ராமானுஜர் துறவியானது எப்படி?

493

ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ராமானுஜரின் மனைவி பெ ய ர் தஞ்சம்மாள். ராமானுஜர் சாதி வேறுபாடு பார்க்காமல் சமதர்ம நிலையில் வாழ்ந்தவர். ஆனால் அவரது மனைவி அப்படி அல்ல.
ஒரு நாள் வேலைக்காரன் ஒருவன் ராமானுஜருக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தான். அவன் மெலிந்து காணப்பட்டான். மேலும் பசியோடு இருந்ததும் தெரியவந்தது. அவனுக்கு நேற்றைய பழைய சோறு இருந்தால் கொடுக்கும்படி தன்னுடைய மனைவியிடம் கூறினார். அதற்கு தஞ்சம்மாள் பழையது ஏதும் இல்லை என்றும் இந்த காலையில் அவனுக்கு நான் எங்கிருந்து சோறு போடுவேன் என்றும் கூறிவிட்டாள். மனைவி குளிக்கப்போனதும் ராமானுஜர் சமையல் அறைக்குச் சென்று பார்த்தார். அங்கே நிறைய பழையது இருந்தது. அவற்றை வேலையாளிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டு முடிந்த பின்னர் எண்ணெய் தேய்க்கலாம் என்றும் கூறினார்.

ஒருமுறை ராமானுஜர், திருக்கச்சி நம்பியை சந்தித்து தம்மை சீடனாக்கி கொள்ள வேண்டும் என்று வேண்டினார். வேளாளர் குலத்தில் பிறந்த தன்னால் பிராமணராக ராமானுஜருக்கு உபதேசிக்க இயலாது என்றும் அவருடைய வணக்கத்தை ஏற்றுக் கொள்ளும் அருகதை தனக்கு இல்லை என்றும் கூறினார். ஆனால் ராமானுஜரோ பெருமாளின் அடியவர்களுக்கு சாதி வேறுபாடு எல்லாம் கிடையாது என்று அவரை தன்வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட வேண்டும் என்று அழைத்தார். ராமானுஜருக்கு திருக்கச்சி நம்பியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர் உண்ட உணவின் மீதியை தான் சாப்பிட வேண்டும் என்பதுதான் ஆசை. ராமானுஜரின் அழைப்பையும் நோக்கத்தையும் புரிந்து கொண்ட திருக்கச்சி நம்பி அவரிடம் சமையல் தயார் ஆனதும் சாப்பிட வருகிறேன் என்றார். ராமானுஜர் உடனே தன் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் சமைத்து வைக்கும்படி கூறினார். தஞ்சம்மாளும் சமைத்து வைத்தாள். ராமானுஜர் திருக்கச்சி நம்பியை அழைக்க புறப்பட்டார். ஆனால் திருக்கச்சிநம்பியோ வேறு வழியாக ராமானுஜரின் வீட்டிற்கு வந்து அவரது மனைவியிடம் கோவிலுக்கு அவசரமாக செல்ல வேண்டும் எனவே சீக்கிரம் உணவு தாருங்கள் என்றார். தஞ்சம்மாளும் அவசர அவசரமாக இலையில் உணவு பரிமாறினார். திருக்கச்சிநம்பி உணவை சாப்பிட்டு இலையை அவரே எடுத்து வெளியே வீசினார். பின்னர் சாப்பிட்ட இடத்தை அவரே சாணத்தால் மெழுகிவிட்டு சென்று விட்டார். தஞ்சம்மாள் மீதி இருந்த உணவை வேலைக்காரிக்கு கொடுத்துவிட்டு சமையல் பாத்திரங்களை கழுவினாள். பின்னர் குளித்துவிட்டு, தன் கணவருக்காக புதிதாக சமைத்து வைத்தாள்.

வெளியில் சென்ற ராமானுஜர் வீட்டுக்கு வந்தார். அங்கே மனைவி தனக்காக புதிதாக சமைப்பதை கண்டார். தெய்வத்திற்கு ஒப்பான திருக்கச்சி நம்பியை சாதியை காரணம் காட்டி வேறுபடுத்தி விட்டாளே என்று தன் மனைவி மீது ஆத்திரம் அடைந்தார். பின்னர் மனம் வெறுத்தவரான அவர் வீட்டைவிட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.

ராமானுஜருக்கு மொத்தம் 5 பேர் குருவாக இருந்தனர். அந்த குருமார்களுக்கு குருவாக விளங்கியவர் ஆளவந்தார். ஆளவந்தார் மறைந்தபின்னர் ராமானுஜரை ஆச்சாரியாராக்க பெரியநம்பி விரும்பினார். இதற்காக காஞ்சிபுரத்தில் இருந்த ராமானுஜரின் வீட்டிற்கு பெரிய நம்பி வந்தார். அவருக்கு தனது வீட்டின் ஒரு பகுதியை கொடுத்து தங்க வைத்தார். மேலும் அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து வந்தார். அவரிடம் ராமானுஜர் திவ்யப்பிரபந்தங்களை பயின்றார்.

இப்படி சுமார் ஆறு மாதங்கள் கடந்தன. ஒருநாள் ராமானுஜரும் பெரிய நம்பியும் வெளியே சென்றிருந்தனர். அப்போது ராமானுஜரின் மனைவி தஞ்சம்மாள் தண்ணீர் எடுக்க கிணற்றுக்குச் சென்றாள். அதே நேரம் பெரிய நம்பியின் மனைவியும் தண்ணீர் எடுக்க அதே கிணற்றிற்கு சென்றிருந்தாள். இருவரும் ஒரே நேரத்தில் தண்ணீர் எடுக்கும்போது பெரிய நம்பியின் மனைவி குடத்தில் உள்ள தண்ணீர் துளிகள் தஞ்சம்மாள் குடத்தில் விழுந்தது. இதனால் கோபமுற்ற தஞ்சம்மாள் நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவள். உன் குடத்தில் உள்ள தண்ணீரை நான் எப்படி பயன்படுத்த முடியும். என் கணவரால் ஆச்சாரத்தை எல்லாம் இழந்து வாழ்கிறேன். என்று கூறினாள். இதனால் பெரியநம்பியின் மனைவி மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டாள். ஆனாலும் நடந்த சம்பவத்தை தன் கணவரிடம் கூறி அழுதாள். இந்த சம்பவம் பெரியநம்பியையும் வருத்தமடைய செய்தது. ராமானுஜர் வெளியே சென்றிருந்தபோது பெரியநம்பி தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சென்றுவிட்டார்.

வெளியே சென்றிருந்த ராமானுஜர், பெரியநம்பிக்காக பழங்கள் வாங்கி வந்தார். வந்த பின்னர்தான் அவர் தன்னுடைய மனைவியுடன் வெளியேறியது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமானுஜர் தன் மனைவியிடம் உன்னால்தான் என் ஆச்சாரியார் வெளியே சென்றுவிட்டார். நீ ஒரு பேய். உன் முகத்தில் விழிப்பதே பாவம். எ ன கூறிவிட்டு கோவிலுக்குச் சென்றுவிட்டார்.

கணவர் கோபத்தில் சென்றது தஞ்சம்மாளை மேலும் ஆத்திரமூட்டியது. அந்த நேரத்தில் பிச்சைக் கேட்டு வந்த பிராமணரையும் தஞ்சம்மாள் கோபத்தில் ஏதேதோ கூறி துர்த்திவிட்டாள்.

பசியோடு வந்தவரை தன் மனைவி துரத்திவிட்டாளே என்பதை அறிந்த ராமானுஜர் மேலும் வருத்தம் அடைந்தார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தராய், பிச்சைக் கேட்டு சென்ற பிராமணரை அழைத்தார். தன் மாமனார் தனக்கு கடிதம் எழுதியது போல் ஒரு போலி கடிதத்தை ராமானுஜரே எழுதினார். அந்த கடிதத்தில் என்னுடைய 2-வது மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதால் என் மூத்த மகள் தஞ்சம்மாளை அனுப்பி வைக்கும்படி எழுதி இருந்தார். அந்த கடிதத்தையும் மேலும் பழம், வெற்றிலை-பாக்கு, மஞ்சள், பூ போன்றவற்றை அந்த ஏழை பிராமணரிடம் கொடுத்து இதை தஞ்சம்மாளின் தந்தை கொடுத்து அனுப்பியதாக கூறி கொடுக்கும்படி கூறினார். நீ போனதும் உனக்கு ராஜ மரியாதையுடன் என் மனைவி உணவு கொடுப்பாள் என்றும் கூறினார். அதன்படி அந்த பிராமணர் செய்தார். தஞ்சம்மாள் அவரை உணவு கொடுத்து சிறப்பாக உபசரித்தார். சிறிது நேரம் கழித்து ராமானுஜர் வீட்டிற்கு சென்றார். அவரிடம் தஞ்சம்மாள் தந்தை எழுதிய கடிதத்தை காட்டி தன்னை பெற்றோர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கும்படி கூறினாள். ராமானுஜரும் மனைவியை அவளது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அதன்பின் ராமானுஜர் கோவிலுக்குச் சென்று பெருமாளை வணங்கி காவி உடை தரித்து திரி தண்டம் ஏந்தி, வேள்வி மூட்டி துறவி ஆனார்.