சயன துர்க்கை அம்மன்!

119

சயன துர்க்கை அம்மன்!

துர்க்கை அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

வாழ்வில் மேன்மை பெறவும், துன்பம் நீங்கவும் துர்க்கா தேவியை வணங்க வேண்டும் என்றும், மங்கள ரூபிணியான அவள் தரிசனம் கண்டாலே சர்வ மங்களங்களும் உண்டாகும் என்றும் நமது முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். அந்த துர்க்கையம்மனை ஆலயங்களில் பெரும்பாலும் கோஷ்ட தெய்வமாக சந்நிதி கொண்ட நிலையில் சிவதுர்கையாகவோ அல்லது விஷ்ணு துர்கையாகவோ தரிசிக்கலாம். அபூர்வமாக சில இடங்களில் தனிக்கோயிலிலும், அமர்ந்த கோலத்திலும் காணப்படுவது உண்டு.

ஆனால் அந்த அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. திருநெல்வேலிக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் கங்கைகொண்டான் வழி, பராஞ்சேரி அருகில் உள்ளது செழியநல்லூர்.

பல வருடங்களுக்கு முன் செழியநல்லூர் பகுதியை செழியன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் காவல் தெய்வமாக வடக்கில் செழிய அம்மனையும், கிழக்கில் தர்மசாஸ்தாவையும்,தெற்கில் வலம்புரி விநாயகரையும், மேற்கே தன்னுடைய குல தெய்வமாகிய வன துர்க்கையையும் அமைத்து தினந்தோறும் குடும்பத்துடன் வழிபட்டு வந்தான்.

ஒருமுறை வனதுர்க்கை வழிபாட்டிற்கு வந்த தருணத்தில் அரசனின் எட்டு வயது பெண் குழந்தை வீடு திரும்பாமல் வனத்திலேயே தங்கிவிட்டது. தனது பெற்றோரைக் காணாது தவித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தையின் நகைகளை அபகரிக்க வந்தான் ஒரு திருடன். அச்சத்தில் அலறிய அந்தக் குழந்தை ஓடிவந்து வனதுர்க்கை அம்மனை கட்டிக்கொண்டது.

திருடன் குழந்தையைப் பிடித்து இழுக்க, குழந்தையுடன் அம்மனின் சிலையும் கீழே சாய்ந்தது. அப்போது துர்க்கை பிரசன்னமாகி திருடனை வதம் செய்ததுடன், குழந்தையையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டாள். அரசனின் கனவிலும் அந்தத் தகவலைத் தெரிவித்தாள்.

இப்போதும் அந்த அன்னை சயனக் கோலத்திலே அந்தக் குழந்தையை கல் ரூபத்தில் தனது பக்கத்தில் வைத்து காத்தருள்கிறாள் என்கின்றனர். மேலும் துர்க்கையம்மன் நாகராஜபரிவார தேவதைகளுடன் தல விருட்சமாகிய வேப்பமரத்தின் அடியில், சயனக் கோலத்தில் வெட்ட வெளியில் மேலே வானத்தை பார்த்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

இந்த வேப்பமரத்தின் இலைகள் கசப்பதில்லை என்பது மற்றொரு சிறப்பு. இவற்றை உண்பவருக்கு நோய்கள் தீரும் என்பதும் நம்பிக்கை. இவ்வாலயத்தில் விஷ்ணு துர்க்கை, வலம்புரி விநாயகர், பாலசுப்ரமண்யர் சந்நிதிகளும் உள்ளன.

இவ்வாலயத்தில் ஆனி மாதத்தில் உத்திராட நட்சத்திரத்தில் வருஷாபிஷேகமும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரியும், மாசி மாதத்தில் சிவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சயன துர்க்கையை வழிபடுவோருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். தீராத நோயும் தீரும்.