(இன்று வரை விடை தெரியாத பலமர்மங்களும் அதற்கான விளக்கங்களும் இன்று நம் சித்தர்களின் குரலில்…)
காணப் பிறவிகள் ஆயிரம் தவம் செய்தல் வேண்டும், கண்ட பின் உண்டோ பிறவியும் என்று ஞானிகள் அருளியபடி திருக்கயிலாய தரிசனமும், மானசரோவர் ஸ்நானமும் தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய பேராகும். அந்த தரிசனத்தின் திருக்காட்சிகளை பற்றி முழுமையாக அறியுங்கள்.
பார்வதியின் தாய் வீடு இமயமலை
இப்பதிவில் திருக்கயிலாயமும் மானசரோவரும் அமைந்துள்ள பார்வதி அம்மையின் பிறந்த வீடான இமய மலையின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.
சிற்றம்பலம் என்பது ஒரு பரமார்த்திக நிலை. இப் பெயர் கொண்ட தலம் சிதம்பரத்தில் உள்ளது. ஆனால் திருக்கயிலாயமோ இயற்கையாகவே லிங்கமாக, உள்ளது. எனவே இமய மலையிலே வருடம் முழுவதும் பனி நிறைந்துள்ள சிகரமான கைலாயத்தை நாம் சிவபெருமானாகவே வழிபடுகின்றோம்.
” யோ ருத்ரோ அக்நௌ யோ அப்ஸ”யேஓஷதீஷ• யோ ருத்ரோவிஸ்வா புவநா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து ”
எந்த ருத்ரன் அக்னி, நீர், செடி, கொடி(மூலிகைகள்), மரம், மற்றும் பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி நிலைத்திருக்கின்றாரோ அந்த ருத்ர பகவானை வணங்குகிறோம் என்று ஸ்ரீருத்ரத்திலே சிவபெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. அவர் பார்வதியம்மையுடன் நித்ய வாசம் செய்யும் தலம் தான் தான் திருக்கயிலாயம்.
மும்மூர்த்திகளில் ப்ரம்ம தேவனின் இருப்பிடம் சத்யலோகம். விஷ்ணு பகவான் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானின் இருப்பிடம் கைலாயம் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று இருப்பிடங்களில் சத்யலோகமும் வைகுண்டமும் சாதாரண மனிதர்களின் கண்ணுக்கு தெரிவதில்லை.
ஆனால் நமது கண்களால் கண்டு தரிசனம் பெற்று முக்தி அடையும் வகையில் சிவனின் இருப்பிடமான கைலாயம் அமைந்துள்ளது. உலகின் தலைசிறந்த சிகரங்களில் இமயமும் ஒன்று. உலகிலேயே உயர்ந்த சிகரமான இமயமலையில் வடக்கு பகுதியில் சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் வசித்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன.
நமது நாட்டின் வடக்கு எல்லையும் அரணுமான இமயமலையே புராணங்களின் படி பார்வதியின் தாய் வீடு. ஸ்ரீ லலிதா அஷ்டோத்தரத்தில் ஒரு நாமாவளி “ஹ’மாசல மஹா வம்ச பாவனாயை நமோ நம:, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமம் உமா சைலேந்த்ர தனயா. உமையம்மை மலைகளுக்கெல்லம் அரசனான இமய மலையின் அரசன் இமவான் மகளாக பிறந்து, வளர்ந்து விளையாடி தவமிருந்து சர்வேச்வரனை கை பிடித்த இடம். எனவே அம்பிகைப்பற்றி பாடும் போது ஆதி சங்கர பகவத் பாதாள் இமஹ’ரி சுதே, என்றும் கிரி கன்யே என்றும், சைல சுதே என்றும் அன்பொழுகப் பாடுகின்றார். அபிராமி பட்டரும் அபிராமி அம்பிகையை சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ தனயை, என்று பாடுகின்றார். பர்வதங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இமய பர்வதத்தின் இராஜனுக்கு மகளானதால் அம்மை பார்வதி என்றும் அழைக்கப்படுகின்றாள். எம்பெருமானை மாணிக்க வாசகரும் தமது திருவாசகத்திலே மலைக்கு மருகனைப்பாடி நாம் தேள்ளேணம் கொட்டோமோ என்று பாடுகின்றார்.
இனி புவியியலின் படி , உலகத்திலேயே உயரமானதும், அதே சமயத்தில் இளைய மலை இமய மலை தான். இம்மலை சுமார் 30 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது. ஹ’ம் என்றால் பனி என்று அர்த்தம் எனவே எப்போதும் அந்த பனி நிறைந்த மலைக்கு ஹ’ம் + ஆலயம் , இமாலயம் என்று பெயர் ஏற்பட்டது. எப்போதும் பனி மூடிய சிகரங்களை கொண்டுள்ளதால் இம்மலைத் தொடர் அதிகமாக சிதைவு அடையவில்லை. இம்மலைத் தொடர் கிழக்கு மேற்கில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் து‘ரம் விரிந்து பரந்துள்ளது. இந்த மலைத்தொடர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம்முடைய இந்தியத் திருநாடே பாலைவனமாக மாறியிருக்கும். இந்து மஹா சமுத்திரத்திலிருந்து வரும் மேகக்கூட்டங்களை தடுத்து நிறுத்தி இந்திய திருநாட்டை வளமிக்க நாடாக மாற்றியுள்ளது இம்மலைகள்.
அகழ்வாராச்சியின் மூலமாக முதன் முதலில் நாகரீகம் இந்த இமய மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடும் ஆற்றின் கரையோரங்களில் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாகரீகத்தின் தொட்டிலும் இமயமலைதான். இம்மலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன சிறிய இமயம், பெரிய இமயம், எல்லை கடந்த இமயம். இவற்றில் கைலாயம் எல்லை கடந்த இமயத்தில் அமைந்துள்ளது. பெரிய இமயத்தின் தென் பகுதில் மற்ற இமய மலையின் புண்ணிணிய தலங்களான ரிஷ’கேசம், திருக்கேதாரம், பத்ரிகாச்ரமம். கங்கோத்ரி, யமுனோத்ரி முதலியவை உள்ளன.
இனி கைலாய மலையின் பெருமைகளைப்பற்றி பார்ப்போம். யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதியான ஸ்ரீ ருத்ரத்திலே சிவபெருமான் கைலாய வாசன் என்பதை கிரிஸந்தா, கிரித்ரா, கிரிஸாச்சா, நமோ கிரிஸாய ச என்ற தொடர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல உணர்த்துகின்றன.
இம்மலையின் பெருமையைப் பற்றி காளிதாசர் தமது குமாரசம்பவத்திலே இவ்வாறு பாடுகின்றார். “வடக்கிலே அமைந்துள்ளது ஒரு பெரிய மலை, எப்போதும் பனியினால் போர்த்தப்பட்ட மலை, தெய்வீகம் பொருந்திய மலை, கிழக்கு கடலிலிருந்து மேற்கு கடல் வரையில் விரிந்து பரந்துள்ள விசாலமான மலை” இம்மலையின் புனிதத்தன்மையை பற்றிய குறிப்புகள் ரிக் வேதம், சிவ புராணம், இராமாயணம், உபநிடதங்கள் முதலியவற்றில் உள்ளன. இம்மலை “பூலோக மேருவாக” கருதப்படுகின்றது. சிவ பெருமானும் பார்வதி தேவியும் நித்திய வாசம் செய்யும் தலம் இது. இராமாயணத்தில் இமய மலைக்கு இனையான மற்றொரு மலை இல்லை ஏனென்றால் அதன் உச்சியிலே அது பரம பவித்ரமான கைலாயத்தையும், மானசரோவரையும் கொண்டுள்ளது, கைலாய பர்வதத்தை தரிசனம் செய்தவுடனே ஒருவருடைய பாவங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.
இதில் கைலாயம் என்பது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத் நாட்டில் அமைய பெற்று இருக்கிறது. சிந்து சட்லெஜ் பிரம்மபுத்திரா போன்ற பல நதிகள் இந்த கைலாயத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன.
இந்த கைலாயம் 6638 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இங்கு வரும் அனைவரும் வணங்கும் மானசரோவர் ஏரியை ப்ரம்ம தேவர் அவரது கைகளால் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
உலகின் மிக உயரத்தில் இருக்கும் நன்னீர் ஏரி மானசரோவர் மட்டுமே. வேறு எங்கும் இது போன்ற ஏரிகள் இல்லை. அழிந்து போனதாக சொல்லப்படும் அன்னப்பறவைகள் இன்னமும் இங்கு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் தெய்வங்களும் தேவர்களும் கின்னரர்களும் யக்ஷர்களும் வந்து நீராடும் இடமாக மானசரோவர் ஏரி விளங்குகிறது. இதன் காரணமாகவே இங்கு நீராடிய பின் கைலாயத்தை தரிசித்தால் முக்தி என்று மக்கள் நம்புகின்றனர்.
52கிமி சுற்றளவு கொண்ட கைலாய மலையை பரிக்கிரமமாக சுற்றி வரும் போது சுகு , ஜெய்தி எனும் இரு இடங்களில் கைலாய மலையின் பிம்பம் மானசரோவர் ஏரியில் விழுவதை பார்க்க முடியும்.
மிகவும் அரிய இந்த இடங்களை சிவனும் பார்வதியும் சேர்ந்து காட்சியளிக்கும் இடமாக மக்கள் வழிபடுகிறார்கள். கௌரிசங்கர் என்று இதற்கு பெயரும் வைத்திருக்கிறார்கள்..
தேவியின் 51 சக்தி பீடங்களில் மானசரோவர் தான் சதி தேவியின் வலது உள்ளங்கை விழுந்ததாக கூறப்படுகிறது. மானஸரோவருக்கு வெகு அருகிலேயே ராட்சத தலம் என்று இன்னொரு ஏரியும் உண்டு. ராவணன் தவம் செய்த இந்த ஏரி உப்பு நீர் தன்மை கொண்டுள்ளது.
தெளிந்த பளிங்கு நீர் போல மானசரோவர் அமைதியாக இருக்கிறது. ராட்சத ஏரியோ ஆரவாரம் கொண்ட அலைகளை கொண்டு கொந்தளிப்பாகவே காட்சியளிக்கிறது. அதே போல மானஸரோவரில் வலம் வரும் பறவைகள் எதுவும் ராட்சத தல ஏரிக்கு வருவதில்லை.
சிவபெருமானும் பார்வதி தேவியும் வாழும் இந்த கைலாயத்தில் மற்ற தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் கின்னரர்கள் ரிஷிகள் போன்றோரும் வாழ்கின்றனர். அவர்களுக்கான மாளிகைகள் குகைகள் ஆகியவை கைலாய மலையில்தான் ரகசியமாக இருக்கிறது.
சில சமயங்களில் இரவு நேரங்களில் மினுமினுக்கும் வகையில் இந்த இடங்கள் தங்களை வெளிக்காட்டி கொள்ளும் என்று கூறப்படுகிறது.
எட்டாயிரம் மீட்டருக்கும் மேல் உயரம் கொண்ட எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களால் கூட 7000 மீட்டர் உயரம் கொண்ட இந்த கைலாயத்தில் ஏற முடியவில்லை.
இந்துக்கள் மட்டுமல்லாமல் புத்தம் சமணம் பொம்பா போன்ற மற்ற மதத்தினரும் கைலாய மலையை கடவுளாக பார்க்கின்றனர்.
சாட்டிலைட் மூலம் கைலாயத்தை புகைப்படம் எடுத்த போது மிக பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்க ரூபமாக கைலாய மலை காட்சியளிப்பது கடவுளை நேசிக்காதவருக்கும் வியப்பை தருகிறது.
பிரபஞ்சத்தின் மைய பகுதியில் இருக்கும் கைலாயம் இந்துக்கள் நம்பிக்கை படி அவர்களுக்கு தந்தையாகிறது. மானசரோவர் ஏரி தாயாகிறது. காலங்கள் ஸ்தம்பித்து போகும் குகைகள் கைலாயத்தின் அடியில் ஏராளமாக இருக்கிறது என்றும் இங்குதான் மகா அவதார் பாபாஜி மற்றும் எண்ணற்ற சித்தர்கள் வசிப்பதாகவும் நம்பப்படுகிறது.
இங்கு வருகை தரும் பக்கதர்களின் நகங்களும் முடிகளும் 12 மணி நேரத்தில் வளர்கின்றன என்கிறார்கள். இதன் மூலம் கைலாயத்தில் காலம் வேகமாக நகர்கிறது என்று அனைவரும் புரிந்து கொள்ளலாம். சூரியனின் கதிர்களால் பொன்னிறமாக ஜொலிக்கும் இந்த கைலாயம் இன்னும் எவ்வளவோ அதிசயங்களையம் அமானுஷ்யங்களையும் தன்னிடம் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இறைவனால் வெளிப்பட்ட அதிசயங்கள் இன்னமும் முடிவின்றி மனித மூளைகளால் ஆராயப்பட்டுக் கொண்டே இருக்கும்போது வெளிவராத கைலாயத்தின் ஆச்சர்யங்கள் எதற்காகவோ அமைதியாக காத்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது