தமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்தும் பழனி பெரிய நாயகி அம்மன் கோவில்

111

“பெரியநாயகி அம்மன்” கோவில் சிற்பங்கள், காண்போரை பரவசமடையச் செய்து தமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்துவதாய் உள்ளது.

12 இராசிகளுக்கு 12 கலைநுட்பம் மிகுந்த மிகப் பெரிய தூண்கள் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள கோவில் இது. 16ம் நூற்றாண்டில் பல்வேறு கால கட்டங்களில் நாயக்க மன்னர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட “ஊர்க்கோயில்” “யானைக்கோயில்” எனப்படும் “பெரியநாயகி அம்மன்” கோவில் சிற்பங்கள், காண்போரை பரவசமடையச் செய்து தமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்துவதாய் உள்ளது. இந்தச் சிற்பங்கள் இதுவரை உலகுக்கு கவனப்படுத்தப்படாமல் குடத்திலிட்ட விளக்காய் உள்ளன. நவரங்க மண்டபத்தின் அமைப்பு: சிற்பக்கலையின் மேன்மையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள நவரங்க மண்டபம் என்று அழைக்கப்படும் முன் மண்டபத்தில் 12 இராசிகளுக்கு 12 கலைநுட்பம் மிகுந்த மிகப் பெரிய தூண்கள் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றிலும் 27 நட்சத்திரங்களை குறிப்பிடும் 27 தூண்கள் மண்டபத்தின் மேற்கூரையைjjத் தாங்கி நிற்கின்றது. முற்றிலும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட இம்மண்டபத்தைக் காணக் கண் கோடி வேண்டும். வெறும் கடவுளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு அதில் உள்ள கலை நுணுக்கமும், நுண்ணிய வேலைப்பாடுகளும் தெரிய முடியாது போகலாம். தூண் சிற்பங்கள்: மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்தாற் போல் 12 உள்புறத் தூண்கள் அந்தந்த ராசிக்கு உரிய கடவுளர் உருவங்கள் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது. ஒவ்வொரு தூணிலும் ஒரு புராணக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. மேசராசி தூணில் ரிசபக் காளை வாகனத்தில் அமர்ந்து எதிர் தூணில் உக்கிரமாய்க் காட்சி தரும் நரசிம்மரை சாந்தப்படுத்துவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிதுனராசி தூணில் மிதுன ராசிக்கு உரிய ரதியும், மன்மதனும் கரும்பு வில்லோடு காட்சி தருகின்றனர். கடகராசிக்காரராகிய முருகக்கடவுள் கோவனத்துடன் தண்டு ஊன்றி நிற்கும் காட்சி முன்னோர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு. இத்தூணில் மேற்குப் பக்கம் அர்த்தனாரீஸ்வரரும், கிழக்குப் பக்கம் பூக்கூடையுடன் முருகன் அடியாரும் உள்ளனர். பூக்கூடை பனை ஓலையால் செய்யப்பட்டது போலவே நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. சிம்மராசிக்கு உரிய தூணில் பத்திரகாளியம்மன் தலைகவிழ்ந்து காட்சியளிக்கின்றாள். அதற்கு நேர் எதிரில் மகரராசித் தூணில் சிவதாண்டவக் காட்சி அருமையாய் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் கலை நுணுக்கம் காண்போரை வியப்படையச் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளாது. துலாம் ராசித் தூணில் சூரியன் தேர் பூட்டிய ரதத்தில் செல்வது போன்ற சிற்பமும் சூரியனின் முழு உருவமும் 6 அடி உயரத்தில் கலை நுணுக்கத்துடன் வடித்துள்ளது பண்டைய தமிழ் மக்களின் கலைத் திறத்திற்கு எடுத்துக்காட்டு. கன்னிராசி தூணில் வாமன அவதாரக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. விருச்சிக ராசித் தூணில் சந்திரன் குதிரை பூட்டிய தேரில் ஏறிச் செல்வது போன்று முழு உருவம் தத்ரூபமாய் வடிவமைக்கப்பட்டுள்ள காட்சியைக் காண கண் கோடி வேண்டும். நடராஜரும், மீனாட்சியம்மையும் மகர ராசித் தூணிலும் நடராஜர் பாதத்திற்கு கீழ் காரைக்கால் அம்மை பேய் உருவம் கொண்ட காட்சி சிற்பக்கலையின் அழகுக்கு அழகு. கும்ப ராசிக்கு உரிய தூணில் சுப்பிரமணியர் உருவமும் வள்ளி, தெய்வானை உருவங்களும் கலையழகுடன் செதுக்கப்பட்டுள்ளது. கல்லிலே கலை வண்ணம் கண்ட தமிழனின் கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாய் உமையொரு பாகன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் சக்தியும் , சிவனும் அர்த்தனாரீஸ்வரராக செதுக்கப்பட்டுள்ளது கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாகும். நடுவில் உள்ள தூண்களில் இக்கோயில் சிற்பங்கள் செதுக்க உதவிய அரசர்கள், அவர்களின் மனைவிமார்கள், மன்னர்களின் தளபதிகள் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கலைக்கண் கொண்டு நோக்கின் இவர்கள் உண்மையிலேயே நிற்பது போன்ற காட்சி புலப்படுகின்றது. வெளிப்பிரகாரத்தில் உள்ள தூண்களில் நுழைவு வாயில் பக்கத்தில் உள்ள தூணில் மீனாட்சியம்மை திருமணக் காட்சியும் அதை தென்திசை அகத்தியர் பார்ப்பது போன்ற காட்சி 30 அடி அளவில் ஆறு தூண்கள் அப்பால் செதுக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலை வடிவமைப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் அறிவியல் தொழில் நுட்பத்திற்கு சான்றாகவும் உள்ளது. அரசர்கள் புலியை வேட்டையாடிய காட்சி பல தூண்களில் இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது. சனிபகவான் காக்கை வாகனத்தில் அமர்ந்திருக்கும் காட்சி சிறப்பானதாகும். சிவபெருமானின் அடியையும், முடியையும் காண பன்றியாகவும், அன்னமாகவும் சென்ற காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கலை நுணுக்கத்துடன் வெளிநாட்டில் இச்சிற்பங்கள் இருந்திருக்குமேயானால், அவர்கள் இந்தச் சிற்பங்களின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்திருப்பர். எதையும் பக்தி கண்ணோட்டத்துடனே பார்க்கும் நம் மக்கள் அச்சிலைகளில் கடவுளை மட்டும் பார்த்தார்களேயன்றி அதில் உள்ள கலை நுட்பத்தையும், சிற்பியின் கலைத் திறனையும், அரசர்களின் முயற்சியையும் காணவில்லையாதலால் இச்சிற்பக் கலையின் பெருமை உலகோர்க்கு தெரியாமல் போய்விட்டது. ஒருசில இடங்களில் ஆண், பெண் உடல் உறவை சித்தரிக்கும் சிற்பங்கள் சிதைக்கப்பட்டு காணப்படுகின்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். மன்னர்கள் புலியை வேட்டையாடிய காட்சி, காட்டுப் பூனை அன்னப்பறவையை வேட்டையாடிய காட்சி தத்ரூபமாக வடிவமைக்கபட்டுள்ளாது. இக்கோயிலின் நவரங்க மண்டபத்திலும் அர்த்த மண்டபத்தில் எல்லாக் கடவுளர் சிற்பங்களும் உள்ளது. இக்கோயில் ஒரே மன்னர்களால் கட்டப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனலாம். அர்த்த மண்டபம் திருமலை மன்னரால் கட்டப்பட்டிருக்கலாம். அர்த்த மண்டப முன்புறத் தூண்களில் ஒரு தூணில் அரசரும் அவரது மனைவிமார்கள் இருவரும் மற்ற இரண்டு தூண்களில் அரசர் மற்றும் அவரது மனைவிமார்கள் செதுக்கப்பட்டுள்ளனர். அரசருக்குப் பக்கத்தில் உள்ள தூணில் அரசரின் குல குருவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. திருமாலின் அவதார காட்சிகள் பல தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமால், இந்திரன், பலராமன், அனுமன், நரசிம்மர், வாமனர், வராகம் என பல சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம் எனப்படும் உள்மண்டபத்தில் 12 அடி உயரத்தில் 84 தூண்களில் பல நுண்ணிய இயற்கை காட்சிகள் வியக்க வைக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் முருகனின் வாகனமாகிய மயில், யானை, குதிரைகள் ஆகியவை நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு புராணச் செய்தியைக் கூறுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 அடி உயரமுடைய தூண்களின் மேல் யாழிகள் செதுக்கப்பட்டு மேற்கூரையைத் தாங்குவதாக உள்ளது.