திருக்குற்றாலம் சித்திரசபை கோயில்!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மிக பழமையான தமிழகத்திலுள்ள ஐந்து சபைகளுள், குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மட்டுமே பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வகையில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இறைவன் ஓவிய வடிவில் காட்சியளிக்கிறார். சித்திரசபையில் உள்ள இந்த ஓவியங்கள் சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் மூலிகைகளால் வரையப்பட்டவை.
கி.பி.16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இச்சபை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். காசி பராக்கிரமபாண்டியனால் இச்சபை கட்ட ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பின்னர் உதயமார்த்தாண்டவர்மனால் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நடராஜ பெருமான் வடக்கே உள்ள திருவாலங்காட்டை விட்டு தெற்கே குற்றாலத்தை நோக்கி வந்தது இங்கு வீசும் தென்றல் காற்றில் இளைப்பாறவும், தீந்தமிழை அனுபவிக்கவும் என்று பரஞ்ஜோதி முனிவர் கூறுகியிருக்கிறார். இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக்கண்டு பிரம்மதேவன் சிவபிரானுடைய சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசகர் முதலியோர் இதனைச்சித்திரசபை என்று அழைத்தனர். தேவர்கள் தினமும் வந்து சித்திரசபையை தரிசித்து செல்கின்றனர் என்பது நம்பிக்கையாகும்.
சித்திரசபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பிரமிடு அமைப்பின் நிழலும், தாமிரத் தகடுகளின் மணமும் மனதுக்கு அமைதியைத் தருவது கூடுதல் சிறப்பு. சித்திரசபைக்கு முன்னர் தெப்பக்குளமும் அதன் மத்தியில் உயர்ந்த கோபுரமுள்ள நீராழி மண்டபமும் மிக அழகுடன் விளங்குகிறது. சபையில் நடராஜபெருமான்தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார்.
இறைவனுக்கு வழிபாடு
மார்கழி திருவாதிரை திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோவிலில் பூஜைகள் நடத்தப்படும். ஐப்பசி திருவிழா, சித்திரை விஷுத் திருவிழாவின்போது, சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுவது சிறப்பாகும்.
வைணவக் கோயிலான குற்றாலநாதர் கோயில் சைவ கோயிலாக மாற்றப்பட்டது, இறைவனின் திருமணக் காட்சி, கஜேந்திரமோட்சம் ஆகிய தல வரலாற்றுச் செய்திகள், 63 நாயன்மார்கள், பத்மநாபசுவாமிகளின் அனந்தசயனம், மதுரை மீனாட்சியம்மனின் திருவிளையாடல் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளன.
ரதி-மன்மதன், ஸ்ரீராமரின் பட்டாபிஷேகம், வாலிவதம் ஆகிய நிகழ்வுகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. திருச்செந்தூர் முருகனின் சூரசம்ஹாரம் வரையப்பட்டுள்ள ஓவியக்காட்சி காண்பவர்களின் மனதைக் கவர்கிறது.
