அருள்மிகு பழனியப்பர் திருக்கோவில், பேளுக்குறிச்சி

351

மூலவர்  பழனியாண்டவர் தனியாக வேடன்ரூபத்தில் நின்றகோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராகநின்று வணங்கினால் வேடனைப்போலவும், வலதுபுறம் நின்றுவணங்கினால் ஆண்வடிவமாகவும், இடது புறமாகநின்று வணங்கினால் பெண்வடிவமாகவும் காட்சிதரும்சிறப்புகளை கொண்டபழனியப்பர்திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் அமைந்துள்ளது.

மூலவர் : பழனியாண்டவர்.
தீர்த்தம் : யானைப்பாழிதீர்த்தம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்குமுன்.
ஊர் : பேளுக்குறிச்சி.
மாவட்டம் : நாமக்கல்.

தலவரலாறு :

படைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவமந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன்ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். மூவராலும் சரியாக பதில் கூற முடியவில்லை. இதனால்மூவரையும்தன்கட்டுப்பாட்டுக்குள்அடக்கியமுருகன், பிரம்மசாஸ்தாஎன்னும்பெயருடன்பூலோகம்வந்தார்.

கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலைஎன்னும் குன்றில் தங்கினார். கூவை என்றால் பருந்து. கொல்லிமலையின் மேலிருந்து கூவைமலையைப்பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம் இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மும்மூர்த்திகளுக்குரிய தொழில்களையும், முருகப்பெருமான் தன் வசம் எடுத்துக்கொண்டார். பிறவியைத்தருவதற்கும், முடிப்பதற்கும் உரிய சகல அதிகாரமும் இவரிடம் உள்ளது.

தலபெருமை :

சேரமன்னானவல்வில் ஓரி ஆட்சிக்குட்பட்ட சேந்தமங்கலம், அறப்பள்ளி, சிங்களாந்தபுரம், ராசிபுரம், கல்குறிச்சி ஆகிய இடங்களில் சிவாலயமும், பேளுக்குறிச்சியில் முருகன் கோவிலும் கட்டினான்.

முருகப்பெருமான், சிவன்-பார்வதி அம்சமாக இருப்பதால் சிவனை குறிக்கும் வகையில் இங்குள்ள மூலவர் பழனியாண்டவர் மூன்று பட்டை வடிவில் நெற்றியில் திருநீறும், தியை குறிக்கும் வகையில் நெற்றியில் பொட்டும் காணப்படுகிறது.

அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்தபெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

முருகனின் கையில் சேவல் : பத்மாசுரன் முருகனால் வதம் செய்யப்பட்டதும், அவனை முருகன் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். இந்தச்சேவலை தனது கையில் வைத்திருக்கிறார். மற்ற முருகன் கோவில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நோய்தீர்க்கும் தீர்த்தம் : மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையேயானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை யானைப்பாழிதீர்த்தம் என்கின்றனர். இதில் நீராடுவதால், தோல் மற்றும் எலும்பு நோய்கள் தீர்வதாக நம்பிக்கை.

இடும்பன் சன்னதி : அகத்தியரின் உத்தரவுப்படி சிவகிரி, திகிரி என்னும் மலைகளை இமயமலையில் இருந்து ஒருதண்டத்தின் இருபுறமும் கட்டிதூக்கிவந்தவன் இடும்பன்என்னும்அசுரன். பார்ப்பதற்கு இது காவடிபோல இருக்கும். முருகப்பெருமான் அவனைத்தடுத்து அந்த மலைகளைத் தனதாக்கிக்கொண்டார்.

காலணிஅணிந்தவர் : முருகப்பெருமான் வேடன்ரூபத்தில் எழுந்தருளியுள்ளார். தலையில்கொண்டையும், வேங்கைமலர்கிரீடமும், கொன்றை மலரும் சூடியுள்ளார். ருத்ராட்சமாலை அணிந்துள்ளார். காலில் காலணியும், வீரதண்டையும் அணிந்துள்ளார். இடது கையில்வேலும், இடுப்பில் கத்தியும், வலது கையில்ஆயுதம் எனப்படும் வஜ்ரவேலும் தாங்கியுள்ளார்.

பிரார்த்தனை :

தோல்மற்றும் எலும்பு நோய்கள் குணமாவதற்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, முருகனை வழிபடுகின்றனர். இவர் தன்னை வணங்கும் பக்தர்களின் பிறப்பை வேட்டையாடி முக்தி தருபவராக உள்ளார்.