலை ஸ்வாமி அம்மன் சுப்ரமணியர் மூன்று சன்னதிகளையும் ஒருசேர வலம் வர சுற்றுப்பிரகாரம் உள்ளது.
தீர்த்தங்கள் :
மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் என்னும் மூன்றினுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம்.
நம் நாட்டில் விளங்கும் பலப்பல கிணறுகள் குளம் ஆறு, கடல் துறை இவையாவையும் சிவமயத் தன்மை பெற்று நீராடியோரது உடற்பிணியையும் பிறவிப்பிணியையும் போக்குகின்றன. இதனை திருநாவுக்கரசர் “சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே” என்கின்றார். இவ்வகையில் இத்தலத்தில் உள்ள தீர்த்தங்கள் வருமாறு :
க்ஷீரகுண்டம் (பாற்குளம்) :
கோயிலுக்கு முன்னால் அமைந்துள்ள இத்திருக்குளம் தெய்வப் பசுவாகிய காமதேனுவின் காலால் உருவாக்கப் பெற்றது. சிவராத்திரிக் காலத்தில் சிவபெருமான் இங்குதான் தீர்த்தம் அருளுகின்றார்.
சத்தியகூபம் :
சுவாமி கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் உள்ளது இக்கிணறு. கார்த்திகை மாதத்து அனைத்து ஞாயிறுகளிலும் முருகப் பெருமான் இதில் தீர்த்தம் அருளுகின்றார்.
பிரம்ம தீர்த்தம் :
இத்திருக்குளம் இவ்வூருக்குத் தென்மேற்கில் கற்சாலைக்குக் கீழ்ப்பக்கம் இருக்கிறது. மார்கழித் திருவாதிரையில் நடராஜப் பெருமான் சிவகாமி அம்மையாருடன் இங்கு வந்து தீர்த்தம் அருளுகின்றார்.
விருத்த காவிரி : காவிரியின் கூறாகிய வெட்டாறு இதுவாகும். இதனையே “முள்ளிவாய்” என்றும் புராணங்கள் கூறும். கோயிலுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள பூஜைப் படித்துறையில் கருகாவூர்ப் பெருமான் வைகாசி விசாகம் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களிலும் பெருமாட்டி கர்ப்பரட்சகி ஆடிப்பூர நன்னாளிலும் தீர்த்தம் அருளுகின்றனர்.
ஸ்தல விருட்சம் :
இத்தல விருட்சம் ஆதிமரம் முல்லையாகும்.
இதன் பெயராலேயே இத்தலம் முல்லை வனம் (மாதவி வனம்) எனவும் பெருமான் முல்லை வனநாதர் (மாதவி வனேசர்) என்றும் அழைக்கப் பெறுவது நினைவிற்குரியதாகும்.
சுவாமியின் உட்பிரகாரத்தில் சண்டேச்சுரருக்கும் திருமஞ்சனக் கிணற்றிற்கும் இடையில் இந்த முல்லைக்கொடி உள்ளது.
சுற்றுக் கோயில்கள் :
இத்திருக்கோயில்களுடன் இணைந்த முல்லை மாகாளி அம்மன் கோயில் இக்கோயிலின் தென்கிழக்கிலும் தென்மேற்கில் அந்தணர்கள் வாழ்கின்ற வீதியில் வரதராஜப் பெருமாள் கோயிலும் இருக்கின்றன.
மேலும் தென்கிழக்கு மூலையில் ஒரு பிள்ளைமார் கோயிலும் வடக்கு வீதியில் ஒரு திரௌபதி அம்மன் கோயிலும் தெற்குத் தெருவில் ஒரு மாரியம்மன் கோயிலும் கிழக்கில் ஓர் ஐயனார் கோயிலும் உள்ளன.
பிரார்த்தனை :
இத்தல இறைவன் புற்றுருவாக இருப்பதால் வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் தீராத நோய்கள் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.
புத்திரபாக்கியம் முற்பிறவிகளில் செய்த நற்செயல்களின் பலனாக மட்டுமே கிடைக்கக் கூடியது. எனவே கர்ப்பரட்சாம்பிகை சன்னதியில் வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வந்தால் வம்சதோஷம் நீங்கி புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது திண்ணம். ஒரு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
மேலும் இத்திருக்கோயிலில் அருள்புரிந்து வரும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை திருவருள் பெற்று குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்ய தங்கள் குழந்தைகளை அம்மன் சன்னதியில் தொட்டிலில் இட்டு எடுப்பது இத்திருக்கோயிலில் மிகவும் புனிதமானதாக கருதப்பட்டு தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
தங்கள் குழந்தைகளுடன் வந்து பிரார்த்தனை நிறைவு செய்யும் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க அம்மன் சன்னதியில் குழந்தைகளை தொட்டிலில் இட்டு எடுக்க வசதியாக தங்கத்தொட்டில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
காணிக்கை :
மேலும் குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் தங்கள் விருப்பப்படி நல்ல மகவாகவும் நோய்கள் இன்றியும் சுகப்பிரசவம் ஏற்பட வேண்டியும் அதற்காக பிறக்கும் குழந்தையின் எடைக்கு எடை பொன் வெள்ளி தானியங்கள் நாணயங்கள், நெய், நெல் பழவகைகள் மற்றும் இனிப்புகள் துலாபாரமாக அம்மன் சன்னதியில் கொடுப்பதாக வேண்டிக் கொண்டு காணிக்கை செலுத்துகிறார்கள்.
திருவிழாக்கள் :
நித்ய பூஜையாகிய பெருவிழாக்களும் மற்றுமுள்ள விசேஷ நாட்கள் யாவும் அந்தந்த தினங்களில் நிறைவுடன் நடைபெறுகின்றன.
ஸ்வாமிக்கு வைகாசி விசாகப் பிரம்மோற்சவமும் அம்பிகைக்கு
ஆடிப்பூரம், நவராத்திரி உற்சவங்களும் மற்றும் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள் நிறைபணி அன்னாபிஷேகம் கந்தர் சஷ்டி கார்த்திகை சோமவார நாட்கள் அனைத்து கார்த்திகை ஞாயிறுகளில் தீர்த்தவாரி கார்த்திகை தீபம் மகா சிவராத்ரி, பங்குனி உத்திரம் மாதப் பிரதோஷங்கள் முதலியன யாவும் இங்கு நடக்கும் விழாக்களாகும்.
இது மட்டுமன்றி ஸ்வாமி மற்றும் அம்மனுக்கு லட்சார்ச்சனைகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.
முல்லைவன நாதர் எனப் பெயர் பெற்ற ஈசன் தாயின் வயிற்றில் கொடுத்த கருவுக்கு உயிர் கொடுத்தும் கருவை சிதையாமல் காக்கும் கருகாத்த நாயகி (கர்ப்பரட்சாம்பிகை அம்மன்) திருவருள் திறம் மிக்கதாய் இங்கே கோயில் கொண்டிருக்கிறாள்.
பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும் திருமணம் கூடிவராத பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரவும் அன்னை கருகாத்த நாயகியை வேண்டினால் கோரிக்கையினை ஏற்று நிச்சயம் நிறைவேற்றுவாள்.
இவ்வம்பிகையின் திருவடியில் பசு நெய்யை வைத்து மந்திரித்து உட்கொண்டவர்களுக்கு நல்ல குழந்தைப்பேறும், எண்ணெய் வைத்து மந்திரித்துப் பயன்படுத்திக் கொள்ளும் கருவுற்ற பெண்களுக்கு சுகப்பிரசவமும் ஆகிறது.
ஸ்தல இருப்பிடம் :
இத்தலம் நம் நாட்டின் சிறப்பில் முதலிடம் பெற்று விளங்கும் 275 தேவாரத் தலங்களுள் ஒன்றாகும். சோழ நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தூரத்திலும் கும்பகோணம் தென்மேற்கில் 20 கிலோ மீட்டரிலும் சாலியமங்கலத்திற்கு வடக்கில் 10 கிலோ மீட்டரிலும் தஞ்சாவூருக்கு வடகிழக்கில் 20 கிலோ மீட்டரிலும் வெட்டாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்நான்கு திசைகளில் இருந்தும் வந்து போகப் பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.
எல்லா நலன்களும் வாழ்வில் தோன்றாத் துணையாக இருந்து இத்தலத்தில் கருணை மழை பொழியும் தேவியை ஒருமுறை வணங்கினால் வாழ்வில் எல்லா நலமும் பெறுவீர்கள்.
அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவன நாத சுவாமி திருக்கோயில் திருக்கருகாவூர்.
RELATED ARTICLES
