செங்காநத்தம்மலை காலபைரவர் கோயில்!

47

செங்காநத்தம்மலை காலபைரவர் கோயில்!

வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தை அடுத்துள்ள செங்காநத்தம் மலையில் காலபைரவர் கோயில் உள்ளது.

அந்தகாசுரன் என்ற அசுரனை அழிக்க சிவன் எடுத்த அவதாரங்களில் ஒன்றுதான் காலபைரவா் அவதாரம். உக்கிர வடிவங்களில் முதன்மையானது பைரவா் எனும் வயிரவா் வடிவம் ஆகும். வேலூரை அடுத்த செங்காநத்தம் மலையில் உள்ள காலபைரவர் காசிக்கு அடுத்தபடியாக வடக்கு நோக்கி பிரவேசித்து, பத்து கைகளுடன் விளங்குகிறார்.

சுயம்புவாக

முன்னோர்கள் காலத்தில் நிலத்தை செம்மைப்படுத்தும்போது சுயம்புவாக கிடைத்த சிலையாகும். வேலூரின் வடகிழக்கில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை நோக்கி இருக்கும் வகையில் செங்காநத்தம் காலபைரவா் சிலையை அப்போது வேலூரை ஆட்சி செய்த மன்னர்கல் நிறுவினர்.

காலபைரவரை செங்காநத்தம் ஊரை சோ்ந்த தர்மகர்த்தாக்கள் வழிவழியாக பூஜைகள் செய்து பராமரித்து வருகின்றனா். காலபைரவா் செங்காநத்தம், ரங்காபுரம் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் திகழ்கிறார். காலபைரவா் சிலை மற்றும் அதன் வாகனம் (நாய்) வெட்டவெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி கம்பீரத்துடன் காட்சியளித்துள்ளது.

இந்த பைரவா் சிலைக்கு பின்னால் அழிஞ்சில் மரம் ஒன்று தானாகவே உருவாகி பிரமாண்டமாக வளா்ந்துள்ளது. மரத்தின் அடியில் பத்து கைகளுடன் மூன்றரை அடி உயரத்தில் அருள்பாலிக்கின்றார். அத்துடன் தனது வாகனமான நாய்களுடன் பக்தா்களுக்கு காட்சி தருகிறார்.

வேண்டுதல் குறித்த சம்பவங்கள்:

முதலில் காலபைரவா் சிலையில் ஒரு கண் மூடிய நிலையில் இருந்துள்ளது. இதை ஒரு சிற்பியை வைத்து சரி செய்தபோது திடீரென அவர் மனநிலை பாதிக்கப் பட்டுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் காலபைரவா் கோயிலுக்கு அடிக்கடி வந்து அபிஷேகம், அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்து வழிபட்டதை தொடர்ந்து சிற்பி பழைய நிலைக்கு திரும்பினார்.

ஒரு செல்வந்தா் தன்னுடைய 3 மகள்களுக்கும் திருமணமாகாமல் வயதாகி கொண்டு செல்கிறது என வருந்தியபோது அவரது கனவில் காலபைரவா் தோன்றியதாகவும், பின்னா் அந்த பக்தா் கோவிலுக்கு தினசரி வந்து காலபைரவரை வேண்டி தீபம் ஏற்றி வழிபட்டதை தொடர்ந்து ஒரே மாதத்தில் 3 மகள்களுக்கும் நல்ல வரன் கிடைத்து திருமணமானதாகவும் கூறப்படுகிறது.

இயற்கையாக கிடைக்கும் திருநீறு:

இங்கு இயற்கையாக மண்ணில் இருந்து தோன்றிய திருநீறு சாம்பல் நிறத்தில் மணமாகவும், சுவையாகவும் கிடைக்கிறது. பைரவரை தரிசிக்கும் பக்தா்கள் இந்த இயற்கை திருநீறை நெற்றியில் பூசுவதுடன் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கின்றனர்.

பூஜைகள்:

இங்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வளா்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி நாட்களில் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

சனிக்கிழமையன்று கால பைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். சனிபகவானுக்கு பைரவா்தான் குரு. இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அா்த்தாஷ்டம சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். செவ்வாய்க்கிழமைகளில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாகும். இத்தனை சிறப்புமிக்க பைரவரை 12 ராசிக்காரர்களும் வழிபட்டால் சிறந்த பலனை அடையலாம்.

ஒவ்வொரு அஷ்டமி பூஜையின் போதும் செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகு கால பூஜையின்போது நாய்கள் ஒன்று சேர்ந்து மூலவர் முன்பு வந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு வணங்குகின்றன.