கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள துவராகாநாதர் கோவில்

69

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம். கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.

தல வரலாறு :

கிருஷ்ணரின் தாய்மாமன் கம்சன் அவருடைய மாமனாராகிய ஜராசங்கு கிருஷ்ணன் மீது 16 முறை படையெடுத்து தோற்று போனார். 17வது முறை சண்டையிட்டபோது மதுரா நகரிலிருந்து மக்களை வெளியேற கிருஷ்ணர் ஆணையிட்டார். அப்போது கிருஷ்ணர் சௌராஷ்டிரா தேசம் மற்றும் ஜாம் நகர் அருகில் கடலோரத்தில் வாழ்ந்து வந்த ஒரு மகாராஜாவின் மகள் ருக்மணியை மணந்து 100 ஆண்டுகள் மன்னராக ஆட்சிபுரிந்தார்.

ஒரே நாளில் ஒரே இரவில் இப்பகுதியை தங்கத்தால் ஆன நகராக துவாரகாவை உருவாக்குகிறார். கண்ணன் பாதம் பட்டாலே புண்ணியம் என்று சொல்லுவார்கள். கண்ணன் இங்கே அரசனாக வாழ்ந்திருந்து மக்களிடையே கலந்து பழகியிருக்கிறார். பக்தர்கள் அவரை அரசனாகவும் போற்றுகிறார்கள். பகவானாகவும் துகிக்கிறார்கள்.

கம்சனைக் கொன்ற பிறகு மதுராவுக்கு உக்ரசேனனை அரசனாக்கினார் கிருஷ்ணன். கம்சனுடைய மாமனாரும்- மகத தேசத்து அரசனுமான ஜராசந்தனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. அவன் மதுராமீது போர் தொடுத்தான். ஜராசந்தனுடைய சேனையை எதிர்த்து நிற்க முடியாமல் யாதவ சேனை பின்வாங்கியது.

இதனிடையே யாதவர்களால் தன் தந்தை அவமானப்படுத்தப்பட்டதை நாரதர் மூலம் அறிந்த காலயவனன் என்ற அரசனும் பெரும்படையுடன் மதுராவைத் தாக்கினான். இரண்டு எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்த கிருஷ்ணர் மீதமிருந்த யாதவ சேனைகளையும் மக்களையும் அழைத்துக் கொண்டு மேற்குக் கடற்கரைப் பக்கம் வந்து சமுத்திர ராஜனிடம் பன்னிரண்டு யோசனை தூரம் கடலில் இடம் கேட்டார்.

அதன் படி கடல் பன்னிரண்டு யோசனை தூரம் உள்வாங்கியது. கடல் கொடுத்த பூமியில் தேவதச்சன் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு அற்புதமான நகரை நிர்மாணித்து யாதவ மக்களையும் மாடு- கன்றுகளையும் அங்கு குடியேற்றினார் கிருஷ்ணர். இப்படித் தோன்றியதுதான் துவாரகா.

கிருஷ்ணன் வாழ்ந்த காலத்திலிருந்த துவாரகா இப்போது இல்லை. கி.பி. 8 முதல் 10-ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பாளர்கள் அழித்துவிட்டனர். பின்னாளில் 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் குஜ்ராத்தை ஆண்ட சாளுக்கிய அரச பரம்பரையினர் கட்டியதுதான் இப்போதுள்ள கோவில் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் சோமநாதர் கோவில் பாணியில் அமைந்திருப்பதை அதற்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பல படிக்கட்டுகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும்.

இக்கோவில் கோபுர உயரம் 51.8 மீட்டர். நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின்மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கோபுரத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமானது. கருவறையில் துவாரகாதீஷ் ஸ்ரீகிருஷ்ணன் சிரசில் கொண்டையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இக்கோவிலை ஜெகத்மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.

தல சிறப்பு பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம்.கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். இத்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது.

60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. இங்குள்ள சிற்பங்களே சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கீழே சன்னிதானமும் மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் பல சிறிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம். துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

தலபெருமை கிருஷ்ண ஜெயந்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ணரை விதவித ஆடை அலங்காரம் செய்து வழிபடுவர். மேன்மை அடைவர். ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சாரதா பீடம் உள்ளது. 5000 ஆண்டுகள் பழமையான திருத்தலம் இதுவே என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

கோமதி நதிக்கரையில், துவாரகா கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்த நதியில் நீராடினால் கங்கா ஸ்நானம் செய்த பலன் கிட்டும். 11 விதமான பதார்த்தங்கள் பிரசாதமாக கிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. துர்வாச முனிவரின் கமண்டல நீரை ருக்மணி தேவி பருகியதால் துர்வாச முனிவர் இங்குள்ள பூமி உப்பாகும் என்றும் கடல்நீர் வற்றும் என சாபமிட்டார். பின்னர் துவாரகை வந்த கிருஷ்ணரை மண முடித்த பின் துர்வாச முனிவருக்கு கிருஷ்ணர் விருந்து படைத்தார்.

இதில் மனம் குளிர்ந்த துர்வாச முனிவர் சாபத்தை நீக்கி ஊர் செழிப்புறவும் கிருஷ்ணர் 100 ஆண்டுகள் ஆட்சி புரியவும் ஆசி வழங்கினார். இக்கோவில் கோபுரத்தின் உச்சியில் முக்கோண வடிவிலான- சிவப்புப் பட்டுத் துணியாலான சூரிய- சந்திர உருவங்கள் பதித்த 82 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய கொடி தினமும் மூன்று முறை ஏற்றி இறக்கப்படுகிறது. கொடியை ஏற்றியவுடன் கோபுர உச்சியிலேயே உள்ள வட்டமான இடத்தில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. காலையில் பாலகிருஷ்ணனாகவும் பகலில் மகாராஜாவைப்போலவும் மாலையில் பூஜிக்கத்தக்க அலங்காரத்துடனும் துவாரகாதீஷ் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

துவாரகாவிலிருந்து சற்று தூரத்தில் துவாரகா தீவு உள்ளது. படகில்தான் அங்கு செல்ல வேண்டும். முதலில் ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த துவாரகா கடலில் மூழ்கிய சமயம் அவர் விருப்பப்படி கடலில் மூழ்காமல் எஞ்சியிருந்த பகுதிதான் இது. இங்கே அவரது அரண்மனை அப்படியே உள்ளது.

இங்கும் ஒரு துவாரகாநாத் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இங்கு அவரது மற்ற மனைவியர்களின் ருக்மிணி தவிர கோவில்கள், தாய் தேவகி கோவில், கல்யாணராமர், திரிவிக்கிரமமூர்த்தி மற்றும் லக்ஷ்மி நாராயணர் கோவில்கள் உள்ளன. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சங்க தீர்த்தம் உள்ளது. இந்த தீவு துவாரகையிலேயே ருக்மிணிக்குத் தனிக்கோவில் உள்ளது. சிரித்த முகத்துடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார் ருக்மிணி.

துவாரகா கிருஷ்ணனிடம் ருக்மிணி ஏதோ காரணத்தால் கோபித்துக் கொண்டு இங்கு வந்ததாக கோவில் பூசாரி கூறுகிறார். அதாவது துவாரகா கோவிலிலுள்ள ஸ்ரீகிருஷ்ணரை நேருக்கு நேர் பார்த்தபடி இங்கு நிற்கிறாராம் ருக்மிணி. கோமதி நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் துவாரகா கற்கள் கிடைக்கின்றன.

அவற்றின் மேல்பாகம் தேன் அடைபோல் இருக்கும். சில கற்களில் விஷ்ணுவின் சக்கரம் இருக்குமாம். இந்த கற்களில் நாராயண சின்னம் மற்றும் மகாலக்ஷ்மி சின்னம் பிரதீக் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கற்களை எடுத்து வந்து பூஜிப்பவர்கள் மோட்சத்தை அடைகிறார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த தீவு துவாரகாவுக்கு அக்காலத்தில் சங்கோதரா மற்றும் ஸ்ரீதீர்த்தா என்று பெயர்.

இங்கு ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த தர்ம சபையும் ஒரு மச்சாவதார பகவான் கோவிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துவாரகாவிலும் தீவு துவாரகாவிலும் ஆண்டு முழுவதும் எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கின்றன. தினமும் இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து துவாரகாதீஷையும் ருக்மிணி தாயாரையும் தரிசனம் செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இருப்பிடம் :
துவாரகை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 453 கி.மீ., தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து காலை 9.35க்கு கிளம்பும் நவஜீவன் எக்ஸ்பிரசில் அகமதாபாத் சென்று, அங்கிருந்து ஒகாதுறைமுகம் செல்லும் ரயிலில் சென்றால், துவாரகையை அடையலாம். அகமதாபாத்தில் இருந்து பஸ்சும் உண்டு.