கருட புராணம் – பகுதி 5 பிராயச்சித்தம்

268

ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதே பிராயச்சித்தம் எனப்படும். ஓர் அந்தணனைக் கொல்வதே மிகப் பெரிய பாவம் ஆகும். இந்தப் பாவத்தைச் செய்தவன் இலைகள், சருகுகள், உலர்ந்த புல் போன்றவற்றால் ஒரு குடிசை அமைத்து அதில் பன்னிரண்டு ஆண்டுகள் வசிக்க வேண்டும். (அ) சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும். (அ) மலையிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். தீக்குளித்தல் (அ) நீரில் மூழ்கி இறத்தலும் பிராயச்சித்தமாகும்.

சில சமயம் பிராமணப் பண்டிதர்களுக்கு உணவளித்தல் போன்ற சாதாரண தண்டனைகளும் உண்டு. கங்கை, யமுனை, சரசுவதி சந்திக்கும் திரிவேணி சங்கமம் ஒரு புனித தீர்த்தத் தலமாகும். ஒருவன் மூன்று இரவு, மூன்று பகல் இதில் நீராடி உபவாசம் இருப்பதாலும் மேற்கூரிய பாவத்துக்குப் பரிகாரம் (அ) பிராயச் சித்தம் ஆகும். தங்கத்தைத் திருடும் ஒரு பிராமணனை மன்னன் கதையால் அடித்து, பன்னிரண்டு ஆண்டுகள் குடிசையில் வாழ்வது ஒரு பரிகாரம் ஆகும். ஒரு குடிகாரனுக்கு உரிய பிராயச் சித்தமாக சூடான ஒயினைக் குடித்தலும், அத்துடன் பால், நெய், (அ) கோமியம் குடித்தல். ஒரு புனித தீர்த்தத்தில் ஒருவன் மரணமடைந்தால் அவனுடைய பாவங்களுக்கு அதுவே பரிகாரம் ஆகும். கணவன் செய்த எல்லா பாவங்களும், அவனுடைய மனைவி கணவனுடன் உடன்கட்டை ஏறுவதால் பரிகாரமாகி விடும். மொத்தத்தில் கற்புடைய மனைவி பாவம் எதுவும் செய்யமாட்டாள்.

தொடரும்…

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
🌸🌸🌸
கங்கை தீர்த்தத்தில்
நீராடிய பலன் கிடைக்கும்.

ஒருவர் தன் வாழ்நாளில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவ வினைகளை போக்க ஒரு முறையேனும் காசி சென்று கங்கை தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்று கூறுவார்கள். அதன் மூலமாக அனைத்து பாவங்களும் அகன்று விடும் என்பதும் ஐதீகமாக உள்ளது.

கங்கையில் நீராட முடியாதவர்கள் காலம் முழுவதும், தங்களையும் அறியாமல் செய்த ஒரு பிழையால், அதற்குண்டான பாவ வினைகளை நீக்க வழி உள்ளது. அந்த வழியை கூறும் கதையை இங்கு காணலாம்.

கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்ற அந்தணர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார்.

அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை, ஹரி கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு, பிருஹத்தபா கூறும் கதையை கேட்க கிளம்பிவிடுவார். தனது நூறாண்டு கால வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் ஹரி கதையை கேட்க தவறியதில்லை.

அன்றாட பணிகளை முடிப்பது, ஹரி கதையை கேட்பது, உணவு கேட்டு, தங்க இடம் கேட்டு வரும் அதிதிகளை உபசரிப்பது என்பவையே அவரது தலைசிறந்த பணியாக இருந்தது.

கங்கையில் இருந்து 4 மைல் தூரத்தில் இருந்தாலும் ஒரு நாள் கூட புண்ணியதாமா கங்கையில் நீராடியதில்லை.
அவருக்கு அது பற்றிய சிந்தனையும் இருந்ததில்லை.

ஒரு முறை வெகு தொலைவில் இருந்த இரண்டு யாத்திரிகர்கள், கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும் நினைத்தனர்.

அருகில் இருந்த புண்ணிய தாமாவின் வீட்டிற்கு சென்று, ‘வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா?’ என்று கேட்டனர்.

அவர்கள் இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா, வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக் கூறினார்.
இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர்.

அப்போது அவர்கள், புண்ணியதாமாவிடம், ‘ஐயா! நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கூறமுடியுமா?’ என்று கேட்டனர்.

அதற்கு புண்ணியதாமா, ‘நான் நூறு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4 மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக, பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். உண்மையை கூறவேண்டும் என்றால், இதுவரை நான் ஒருமுறை கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது’ என்றார்.

ஒரு கணம் திகைத்த அந்த அதிதிகள், மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர்.

‘பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா! என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும்.

இவர் என்னடா என்றால், அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது. இவ்வளவு சமீபத்தில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம்’ என்று நினைத்து வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர்.

அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணிய தாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது.

ஆனால் அந்த இரு யாத்திரிகர்களும், ‘கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும்’ என்று தங்களுக்குள் பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர்.

கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது.

அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம் வரை சென்று விட்டனர் அவர்கள்.
ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை.

‘எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால் கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே!’ என்று புலம்பத் தொடங்கி விட்டனர்.

பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து, ‘தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும்’ என்று மனமுருக வேண்டினர்.

அப்போது அவர்கள் முன் தோன்றிய கங்கா தேவி, ‘என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள்.

மிகவும் பாக்கியசாலியும், புண்ணியவானுமான, புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள்.

ஹரி கதை எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன.

அதே போல் ஹரி கதையை தொடர்ந்து கேட்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர் ஆகிறார்கள்.

அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன்.

நீங்களானால் அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள்.
அதுவரை உங்களால் கங்கையில் நீராட முடியாது’ என்று கூறி மறைந்து விட்டாள்.

தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக, புண்ணியதாமாவிடம் சென்று அவரது காலில் விழுந்து தங்கள் தவறை பொறுத்துக் கொள்ளும் படி கேட்டனர்.

அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா, இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை கேட்கும்படியாக செய்தார்.

பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர்.

கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாதது.

ஆனால் ஹரி கதை கேட்பது, படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்து முடிக்கக் கூடிய விஷயம்தான்.

ஹரி கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும்.

அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும்.

ஆயிரம் பிரம்மஹத்தி தோஷத்திற்கும் கூட பிராயச்சித்தம் என்பது உண்டு. ஆனால் பகவானின் பக்தனை நிந்திப்பவனுக்கு எந்த பிராயச்சித்தமும் இல்லை என்பதை உணருங்கள்.

அடுத்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறக்க போகிறீர்கள்? கருடபுராணம் சொல்லும் உண்மையை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?
🌸🌸
போன ஜென்மத்தில் என்னதான் பாவம் செய்தேனோ? இந்த பிறவியில் மனிதனாக பிறந்து இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன்!.’ இதை கூறாத மனிதர்களே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மனிதப் பிறவி எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. முதலில் தாவரமாக பிறந்து, இரண்டாவதாக நீர்வாழ் உயிரின பிறவி எடுத்து, மூன்றாவதாக ஊர்வன இனத்தில் பிறந்து, நான்காவதாக பறவையாக பிறந்து, ஐந்தாவது ஜென்மத்தில் விலங்காக பிறந்து, இப்படியாக ஐந்து பிறவிகளை எடுத்து பிறருக்கு உதவி செய்ததன் மூலம் தான் நம்மால் மனிதப் பிறவியை எடுக்க முடியும் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனிதப் பிறவி எடுப்பது என்பதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கின்றது என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இப்பேர்ப்பட்ட பிறவிதான் மனிதப்பிறவி! மனிதப் பிறவியில் நாம் செய்யும் பாவங்கள் கணக்கிடப்பட்டு தான், அடுத்த பிறவியானது நமக்கு தரப்படுகிறது என்று கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பிறவியில் என்னென்ன பாவங்கள் செய்தால், அடுத்த பிறவியில் நாம் எப்படி பிறப்போம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புழுக்கள் நெளியும் அசுத்தமான இடங்களில் வசிப்பவர்கள், போன ஜென்மத்தில் அடுத்தவர்கள் பொருளை திருடியவர்களாக இருந்திருப்பார்கள்.

துர்நாற்றம் வீசும் வாய் உடையவர்கள், வாயில் புழுக்கள் உருவாகும் பிரச்சனைகளை கொண்டவர்கள், போன ஜென்மத்தில் மதுபானம் விற்றவர்கள், குடி போதைக்கு அடிமையாக இருந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

போன ஜென்மத்தில் கொலை செய்தவன், இந்த ஜென்மத்தில் குஷ்டரோகியுக பிறந்திருப்பான். அது மட்டுமல்லாமல் உடலில் கெட்ட நீர் சேர்ந்து துர்நாற்றம் வீசும். இந்த ஜென்மத்தில், கொலை செய்தால் அடுத்த ஜென்மத்தில் குஷ்டரோகியாக பிறப்பது கட்டாயம் நடக்கும்.

பசுவை கஷ்டப்படுத்தியவர்கள், பிறர் வீட்டிற்கு தீ வைத்தவர்கள் இந்த ஜென்மத்தில் ஊமையாகவும், குஷ்டரோகியாகவும் பிறந்திருப்பார்கள்.

போன ஜென்மத்தில் அதிகமாக பொய் பேசி அடுத்தவர்களை ஏமாற்றி இருந்தால், இந்த ஜென்மத்தில் ஊமையாக பிறந்து இருப்பார்கள்.

போன ஜென்மத்தில் குருவுக்கு துரோகம் செய்திருந்தால், இந்த ஜென்மத்தில் விகாரமான தோற்றத்தோடு பிறவி எடுத்திருப்பார்கள்.

ஒருமுறைகூட இறை வழிபாடு செய்யாதவர்கள், புனித தீர்த்தத்தில் நீராடமல் இருப்பவர், இப்படிப்பட்டவர்கள் ஆளில்லா காட்டில் குரங்காக பிறவி எடுப்பார்கள்.

பல புரோகிதர்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில், ஒரு புரோகிதர் மட்டும் தவறு செய்தால் அந்தப் பாவம் அவரை மட்டும் போய் சேராது. அந்த இடத்தில் இருக்கும் அனைத்து புரோகிதர்களும் அடுத்த ஜென்மத்தில் கழுதையாக பிறவி எடுப்பார்கள்.

ஒழுக்கம் இல்லாதவன், வேத சாஸ்திரத்தை நன்கு அறிந்து, புரோகிதராக இருந்தால் அடுத்த ஜென்மத்தில் அவர் கட்டாயம் பன்றி பிறவி எடுப்பார்.

இந்தப் பிறவியில் தரித்திர நிலைமையோடு வாழும் ஒருவர், போன ஜென்மத்தில் கஞ்சனாக இருந்திருப்பார்.

தங்கத்தை திருடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் புழுக்கள் நிறைந்த நரகத்தில் வேலை செய்வான்.

பிறன் மனைவியின் மீது ஆசைப்படுபவன் அடுத்த ஜென்மத்தில் சண்டாளனாக பிறவி எடுப்பான்.

பசி என்று வந்தவருக்கு சாப்பாடு இல்லை என்று சொல்லி துரத்தி அடித்தால் அடுத்த ஜென்மத்தில் அவருக்கு புத்திரபாக்கியம் கிடைக்காது.

கோவில் சொத்தை அபகரித்நவர்கள், பொய்க்கணக்கு எழுதுபவர்கள் எல்லாம் செவிட்டு மாடாகவும், குருட்டு மாடாகவும் பிறவி எடுப்பார்கள்.

அடுத்தவர்களை துன்புறுத்தி பணம் சேர்ப்பவன், அடுத்த பிறவியில் பூனையாக பிறப்பான்.

பசுமையாக இருக்கும் மரம், செடி, கொடிகளை வீழ்த்தி எரித்தவன் அடுத்த ஜென்மத்தில் மின்மினிப்பூச்சியாக பிறவி எடுப்பான்.

வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளியை இழிவாக நடத்தி பழைய சாப்பாடு போட்டு அவ மதிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் கருங்குரங்காக பிறவி எடுப்பான்.

அடுத்தவர்களுக்கு பயன்தரக்கூடிய பூ காய் கனி பழம் நிறைந்த மரத்தை எவனொருவன் வெட்டுகின்றானோ, அவன் அடுத்த ஜென்மத்தில் எதற்கும் உபயோகம் இல்லாதவனாக பிறவி எடுப்பான்.

நீதிக்குப் புறம்பாக நடந்து கொள்பவன், தவறாக தீர்ப்பு சொல்பவன் அடுத்த ஜென்மத்தில் கோட்டான் பிறவி எடுப்பான்.

கோள் சொல்லுபவர்கள் பல்லியாகவும், தவளையாகவும் பிறவி எடுக்கிறார்கள்.

உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காத முதலாளிகள், அட்டைபூச்சி ஆக அடுத்த ஜென்மத்தில் பிறப்பார்கள்.

அதிகப்படியான லஞ்சத்தை வாங்கிக்கொண்டு, அநியாயத்திற்கு துணை போகும் நபர்கள் அடுத்த ஜென்மத்தில் ஈ கொசு மூட்டைப்பூச்சி ஆக பிறவி எடுப்பார்கள். இவையெல்லாம் தவறு செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள் தான்.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நாராயணன், கருடனுக்கு கூறியதாக கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஜென்மத்தில் இந்த தவறை செய்தால், அடுத்த ஜென்மத்தில் மேல் குறிப்பிட்டுள்ள தண்டனைகள் கட்டாயம் நமக்கு கிடைக்கும். இந்த ஜென்மத்தில் கொசு, புழு, பூச்சி, பல்லி, குரங்கு, முதலை, பன்றி இப்படியாக பிறந்திருக்கும் ஒவ்வொரு உயிரினமும் போன ஜென்ம மனிதப் பிறவியில் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்தவர்கள்தான் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். இதையெல்லாம் படிக்கும்போது முடிந்தவரை தவறுகள் செய்யாமல் இருப்பது தான் நமக்கு நல்லது. நீங்கள் அறிந்தும், அறியாமலும் தவறுகள் செய்திருந்தால் கூட அதற்கான பிராயச்சித்தத்தை உடனே தேடிக் கொள்ளுங்கள். சில தவறுகளுக்கு பிராயச்சித்தம் கூட தேட முடியாது. தவறு செய்யாமல் வாழ்வதே உத்தமம். அடுத்த ஜென்மத்தில் மேற்குறிப்பிட்டுள்ள இப்படி ஒரு பிறவி எடுக்க யாரும் விரும்பமாட்டார்கள். சொர்க்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா? அது உங்கள் கையில் தான் உள்ளது…
🌸🌸🌸
மஹா விஷ்ணுவிற்கு வாகனமாகவும் கொடியாகவும் விளங்குவது கருடன். புள்ளரையன், பக்ஷி ராஜன், நாகப் பகையோன், சுபர்ணன் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் திருவைகுந்தத்தில் எப்போதும் எம்பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஒரு நித்ய சூரி. எம்பெருமானை தாங்குவதில் முதன்மையானாவ்ர் எனவே வைணவ சம்பிரதாயத்தில் இவர் பெரிய திருவடி என்றழைக்கப்படுகின்றார். மனித முகத்துடன், பெரிய மீசையுடனும், கருடன் போன்ற அலகுடனும், உடல் முழுவதும் எட்டு நாகங்கள் ஆபரணமாக தரித்து , ஒரு காலை முழங்காலிட்டு மடித்தும் மற்றோரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் , இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களைத் தாங்குவதற்காக நீட்டி பெரிய இறக்கைகளுடன் கருடாழ்வாரின் அழகே ஒரு அழகு.

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.

பெரியாழ்வார் பாசுரம் ( கருடன் மற்றும் திருவரங்கம்)

செருவாளும்புள்ளானன்மண்ணாளன் செருசெய்யும்நாந்தகமென்னும்

ஒருவாளன் மறையாளனோடாத படையாளன் விழுக்கையாளன்

இரவாளன்பகலாளனென்னையாளன் ஏழுலகப்பெரும் புரவாளன்

திருவாளனினிதாகத் திருக்கண்கள் வளர்கின்றதிருவரங்கமே.

தனியொருவராகப் போர் செய்யும்
ஆற்றல் உடைய புள்ளினத் தலைவனான கருடாழ்வாரை வாகனமாகக் கொண்டவனும்,இவ்வுலகை நடத்தி வருபவனும், நாந்தகம் என்னும் வலிமையுடைய வாளைக் கொண்டு தீயவர்களை அழிப்பவனும், வேதங்களை ஆளுகின்றவனும்,என்றும் புறமுதுகைக் காட்டாத போர்ப்படையை வைத்துள்ளவனும் ,
அடியார்களுக்கு அள்ளித்தரும் ஆழகிய திருக்கைகளை உடையவனும், இரவுபகல் ஆகியவற்றை தோற்றுவிப்பவனும், ஏழுலகை மட்டுமின்றி என்னையும் ஆள்கின்றவனும்,திருமகளைத் தன்னகத்தே கொண்டுள்ளவனுமான
பரந்தாமன் ஆனந்த மயமாக யோகநித்திரை செய்யும் இடம்
திருவரங்கமாகும்…