Sunday, October 15, 2023
HomeAalayangalசெல்வ வளம் பெருக்கும் சேரன்மாதேவி அம்மைநாதர் கோவில்

செல்வ வளம் பெருக்கும் சேரன்மாதேவி அம்மைநாதர் கோவில்

திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம். இங்கு ஆவுடைநாயகி உடனாய அம்மைநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம். இங்கு ஆவுடைநாயகி உடனாய அம்மைநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இது நவ கயிலாயத்தில் ஒன்றாகவும், சந்திரனுக்குரிய தலமாகவும் போற்றப்படுகிறது. இந்தக் கோவிலில் ‘அம்மைநாதர்’ என்ற பெயரில் இறைவனும், ‘ஆவுடைநாயகி’ என்ற பெயரில் இறைவியும் அருள்பாலித்து வருகிறார்கள்.

சிவ தரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தார். அங்கு ஒன்பது மலர்களை, நதியில் விட்டார். அந்த ஒன்பது மலர்களும் ஒதுங்கிய கரையினில்தான் நவ கயிலாயங்கள் எனப்படும் சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றின் இரண்டாவது மலர் ஒதுங்கிய இடத்தில் உரோமச முனிவர், லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். அதுதான் சேரன்மாதேவி திருத்தலம் என்று சொல்லப்படுகிறது.

பிற்காலத்தில் உரோமச முனிவர் வழிபட்ட சிவலிங்கமானது, ஒரு அரச மரத்தின் கீழ் இருந்தது. இந்தப் பகுதி யில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர், நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே, அவர்கள் தங்களுடைய வேலையைத் தொடங்குவார்கள். ‘இந்த லிங்கம், மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே’ என்று ஆதங்கப்பட்ட அந்த சிவ பக்தைகள், சிவபெரு மானுக்கு கோவில் ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களிடம் அதற்கான பணம் இல்லை.

அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேமிக்கத் தொடங்கினர். அவர்களது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவன், அடியார் வடிவில் அந்தப் பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டிய அடியவர், “மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன்” என்று எழுந்தார்.

சகோதரிகள் பதறிப்போய் அவசர அவசரமாக விளக்கைத் தேடினர். விளக்கு தென்படாததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து, அதில் நெய்விட்டு விளக்கேற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அடியார் உருவத்தில் இருந்த சிவபெருமான், உணவருந்திய பின் தன்னுடைய சுய உருவத்தை, அந்த சகோதரிகளுக்கு காண்பித்து அருளாசி கூறி மறைந்தார். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோவில் எழுப்பினர்.

அரிசி வியாபாரம் செய்பவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து, அரிசி தானம், அன்னதானம் செய்தால் வியாபாரம் செழிக்கும் என்கிறார்கள். மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து அம்பாள் சன்னிதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுவதும் முக்கிய வழிபாடாக இருக்கிறது. சுவாமி – அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

இந்தக் கோவிலின் மண்டபத் தூணில், சிவ பூஜை செய்த உரோமச முனிவரின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம், வடக்குபுறமாக ஒரு தூணில் உள்ளது. இங்குள்ள கோவில் கல்வெட்டுகளில் இந்த ஊர், ‘சேரன்மகாதேவி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் யாவும் பாண்டியர் காலத்து கல்வெட்டுகளாகும். இந்தக் கோவிலை நந்தனார் தரிசித்திருக்கிறார். அதற்கு அடையாளமாக அவரது சிற்பம், கொடிமரத்தின் கீழ் பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரத்தின் அருகில் நின்று, விலகிய நந்தியையும், சிவபெருமானையும் ஒருசேர தரிசிக்கலாம்.

திருநெல்வேலியில் இருந்து சேரன்மாதேவி செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =

Most Popular