Monday, October 23, 2023
HomeAalayangalகாஞ்சி காமாட்சி அம்மன்!

காஞ்சி காமாட்சி அம்மன்!

காஞ்சி காமாட்சி அம்மன்!

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், 51 சக்தி பீடங்களில் பார்வதிதேவியின் முதுகு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இங்கு, வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ள காமாட்சி அம்மன், இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். ஒரு கையில் கரும்பு வில்லையும், தாமரை, கிளியை மற்றொரு கையிலும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்து, ஆனந்தலஹரி பாடிய தலம் இது.

காமாட்சி என்ற சொல்லில் ‘கா’ என்பது சரஸ்வதிதேவியையும், ‘மா’ என்பது திருமகளையும் குறிக்கின்றன. ‘அட்சி’ என்பது கண்ணாக உடையவர் என்று பொருள்படும். கலைமகளையும் திருமகளையும் தன் கண்களாக கொண்டிருப்பவர் அன்னை காமாட்சி என்று அறிந்து கொள்ளலாம். தன்னை வேண்டும் அனைவருக்கும் கல்விச் செல்வம், பொருட்செல்வம் அருள்பவராகவும், அடியவர் விரும்பும் வரங்கள் அனைத்தையும் மழையாகப் பொழியக் கூடியவராகவும் போற்றப்படுகிறார்.

தட்சனின் வரம்:

தட்சன் என்ற அரசன் சிவபெருமானைத் தன் மருமகனாக அடைந்துவிட்டால், அனைத்துலகும் தனக்கு அடிபணியும் என்று நினைத்து, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமானும் அவ்வாறே வரம் அளித்தார். அதன்படி தட்சனுக்கு தாட்சாயணி என்ற பெயரில் மகள் தோன்றினார். முன்னர்பெற்ற வரத்தின்படி தாட்சாயணியை மணந்தார் சிவபெருமான். திருமணம் முடிந்ததும், தட்சனிடம் கூறிக்கொள்ளாமல், சிவபெருமான் தாட்சாயணியுடன் கயிலாயம் திரும்பினார்.
சிவபெருமான் சொல்லாமல் சென்றதைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிய தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நிகழ்த்தினார்.

யாகத்துக்கு சிவபெருமானை அழைக்காதது குறித்து, சிவபெருமானும் தாட்சாயணியும் கோபம் கொண்டனர். அதன்விளைவாக, சர்வேஸ்வரனின் கோபத்தில் இருந்து வீரபத்திரரும், தாட்சாயணியின் கோபத்தில் இருந்து காளியும் தோன்றி, தட்சனின் யாகத்தை அழித்தார்கள். தட்சனின் தலையும் கீழே உருண்டது. கொடியவன் தட்சனின் மகள் என்று தான் அழைக்கப்படுவதை விரும்பாத தாட்சாயணி, தன் உடலை தீக்கிரையாக்கினார்.

தீயில் கருகிய தேவியின் உடலை தன் தோளில் சுமந்தபடி, சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் அனைத்து உலகங்களும் நடுங்கின. ஈசனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்தும்பொருட்டு, தன் சுதர்சன சக்கரத்தை ஏவினார் திருமால். சுழன்று வந்த சுதர்சன சக்கரம், தாட்சாயணியின் அங்கத்தை பல கூறுகளாக சிதைத்தது. அந்தக் கூறுகள் அனைத்தும் பாரத தேசத்தில் பல பகுதிகளில் (51 இடங்கள்) விழுந்தன. அவையே அன்னை பராசக்தியின் சக்தி பீடங்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அன்னையின் முதுகு எலும்பு விழுந்த இடம் காஞ்சிபுரம் ஆகும்.
காஞ்சியில் அவதாரம்

பண்டாசுரன் என்ற அசுரன், பல வரங்களைப் பெற்று, தேவர்களை அச்சுறுத்தி, இன்னல்கள் விளைவித்து வந்தான். அவனது தொல்லைகளைப் பொறுக்க முடியாமல், கயிலைமலையை அடைந்து அன்னை பராசக்தியிடம், இதுகுறித்து தேவர்கள் முறையிட்டனர். பார்வதிதேவியும் அவர்களின் துன்பங்களைக் களையும் பொருட்டு, கிளியாக வடிவம் கொண்டு, காஞ்சிபுரத்துக்கு வந்து செண்பகாரண்யம் என்ற இடத்தில் ஒரு செண்பக மரத்தில் வாசம் செய்தார்.

பண்டாசுரன் பெற்ற வரத்தின்படி, அவனால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதும் அவனுக்கே கிடைத்துவிடும். ஆனாலும் அனைவருக்கும் முடிவு என்று ஒன்று உண்டு என்ற பொதுவிதியின்படி, அவனுக்கு 9 வயது பெண்குழந்தையால் உயிரிழப்பு ஏற்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அப்படித்தான் காமாட்சியாக அவதாரம் எடுத்த அன்னை பராசக்தி, பண்டாசுரனை அழித்து, இத்தலத்திலேயே எழுந்தருளினார்.

அசுரனை அழிப்பதற்காக ஏற்பட்ட அவதாரம் என்பதால் மிகவும் உக்கிரமாக இருந்தார் பார்வதிதேவி. அவரை சாந்தப்படுத்துவதற்காக 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள்சக்தியாக மாற்றினார். உக்ர ஸ்வரூபினியாக, காளியன்னையாக இருந்த அன்னை பராசக்தி, சௌம்யமான காமாட்சியாக, பரப்ரஹ்ம ஸ்வரூபினியாக அருள்பாலிக்கிறார்.

கோயில் அமைப்பு:

அன்னை காமாட்சி குடிகொண்டிருக்கும் இத்தலத்துக்கு ‘காமக் கோட்டம்’ என்ற பெயர் உண்டு. இக்கோயிலின் முதல் பிரகாரத்தின் நடுவில் 24 தூண்களுடன் காயத்ரி மண்டபம் அமைந்துள்ளது. காயத்ரி மண்டபம் செல்லும் வழியில் அன்னபூரணி சந்நிதி உள்ளது. அன்னை காமாட்சி, ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்ற 3 அமைப்பில் விளங்குகிறார். காமகோடி காமாட்சி (ஸ்தூலம்), அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி), காமகோடி பீடம் என்று கூறப்படும் ஸ்ரீசக்கரம் ஆகிய 3 அமைப்பில் அருள்பாலிக்கிறார். காஞ்சி காமாட்சியே சிவத் தலங்களுக்கு மூலமூர்த்தி ஆகிறார். இந்த மூலமூர்த்தியின் இடது பக்கத்தில் வடக்கு நோக்கியவாறு அஞ்சன காமாட்சி திகழ்கிறார். இவரே சூட்சும வடிவமாக உள்ளவர்.

திருமகளின் முகம் அரூபமாக மாறியதற்கு காரணம் உண்டு. ஒருசமயம் தன்னுடைய பேரழகில் கர்வம் கொண்ட திருமகள், திருமாலின் அழகை ஏளனம் செய்யும்விதமாக பேசிவிட்டார். ஆணவம், கர்வம் ஆகியன உயரத்தில் இருப்பவரையும் ஒருகணத்தில் வீழ்த்தக்கூடிய தீயகுணங்கள் ஆகும். இதை உலகுக்கு உணர்த்த விரும்பினார் திருமால்.

பல பெருமைகள் வாய்க்கப் பெற்றிருந்தாலும், தன் பேரழகின் மீது ஏற்பட்ட கர்வம் காரணமாக. அரூபியாக மாறும்படியான சாபத்தைப் பெற்றார் திருமகள். திருமாலின் சாபத்தைப் பெற்ற பின்னரே, தன் தவறை உணர்ந்தார் திருமகள். திருமாலிடம் மன்னிப்பு கோரிய திருமகள், தனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டினார். காஞ்சி காமகோட்டத்துக்குச் சென்று காமாட்சியின் அருள் பெற்று, பழைய வடிவத்தை அடையலாம் என்று திருமால் கூறினார்.

திருமாலின் யோசனைப்படி, பூவுலகம் வந்த அரூப லட்சுமிக்கு, அஞ்சன காமாட்சி என்று பெயரிட்டு, தனது இடது பக்கத்தில் அமர்ந்து தவம் செய்ய அருளினார் காமாட்சி. தன்னுடைய குங்கும பிரசாதம், அஞ்சன காமாட்சியின் மீதும் விழும். அதன் காரணமாக, திருமகளுடைய அரூப நிலை மாறி, உண்மையான வடிவம் கிடைக்கப்பெறும் என்று அருள்பாலித்தார். ஆணவம், சுயநலம், பேராசை, வஞ்சகம், பொறாமை ஆகிய தீய குணங்கள், காமாட்சியின் அருளால் நீங்கப் பெற்று, அனைவரிடத்தும் அன்பு செலுத்தும் குணம் உயர்ந்தோங்கும் என்பதே இதன் உட்கருத்தாகும்.

காமகோடி பீடம்:

ஆதிசங்கரர், காமாட்சியின் உக்கிரத்தை குறைப்பதற்காக ஸ்ரீசக்கரத்தை ஏற்படுத்தினார். இந்த ஸ்ரீசக்கர வடிவமே காமகோடி பீடம் என்று அழைக்கப்படுகிறது.
ஆதிசக்தியான பார்வதி தேவி, காரண காரியங்களுக்காக எத்தகைய வடிவத்தையும் எடுப்பார் என்பதையே இந்த ஸ்ரீசக்கர வடிவம் நினைவுபடுத்துகிறது. தாட்சாயணியின் எலும்புகள் விழுந்த இடங்கள் அனைத்தும் காஞ்சியில் கோயில்களாக உருவாகின என்று அறியப்படுகிறது. அதனாலேயே ‘கோயில்களின் நகரம்’ என்று காஞ்சி மாநகரம் அழைக்கப்படுகிறது.

காஞ்சியில் எழுந்தருளியிருக்கும் ஏகாம்பர நாதரும், வரதராஜரும் உற்சவ மூர்த்திகளாக வலம் வரும்போது, அன்னை காமாட்சியின் கோயிலை சக்கர வட்டமாக வலம் வரும்வகையில் ஆதிசங்கரர் இக்கோயிலை வடிவமைத்தார். தன் கடமைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், ஆதிசங்கரர், காஞ்சித் தலத்தில் அன்னை காமாட்சியின் திருவடிகளில் இரண்டறக் கலந்தார் என்பது சிறப்பு.

மகிஷாசுரமர்த்தினி, உற்சவ காமாட்சியான பங்காரு காமாட்சி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்கள். காமக்கோட்டத்தின் வெளிவாயிலுக்கு அருகில் ‘ஞானக் கூபம்’ என்ற கிணறு உள்ளது. பஞ்சமூர்த்திகளால் ஏற்படுத்தப்பட்ட பஞ்ச தீர்த்தம் (பஞ்ச தீர்த்த புஷ்கர்ணி) உள்ளது. ‘உலகாணித் தீர்த்தம்’ என்றும் இத்தீர்த்தம் அழைக்கப்படுகிறது.

தலச் சிறப்பு:

அயோத்தி மன்னர் தசரத சக்கரவர்த்தி, இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் செய்ததன் பலனாக ராம சகோதரர்கள் அவதரித்ததாக மார்க்கண்டேய புராணத்தில் கூறப்படுகிறது. இதற்காகவே இத்தலத்தில் சந்தான ஸ்தம்பம் உள்ளது. இதை வலம் வருவதால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

காமாட்சி அம்மனின் திருவடிகளில் நவக்கிரகங்கள் தஞ்சம் அடைந்ததால், காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவக்கிரக தோஷம் ஏற்படுவதில்லை. துர்வாச முனிவர் கிருத யுகத்தில் 2,000 ஸ்லோகங்களையும், பரசுராமர் திரேதா யுகத்தில் 1,500 ஸ்லோகங்களையும், தவுமியாசார் துவாபர யுகத்தில் 1,000 ஸ்லோகங்களையும், ஆதிசங்கரர் கலியுகத்தில் 500 ஸ்லோகங்களையும் காமாட்சி மீது பாடியுள்ளனர்.

காமாட்சி அம்மன், பிரம்மா, திருமால், ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாகக் கொண்டு, தென்கிழக்கு திசையை நோக்கியபடி 4 கைகளுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தி அருள்பாலிக்கிறார். லலிதா, ராஜராஜேஸ்வரி, சக்கர நாயகி, திரிபுடை ஆகிய பெயர்களாலும் அன்னை காமாட்சி அழைக்கப்படுகிறார்.

காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய 5 காமாட்சி வடிவங்கள் இங்கு உண்டு. பல ஆண்டு காலமாக உள்ள மாமரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது. திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருகள்வனூர், இத்தலத்தில் அமைந்துள்ளது.
விழாக்கள்

அன்னை காமாட்சிக்கு நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் (10 நாட்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வைகாசி வசந்த உற்சவம், நவராத்திரி விழா, ஐப்பசி அவதார உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு மாத பவுர்ணமி தினத்திலும் சிறப்பு ஆராதனைகள், அபிஷேகங்கள் நடைபெறும். தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு, சங்கர ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் நாட்களில் காமாட்சி அம்மன் தங்கரதத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − seven =

Most Popular