Saturday, October 28, 2023
HomeAalayangalஅழகுநாச்சியம்மன் கோவில்- திருநெல்வேலி

அழகுநாச்சியம்மன் கோவில்- திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன். நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழும் குற்றாலம், தென்காசிக்கு இடையில் அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். மூன்று போக நெல் விளையும் முத்தான பூமி.

அங்கு தனது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த தென்னந்தோப்பின் ஒரு பகுதியை வெட்டி, திருத்தி அதிலும் பயிர் வைக்க எண்ணினார் குப்பாண்டி. அதன் படி ஐப்பசி மாதம் வளர்பிறையில் அந்த நிலத்தில் ஏர் கட்டினார். அந்த நிலத்தின் தென்பகுதியில் ஏர் வரும் போது கலப்பையின் கொழுவில் ரத்தம் படிந்திருந்தது. அதைக்கண்ட குப்பாண்டி பாம்பு ஏதாச்சும் கொழுவில் மாட்டி இறந்து விட்டதோ, என்று வருந்தினார்.

அந்த நேரம் கஞ்சி கலையத்தை தலையில் தாங்கி, அவரது மனைவி பொன்னுதாயி அவ்விடம் வந்தாள்.வயலில் கலப்பை முன் நின்று பூமி நோக்கி, தனது கணவன் இரு கரம் கூப்பி வணங்கி நிற்பதை கண்டாள். கவுளை கண் மூடி கை தொழும் நேரம், கஞ்சி கலயத்தை இறக்கி வைக்க, கணவனை அழைப்பது நல்லதல்ல என்று மனதிற்குள் நினைத்தாள்.

கண்ணை மூடிய குப்பாண்டி ‘‘என்ன படைச்ச சிவனே, அய்யா, நான் தெரிஞ்சும் தெரியாம குத்தம் குறை செஞ்சிருந்தா என்ன மன்னிச்சிடப்பா. என்று வேண்டிக்கொண்டு நாலா புறமும் பார்த்தவாறு தன்னை ஒரு சுற்று சுற்றினார். வடக்கு திசையில் வயல் வரப்பில் தனது மனைவி பொன்னுத்தாயி கலயத்துடன் நிற்பதை கண்டார். ‘‘நீ எப்போம் வந்த, என்று கேட்க, அதற்கு பொன்னுத்தாயி, நீங்க நிலம் பார்த்து சாமி கும்பிடும்போதே வந்திட்டேன். என்று பேசிய படியே கலயத்தை இறக்கும் கணவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

கொத்தமல்லி துவையல் கூட்டுடன் கஞ்சி குடித்து முடித்து ஏப்பம் விட்ட குப்பாண்டி, நீ வீட்டுக்கு போ, என்றதும். பொன்னுத்தாயி, கணவனிடம் கேட்டாள். கலப்பை கட்டுமுன்னே சாமி கும்பிடுவீக, இது என்ன புதுப்பழக்கம், 3 உழவு உழுத பிறகு சாமி கும்பிடுதீக என்ற மனைவியின் கேள்விக்கு பதிலுரைத்தார் குப்பாண்டி.

அது ஒண்ணுமில்ல, கலப்பை கொழுவில, பாம்பு ஏதே மாட்டி செத்திருக்கும் போலுக்கு, கொழுவில ரத்தகறை படிஞ்சிருக்கு. அதான் நல்ல காரியம் செய்யுற சமயம் இப்படி ஆகுதே. அதுவும் நல்ல பாம்பா இருந்திற பிடாதே, அதான் சாமிய கும்பிட்டேன்.

அப்படியா என்ற பொன்னுதாயி, பதட்டத்துடன் முதல்ல கலப்பை தள்ளி வச்சிட்டு, நீள கம்பு எடுத்து தட்டி, தட்டிப்பாருங்க, ஏன்னா, துண்டுப்பட்ட பாம்புக்கு தான் வீரியம் அதிகம் இருக்கும். கடிச்சி, கிடிச்சி போடாமங்க, ஊரு கண்ணு வேற நமக்கு இருக்கு, அதான் இப்படி யெல்லாம் நடக்குதுபோல என்றாள். மனைவியின் சொல்லைக்கேட்ட குப்பாண்டி தென்னந்தோப்பில் இருந்து நீள கம்பு ஒன்றை கொண்டு வந்து ரத்தம் படிந்திருந்த இடத்தை தட்டுகிறார். அங்கே ஒரு கல் ஒன்று தட்டுப்படுகிறது. உடனே அதை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. அவரது மனைவி பொன்னுத்தாயி அருகேயுள்ள வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த நபர்களை அழைத்தாள்.

வந்த நான்கு பேரும் குப்பாண்டியும் சேர்ந்து ஐந்து பேராக அந்த கல்லை சுற்றியிருந்த மண்ணை அப்புறப்படுத்தி வெளியே எடுத்தனர். அது அழகான ஒரு பெண் அமர்ந்த நிலையில் இருந்த சிலை. ஒரு கை யோகமுத்திரையுடன் இருந்ததால் அது அம்மன் சிலை என்று முடிவு செய்தனர். அம்மன் சிலையின் வலது தோளில் வெட்டுக்காயம் இருந்தது. அந்த காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருந்தது.

வாய்க்கால் தண்ணீர் கொண்டு சிலையை சுத்தம் செய்து தோட்டத்திற்கு கொண்டு வந்து மர நிழலில் வைத்தனர். ஆனாலும் தொடர்ந்து ரத்தம் வந்து
கொண்டிருந்தது. குப்பாண்டி மனம் உருகி வேண்டினார். அப்போது ஒரு அசிரீரி கேட்டது. எனக்கு இந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள் எனது பெயர் அழகு நாச்சியார் என்றும் கிழக்கு திசை நோக்கி வைக்காதே, எனக்கு பிடித்த வட திசையை நோக்கி வைத்து பூஜை செய் என்றது.

உடனே அம்மன் சிலையை அங்கிருந்த புளியமரத்தின் அடியில் வடக்கு நோக்கி வைத்தனர். அருகே இருந்த ஊர் பிரமுகர் ஒருவரின் வாழை தோட்டத்திலிருந்து பழங்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு படைத்து பூஜை நடந்தது. சுற்றியிருந்தவர்கள் கை கூப்பி வணங்கினர். பூஜை முடிந்த மறுநிமிடம் சிலையிலிருந்து நிற்காமல் வந்து கொண்டிருந்த ரத்தம் நின்றது. மனமகிழ்ந்த விவசாயிகள். வயல் நடவு மற்றும் விதைப்பு நேரங்களிலும், அறுவடை நாட்களிலும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.

பின்னர் ஒரு நாள் வழிபடும் அன்பர்களின் கனவில் தோன்றிய அம்மன், நான் மழையில் நனைந்து வெயிலில் காய்கிறேன். அது மட்டுமன்றி தனித்தனியாக வந்து பூஜை செய்து என்னை வணங்கி செல்லும் நீங்கள் ஒரு சேர நின்று பூஜித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன் என்று கூறினாள். அதன் பின்னர் ஊரார்கள் ஒன்று கூடி அம்மனுக்கு கோயில் எழுப்ப முடிவு செய்தனர். அதன் பின்னர் நாட்கள் நகர்ந்தது. அவர்கள் எண்ணியது போல் கோயில் எழுப்பி கொடைவிழா நடத்தப்பட்டது.

அழகு நாச்சியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளார். அம்மனுக்கு கலப்பைக் கொழு பட்டு காயம் பட்டதை நினைவு கூறும் விதமாக, கொடை விழா நடைபெறும்போது அம்மனுக்கு அலங்காரம் செய்கையில் அம்மன் சிலையின் தோள் பகுதியிலிருந்து ரத்தம் கொட்டுவது போன்று குங்குமம் மற்றும் செம்மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

இப்போதும் அப்பகுதியில் விவசாய பணிகள் தொடங்கும்போது முதல் உழவு செய்யும் முன் பணிகள் சிறப்புற அமைய வேண்டும் என்று அழகுநாச்சியம்மனை வேண்டி பூஜை செய்த பின்னரே உழவு பணியை தொடங்குகின்றனர்.

அழகுநாச்சியம்மன் கோயில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணி கிராமத்தில் அமைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 5 =

Most Popular