சென்னை நகரில் அம்மன்கோவில்கள் பல வீதிகளில் அமைந்துள்ளன. அதேபோல் விநாயகர் கோவில்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பிரச்சித்திப் பெற்ற சில விநாயகர் கோவில்ககளை இங்கே காணலாம்.
நின்ற நிலையில் விநாயகர்
பெரும்பாலும் பிள்ளையார் அமர்ந்த நிலையில்தான் இருப்பார். நின்ற நிலையில் உள்ள விநாயகர் அபூர்வமாகத்தான். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை குளக்கரைத் தெருவில் சித்தி&புத்தியுடன் வீற்றிருக்கும் விநாயகர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
குரு-சுக்கிரனுடன் விநாயகர்
வடக்கு சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே இருக்கும் கோவிலில் விநாயகர் குரு மற்றும் சுக்கிரனுடன் உள்ளார். வளர்பிறை வெள்ளிக்கிழமைக தொடங்கி தொடர்ந்து 5 வாரங்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த விநாயகரை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். குருவும் சுக்கிரனும் இங்கு இருப்பதால் அவர்களுக்கு உரிய பலன்களும் கிடைக்கும்.
கூத்தாடும் விநாயகர்
சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் கூத்தாடும் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு விநாயகர் அமர்ந்த கோலத்தில் இருந்தாலும் சுவரில் நர்த்தனமாடும் விநாயகர் சிலை உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சென்று வந்தால் ஆனந்தமயமான வாழ்க்கை அமையும்.
பதவி உயர்வு தரும் பிள்ளையார்
மாம்பலம் நல்லான்குப்பத்தில் காசி செல்வ விநாயகர் கோவில் உள்ளது. பழைமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். பதவி உயர்வு கிடைக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிட்டும். தீராத நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.
சித்தி-புத்தி விநாயகர்
பாண்டி பஜார் தலைமை தபால் நிலையம் அருகே ராஜா தெருவில் அகத்தியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்தி, புத்தியுடன் விநாயகர் உள்ளார். இவருக்கு சித்தி&புத்தி சமேத நித்யானந்த கணபதி என்று பெயர்.
பத்து தலை பிள்ளையார்
சென்னை தியாராய நகர் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் உள்ள விநாயகர் பத்துதலையுடன் இருக்கிறார். இவர் சித்தி&புத்தியுடன் அருள்பாலிக்கிறார். மேலும் இவர் வலஞ்சுழி பிள்ளையார் என்பது தனிச் சிறப்பு.
சட்டக்கல்லூரி விநாயகர்
சென்னை சட்டக்கல்லூரி அருகே பிளாட்பாரத்தில் சித்தி&புத்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1919&ம் ஆண்டு சட்டக்கல்லூரி நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்தக் கோவில் அருகே இடம் பெயர்ந்து வைக்கப்பட்டு உள்ளது.
பாரதி வழிபட்ட பிள்ளையார்
திருவல்லிக்கேணி பெரியத் தெருவில் அரசடி விநாயகர் கோவில் உள்ளது. விமானத்துடன் உள்ள இந்தக் கோவிலில் தற்போது இந்த கோவிலில் அரசமரம் இல்லை. இந்த விநாயகரை மகாகவி பாரதியார் சென்னையில் இருந்தபோது வணங்கிச் சென்றார்.
பணம் தரும் அருகம்புல்
மயிலாப்பூர் லஸ் பஸ் நிறுத்தம் அருகே நவசக்தி பிள்ளையார் கோவில் உள்ளது. அந்த பகுதி மக்கள் லஸ் பிள்ளையார் என்றே அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் அரசமரத்தடியில் இருந்த இந்த விநாயகருக்கு 1967ம் ஆண்டு கோவில் கட்டப்பட்டது. இங்கு வணங்கிய பிறகு பக்தர்கள்கு அருகம்புல் கொடுக்கப்படுகிறது. அதை பணப்பெட்டியில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
ஊர்விட்டு ஊரு வந்த பிள்ளையார்
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் செங்கழுநீர் பிள்ளையார் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் அகே செங்கழுநீர் ஓடையில் இருந்து எடுக்கப்பட்ட பிள்ளையாரை ஒருவர் இங்கு கொண்டு வந்து வைத்துள்ளார். பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் இந்த விநாயகரை வணங்கிவிட்டு செல்கின்றனர்.
இரட்டை விநாயகர்
மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோவிலில் வடக்கு மாடவீதி அருகே சித்தி&புத்தி விநாயகர் உள்ளார். இந்த விநாயகர் அருகே செல்வ விநாயகரும் உள்ளார். இவர்தான் இங்கு முதலில் வைக்கப்பட்டார். அதன்பிறகே சித்தி&புத்தி விநாயகர் அமைக்கப்பட்டு உள்ளார். இரு விநாயகரும் ஒரே கருவறையில் இருப்பது தனிச்சிறப்பு. இவர்களை வழிபட்டால் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
காவல் தெய்வம்
மயிலாப்பூர் வடப்பகுதியில் வடகூர் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இவர் இந்த பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறார். இதேபோல் மயிலாப்பூர் தென்பகுதியில் தென்கூர் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இவரும் இந்த பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறார். குன்னக்குடி வைத்தியநாதன் இங்கு கச்சேரி செய்த பிறகுதான் புகழ் பெற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
அடையாறு மத்திய கைலாஸ் கோவிலில் ஆனந்த விநாயகர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் ஆனந்த வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. இந்த கோவிலில் விநாயகர், ஆஞ்சநேயர் இணைந்த ஆத்யந்தபிரபு உள்ளார்.
சங்கு-சக்கரத்துடன் விநாயகர்
மகாவிஷ்ணுதான் சங்கு சக்கரத்துடன் இருப்பார். ஆனால் பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரில் சங்கு&சக்கரத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். மேலும் அவருக்கு ஆதிசேஷன் குடை பிடித்த நிலையில் உள்ளார். இது தவிர இந்த விநாயகர் தன்வந்திரிபோல் அமிர்தகலசத்தையும் கையில் ஏந்தி உள்ளார். இந்த வித்தியாசமான விநாயகரை வணங்கினால் நோய் குணமாகும். சகல செல்வங்களும் கிடைக்கும்.
