அதிசய அற்புத ஸ்தலங்கள்

393

நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாற்றி தரும் லிங்கம்!

பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் சிவகங்கா என்கிற கிராமம். அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார். ஐந்து அடி உயர, நல்ல பருமனான லிங்கம்.சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம். கவிகங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர்.
ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள். அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார். அந்த நெய் வெண்ணையாக மாறி இருக்கும்.
ஒருமுறை போய் அனுபவித்து பாருங்கள்.

#பெருமாளே சிவனாக மாறும் விந்தை!

திருப்பதி என்று கேட்டவுடன் பெருமாளும், வைஷ்ணவத்தின் உச்ச ஸ்தலம் என்பதும் எல்லோர் எண்ணத்திலும் உதிக்கும். அங்கு பெருமாள் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து, அவருக்கு எளிய வஸ்திரத்தை சார்த்தி, மந்திர ரூபத்தில் அவரை “சங்கர நாராயணர்” ஆகா மாற்றுகிறார்கள். அவருக்கு வில்வ மாலை அணிவிக்கபடுகிறது. பின்னர் அவருக்கு ஒரு தட்டில் விபூதி மேல் கற்பூரம் வைத்து தீபாராதனை காட்டப்படுகிறது. பெருமாள் அந்த இடத்தை விட்டு இறங்கி அலமேலுமங்காபுரத்தில் தாயாரை பார்க்க செல்வதாக ஐதீகம். வெள்ளி கிழமை அன்று பெருமாளின் தரிசனத்துக்கு, அலமேலுமங்காபுரத்தில் கூட்டம் அலை மோதும். மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு திருப்பதியில் சுவாமியை மந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து, நாராயணனாக மாற்றுகிறார்கள். தாயாரை பார்த்து வந்து சந்தோஷத்தில் இருக்கும் பெருமாளிடம் ஆசிர்வாதம் வாங்க சனிக்கிழமை அத்தனை கூட்டம் சேர காரணம், அன்று என்ன வேண்டுதல் வைத்தாலும் உடனே பாஸ் மார்க் தான்.
வியாழன் அன்று போய் பாருங்களேன் .

#கொடி மர நமஸ்கார பூசை ஒரு திருப்புமுனை!

திருசெந்தூரில் தினமும் காலை நடை திறப்பதற்கு முன் முதலில் கொடிமரத்துக்கு தான் பூசை. பின்னர் தான் மூலவர் நடை திறந்து நிர்மால்யம், அபிஷேகம் எல்லாம்.தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமர பூஜையின் பொது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் , நமஸ்காரம் செய்வார்கள். அனுமதி இலவசம். வாழ்க்கையில் நிச்சயமாக திருப்பம் உண்டாகும்.
போய் பாருங்களேன்!

#நெய் உறைந்து மறைந்த லிங்கம்!

எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது. உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும். எத்தனையோ விளக்குகள் ஏற்றி வைத்த சூட்டிலும், வெயில் காலத்தின் சூட்டிலும் அந்த உறைந்த நெய்யானது உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. வடக்கும்நாதர் சிவன் கோவில், திருச்சூர், கேரளா மாநிலம். உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது.
நம்பிக்கையுடன் போய் பாருங்களேன்!

#உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் !

சித்தநாத் ஆஸ்ரமத்தில் உலகிலேயே மிகப்பெரிய பாதரச லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. பாதரசத்தை சுத்தப்படுத்தி கேட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். உண்மையில் இது சித்தர்களுக்கு கை வந்த கலை. சித்த மார்கத்தில் செல்பவர்களுக்கு, இந்த லிங்க தரிசனம், அதன் அருகாமை மிக நல்ல பலன்களை தருகிறது. இந்த ஆஸ்ரமம் புனே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.யோக நிலையில் உயர்பவர்களே, போய் உணர்ந்து பாருங்கள்.

#குளத்தில் மண் கலயத்தில் விபூதி தோன்றுகிறது!

ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம். அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம். மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.சென்று அருள் பெருங்களேன்.