கோடி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு!
பொள்ளாச்சியை அடுத்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கும் புரவிபாளையம் எனும் கிராமத்தில் கடந்த 11.10.94 அன்று மகா சமாதி அடைந்தவர் ஸ்ரீலஸ்ரீ பொன்முடி கோடி மஹா சுவாமிகள். பக்தர்கள் எளிதான வார்த்தைகளில் இவரை அழைக்கும் பெயர் – கோடி சாமீ ஆகும்.
கோடி சுவாமிகள் என்ற பெயர் எப்படி வந்தது?
”கோடி கோடியான இன்பங்களையும் செல்வங்களையும் பக்தர்களுக்கு வாரி வழங்குவதால் அவருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம்” என்கிறார் அவருடைய பக்தர் ஒருவர். அதற்கேற்றாற்போல் தன்னிடம் வந்து ஆசி வாங்கக் காத்திருக்கும் அன்பர்களிடம், ”கோடி வரும்… தேடி வரும்…” என்றெல்லாம் சுவாமிகள் சொல்வாராம்.
கோடி ஸ்வாமிகளின் வரலாறு:
‘ஷீர்டி பாபாவின் மறு அம்சம் இவர்’ என்று கோடி சுவாமிகளைப் பற்றிச் சிலர் சொல்கிறார்கள். ‘வடக்கே இருந்து வந்த கோடி சுவாமிகள், உலகளாவிய விஷயங்களை அறிந்தவர்’ என்பர் சிலர். இவர், கொச்சைத் தமிழில்தான் பேசுவார். இந்துஸ்தானியில் சில பாடல்களைப் பாடுவாராம். சில நேரங்களில் ‘ராம ராம’ என்று ஜபிப்பாராம். வள்ளலார், விவேகானந்தர் பற்றி சுவாமிகள் அடிக்கடி சிலாகித்துச் சொல்வாராம்! அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைப் பற்றி அடிக்கடி பேசுவாராம். கல்கத்தா நகரில் உள்ள ஒவ்வொரு வீதிகளின் பெயரையும் கடகடவென்று பக்தர்களிடம் விவரிப்பாராம்.
‘தாத்தா சுவாமிகள்’ என்றும் பக்தர்கள், கோடி சுவாமிகளை அழைப்பர். காரணம் – சில நேரங்களில் எந்த ஒரு பக்தரையும் ‘தாத்தா… தாத்தா’ என்றே அழைப்பாராம். இதற்கு வாலிப வயசு ஆசாமிகளும் விதிவிலக்கு இல்லை. ”வா தாத்தா… காலேஜ் நல்லா படிச்சிட்டிருக்கியா?” என்று மாணவர்களிடம் கரிசனமாக விசாரிப்பாராம்.
சுவாமிகள் தோற்றம்:
செக்கச் செவேல் நிறம்; ஒளி வீசும் கண்கள்; சுருக்கங்கள் விழுந்த தேஜஸான முகம்; அதில் தவழும் அமைதி- சாந்தம்; பஞ்சு போன்ற வெண்தாடி; தன்னைத் தேடி வருபவர்களை நல்வழிப்படுத்துகிற ஞானப் பார்வை; குளிருக்கும் சரி; வெயில் காலத்திலும் சரி… ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு மூன்று கோட்டுகளை அணிந்தபடியே இருப்பாராம் சுவாமிகள். இதற்கென்று சுவாமிகளுக்கு கோட்டு மற்றும் தொப்பிகளை அடிக்கடி அவரது பக்தர்கள் வாங்கி வந்து தருவது உண்டாம். சில நேரங்களில் தலையை கிரீடம் அலங்கரிக்கும்.
புரவிபாளையத்துக்குக் கோடி சுவாமிகள் எப்படி வந்தார்?
முதன் முதலில் சுவாமிகள், தனுஷ்கோடியில்தான் பக்தர் ஒருவரால் அறியப்பட்டார். புனித பூமியாம் தனுஷ்கோடியைக் கடல் கொள்வதற்கு முன் நடந்த சம்பவம் இது. தனுஷ்கோடி ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள அந்தோணியார் கோயில் அருகே ஒரு மேடை மீது ஒற்றைக்காலில் நின்றபடி எந்நேரமும் தவம் செய்து கொண்டிருப்பாராம் சுவாமிகள். அந்த வழியே செல்கின்ற மீனவர்களும் மற்றவர்களும் இவரிடம் ஏதும் பேச மாட்டார்களாம். ‘இவரது கடும் தவத்துக்கு நாம் இடைஞ்சல் செய்யக் கூடாது’ எனும் எண்ணத்தில் நகர்ந்து விடுவார்களாம்.
அப்போது, பக்தர் ஒருவரது வேண்டுகோளுக்கும் விருப்பத்துக்கும் இணங்க, அவரது இல்லத்தில் சென்று சில நாட்கள் தங்கினார் கோடி சுவாமிகள். இது போல் பக்தர்கள் எவரேனும் விரும்பி அழைத்தால் அவர்களது இல்லத்துக்குச் சென்று சில நாட்கள் தங்குவது சுவாமிகளது வழக்கம். இப்படித்தான் தனுஷ்கோடிவாசத்துக்குப் பின் திருச்சி, பழநி, சென்னை தண்டையார்பேட்டை, கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில்
உள்ள நெய்க்காரப்பட்டி ஜமீன் என்று பயணித்து கடைசியாக 1962-ஆம் ஆண்டு புரவிபாளையம் ஜமீனுக்கு வந்து சேர்ந்தார் சுவாமிகள்.
காரில் வந்து இறங்கிய சுவாமிகள், தானாகவே விறுவிறுவென நடந்து, ஜமீன் வீட்டு மாடிப்படியில் ஏறி, தான் இருக்க வேண்டிய இடத்தைத் தீர்மானித்துக் கொண்டாராம். முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒரு இடத்துக்கு வந்த சுவாமிகள், இப்படி சகஜமாக நடந்து கொண்டதைக் கண்டு பலரும் ஆச்சரியப்பட்டனர். இதற்கு விளக்கம் தரும் வகையில் பின்னாளில் சுவாமிகளே சொன்ன பதில் இது:
”சுமார் 200 வருடங்களுக்கு முன், புரவிபாளையத்துக்கு வந்திருக்கிறேன். இங்கேதான் தங்கினேன். எந்தக் குறைவும் இல்லாமல் சாப்பிட்டேன். ஜமீனில் உள்ளவர்கள் என்னை நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் மீண்டும் இங்கு வந்து தங்க நேரிட்டது. புரவிபாளையம் ஜமீனில் இருந்து வந்த சிலர் என்னை கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நெய்க்காரப்பட்டி ஜமீன் மாளிகையில் சந்தித்தனர். அவர்கள் கிளம்பும்போது, ‘நானும் உங்களுடன் வருகிறேன்’ என்றேன். அதன்படி புரவிபாளையம் புறப்பட்டேன்.” கோடி சுவாமிகள் 300 வருடம் இந்த உலகில் வசித்ததாகச் சொல்கின்றனர் சிலர்.
புரவிபாளையம் ஜமீன் இல்லத்து முதல் மாடிதான் சுவாமிகளது வாசம்! சமாதி ஆகும் வரை – தான் இங்கே வசித்து வந்த 32 வருடங்களிலும் (1962- 1994) ஒரு நாள் கூட படி இறங்கி கீழே வந்ததே இல்லையாம்! அதாவது முக்கியமான பக்தர்கள் சிலர், ஜமீன் பங்களாவுக்குள் வந்து சுவாமிகளை தரிசிப்பார்கள். அப்போது மாடியில் மேடை ஒன்று அமைத்து, அதில் இருந்தபடி அவர்களுக்கு தரிசனம் தருவார் சுவாமிகள். ”ஏன் சாமீ, நீங்க கீழே வர மாட்டேங்கறீங்க?” என்று பக்தர்கள் கேட்டபோது, ”நான் கீழே வந்தா உன்னால என்னைப் பாக்க முடியாது” என்பாராம். எந்தப் பொருளில் கோடி சுவாமிகள் இதைச் சொல்கிறார் என்பது பலருக்கும் புரியவில்லை.
பக்தர்களில் ஏழை- பணக்காரர் எனும் பாகுபாடோ… ஜாதி-மத பேதங்களோ பார்க்க மாட்டார் சுவாமிகள். இன்றும் இவரது சமாதிக்கு முஸ்லிம், கிறிஸ்துவர் உட்பட மதங்களைக் கடந்து பலரும் வந்து வணங்கிச் செல்கின்றனர். இவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு என்ன பொருளைத் தர எண்ணுகிறாரோ.. அதை சம்பந்தப்பட்டவரை நோக்கி வீசி எறிவாராம். இப்படி அவர் எறியும் பொருட்களுள் தொப்பி, பூமாலை, பழங்கள், இனிப்புகள் போன்றவை அடங்கும்.
சுவாமிகள் தண்ணீர் குடித்து எவரும் பார்த்ததே இல்லையாம்; ஆனால், பக்தர்கள் எப்போதேனும் பாட்டிலில் கொண்டு வந்து கொடுக்கும் பன்னீரைக் கடகடவெனக் குடித்து விடுவாராம். அதேபோல் சுவாமிகள், தன் கையால் உணவு சாப்பிட்டு எவரும் பார்த்தது கிடையாது. பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை அன்புடன் அவருக்கு ஊட்டி விடுவார்களாம். சுவாமிகள் விருப்பப்பட்டால் உணவுக்காக வாயைத் திறப்பார். விருப்பம் இல்லாவிட்டால், ‘வேண்டாம் போ’ என்பதாக சைகை காட்டி விடுவார். சைவம், அசைவம் – எது கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார். உணவில் பாகுபாடு மனிதர்களுக்குத்தான்; மகான்களுக்கு அல்ல. ஓரிரு வாய் மட்டுமே உண்பார். அவ்வளவுதான்.
இந்த தருணத்தில், குறிப்பிட்ட சில பக்தர்களை அழைத்து, கையை நீட்டச் சொல்லி, தன் வாயில் இருக்கும் உணவையே பிரசாதமாகத் துப்புவாராம். இந்த பிரசாதம் கிடைப்பதை பெரும் பாக்கியமாக கருதினர் கோடி சுவாமிகளின் பக்தர்கள். இத்தகைய அனுக்கிரஹம் வாய்க்கப் பெற்றவர்கள் குறைவானவர்களே! ‘சுவாமிகள் துப்புவதை நாம் உட்கொள்ளுவதாவது… சேச்சே’ என்று அருவருப்பு அடைந்த சில பக்தர்கள், வாழ்க்கையில் தாங்கள் உயர வேண்டிய சில சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்டு விட்டதாக அவர்களே பின்னாளில் வருத்தப்பட்டுக் கூறியது உண்டு.
பக்தர்கள் அன்புடன் தரும் ஆரஞ்சு மிட்டாய்கள், சாக்லெட்டுகள் ஆகியவற்றை தன் வாயில் போட்டு சுவைப்பார் சுவாமிகள். அவர் அருகே காத்திருக்கும் பக்தர்கள், ‘சுவாமிகள் நம்மிடம் ஆரஞ்சு மிட்டாயைத் துப்ப மாட்டாரா? சாக்லெட்டைத் துப்ப மாட்டாரா?’ என்று காத்துக் கிடப்பார்களாம்.
சுவாமிகளின் அற்புதங்கள்:
ஒரு நாள், புரவிபாளையம் வந்து, சுவாமிகளை தரிசித்தவர், கடிகாரத்தை கழற்றி சுவாமிகளிடமே கொடுத்து விட்டு வணங்கினார். ‘நான் எப்போதோ கேட்ட பொருளை இவ்வளவு தாமதமாகத் தருகிறாயா?’ என்பது போல் அன்பரைப் பார்த்துப் புன்னகைத்தபடியே பெற்றுக் கொண்டார் சுவாமிகள். அடுத்த விநாடியே அருகே அமர்ந்திருந்த வேறொரு அன்பரை அழைத்து, அவரிடம் இந்த கடிகாரத்தைக் கொடுத்தார். அந்த ஆசாமி, ‘சுவாமிகளது அருளால் இனி நமக்கு நல்ல காலம்தான்’ என்று சந்தோஷமாகக் கிளம்பினார்.
இதையடுத்து சுமார் ஓராண்டு கழித்து, கடிகாரத்தைக் கொடுத்தவரும் பெற்றுக் கொண்டவரும், ஒரு நாள் யதேச்சையாக புரவிபாளையத்தில் சந்தித்துக் கொண்டனர். கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, ”சார்… சாமீ கையால உங்களோட கடிகாரத்தை நான் வாங்கின நேரம்… ஊருக்குப் போய் கடிகாரக் கடை வெச்சேன். தொழில் அமோகமா போகுது. நல்லா இருக்கேன்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
இதைக் கேட்டதும் கடிகாரம் கொடுத்த அன்பர் சிலிர்த்துப் போய் விட்டார். ‘தன்னிடம் இருந்த கடிகாரம் இவரது கைக்குப் போனதும், இந்த நபர் கடை துவங்கி, வாழ்வில் முன்னேற வேண்டும் என்று விதி இருந்தால் எவரால் மாற்ற முடியும்?’ என்று தெளிந்து, சுவாமிகளை வணங்கி விட்டுச் சென்றார். கோடி சுவாமிகளின் அற்புதங்களை இப்படிச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இவரது அருளால் முன்னுக்கு வந்தவர்கள், பல தொழில்களில் புகழ் பெற்று தேசங்கள் பலவற்றிலும் வாழ்ந்து வருகின்றனர்.
சுவாமிகளது மகா சமாதியை, புரவிபாளையம் ஜமீனே நிர்வகித்து வருகிறது. 11.10.94 அன்று மதியம் சுமார் 3:30 மணியளவில் மகா சமாதி ஆனார் கோடி சுவாமிகள்…
