சொர்ணாகர்ஷன பைரவர் வரலாறு தெரியுமா?

75

சொர்ணாகர்ஷன பைரவர் வரலாறு தெரியுமா?

வேம்புச்சித்தர் ஆசிரமம் எனும் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் சித்தர் பீட திருவாலயத்தில் தனிக்கோவிலில் இருந்து அருள்பாலித்து வருபவர்தான் சொர்ணாகர்ஷன பைரவர்.

சகல ஐஸ்வர்யங்களை தரும் திருவிசநல்லூர் சொர்ணாகர்ஷன பைரவர் கோவில்
திருவிசநல்லூரில் சொர்ண பைரவி உடனாய சொர்ணாகர்ஷண பைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். பைரவர் வழிபாடு என்பது கால பைரவர் தொடங்கி அஷ்ட பைரவர், அஷ்டாஷ்ட பைரவர் என தொடர்ந்து சொர்ணாகர்ஷன பைரவரில் முடிவது.

பைரவ உபாசகர் வேம்பு சித்தரின் தியானத்தில் திருக்காட்சி தந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவிசநல்லூர், சொர்ணபுரியில் வினை நீக்கும் வேம்புச்சித்தர் ஆசிரமம் எனும் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் சித்தர் பீட திருவாலயத்தில் தனிக்கோவிலில் இருந்து அருள்பாலித்து வருபவர்தான் சொர்ணாகர்ஷன பைரவர்.

இங்குள்ள சொர்ணாகர்ஷன பைரவர், நினைத்ததை நினைத்தபடி, கேட்டதை கேட்டபடி தரும் கற்பக மரத்தின் அடியில் கங்கா ஜடா முடியில் சந்திர பிறை சூடி நான்கு திருக்கரங்களுடன், அஜாமிளா தேவி எனும் சொர்ண பைரவியை தமதுமேல் திருக்கரத்தால் சற்று அணைத்தவாறு அமர்ந்துள்ளார். இருவரும் புன்னகை தவழும் திருமுகங்களுடன் பத்ர பீடத்தின் மீது உடன் அமர்ந்து அருள் பொழியும் சர்வானந்த கோலாகலராக திகழ்கிறார்கள்.

சர்வாபரணங்கள் பூண்டு சர்வ அலங்காரங்களோடு குபேர சம்பத்தையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சொர்ணத்தையும், தன, தானியங்களையும் தன்னகத்தே குவித்து வைத்திருப்பவர். மிகவும் வரப்பிரசாதி. ஆகவே இவரை வணங்குபவர்கள் தாமும் செல்வந்தராக இருப்பதுடன் மற்றவர்களையும் செல்வந்தராக மாற்றும் இயல்பு கொண்டவராக திகழ்வர்.

கோவில் அமைவிடம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் கற்கடேஸ்வரர் கோவில் சாலை சொர்ணபுரியில் இக்கோவில் அமைந்துள்ளது. (யோகிநாதசுவாமி திருக்கோவிலுக்கும் கற்கடேஸ்வரர் கோவிலுக்கும் இடையில்). நினைத்ததை நினைத்தபடி தருகின்ற கற்பக விருட்சத்தின் அடியில் பத்ர பீடத்தின் மீது அம்மையும், அப்பனும் சர்வானந்த கோலாகலத்தில் அமர்ந்தபடி சொர்ணகால பைரவர் வலது திருப்பாதத்தை மடித்து இடது திருப்பாதத்தை தாமரை மலரில் பதித்தவாறும், சொர்ண பைரவி அம்மை தம்மிரு திருப்பாதங்களையும் தொங்கவிட்டபடி தாமரை மலரில் பாதத்தை பதித்தவாறு அமர்ந்திருப்பதும் விஷேசமாகும்.

சொர்ணகால பைரவர் தம் மடியில் பூரண அம்ருத கும்பத்தை வைத்திருப்பது வேண்டுபவர் வேண்டியபடி அனைத்து கோரிக்கையையும் நினைத்தது நினைத்தபடி, கேட்டது கேட்டபடி தந்து அருளுவதோடு நோய் நொடி இல்லாத நிலையையும், சர்வ சித்தியையும் தருவேன் என்பதாகும்.

சொர்ண கும்பம்:

சொர்ண பைரவி தம் மடியில் ஒரு திருக்கரத்தால் சொர்ண கும்பத்தை பிடித்தபடி மறு திருக்கரத்தால் தன்னை தேடி வரும் அன்பர்களின் தரித்ரிய நிலையை நீக்கி சொர்ணத்தை அள்ளி, அள்ளி வழங்கி சொர்ண சித்தியை தருவேன், குடும்ப ஒற்றுமையை வழங்குவேன், அனைத்து செல்வங்களையும் வாரி, வாரி வழங்குவேன் என்பதாகும்.

தம் திருக்கரத்தில் வைத்திருக்கும் டமருகத்தால் பெரும் ஒலியை எழுப்பி அந்த சப்தத்தில் லயித்து தம்மை திரும்பி பார்க்கும் தன்னடியவர்களை நாக பாசத்தால் பிடித்து இழுத்து அவர்களின் சாப, பாப, தோஷங்களை திரிசூலத்தால் நீக்கி அனைத்து நலன்களையும் நிறைவாய் வழங்கி தகுதி இருந்தால் மோட்சமும் தருவேன் என்பதாகும்.

குருவின், குபேரனின் திசையான வடக்கே அமர்ந்து இறை சக்தி நிறைந்த ஈசானியத்தை நோக்கியவாறு அமர்ந்திருப்பது குருவின், குபேரனின் அருளை பரிபூரணமாக வழங்குவதோடு ஈசானியத்தில் நிறைந்த இறை சக்தியை வருபவர் எளிதாக பெறும்படி அமைக்கப் பட்டுள்ளது மிகவும் சிறப்பானது.

சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாடு என்பது வழிபடுபவரின் வாழ்க்கையில் தரித்திரம் தலை காட்டாது காத்து தன, தான்யம், சொர்ணம் முதலிய செல்வ செழிப்பை தரும் சிறப்பு கொண்டது. சொர்ணாகர்ஷன பைரவர், 64 பைரவர்களுக்கும் அப்பாற்பட்டவர். அஷ்ட லட்சுமிகளுக்கும், குபேரருக்கும் நவ நிதிகளையும் கொடுக்கும் அதிபதி. வீட்டு பூஜையறைகளிலும், வழிபாட்டு தலங்களிலும், தங்க, வைர நகை வியாபாரம் செய்யும் கடைகளிலும் வைத்து வழிபட மிகவும் உகந்தவர்.

இப்பெருமானை வீட்டில் வைத்து தினசரி மூன்று வேலைகளிலும் வழிபட்டு வர எந்த கஷ்டங்களும் நெருங்காது. கஷ்டங்களும் வராது. தொட்டது துலங்கும். சொர்ணம் கொழிக்கும். பவுர்ணமி தோறும் முறைப்படி உள்ளன்போடு இப்பெருமானை பூஜித்து மந்திரம் ஜெபித்து வர தலைமுறை தலைமுறையாக நீடித்து நிற்கக்கூடிய நிறை செல்வம் சேரும்.

வழிபட வேண்டிய நாட்கள்:

திங்கட்கிழமை மாலை நேரங்கள், மாத பிரதோஷம், தினசரி பிரதோஷ காலங்கள், பவுர்ணமி மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்கள், திருவாதிரை நட்சத்திர நாட்கள் இவரை வழிபட மிகவும் உகந்த நாட்கள்.

அதேபோல் மாதப்பிறப்பு, பிறந்த நட்சத்திர நாட்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், வியாழக்கிழமை மாலை நேரம், தேய்பிறை அஷ்டமி, அமாவாசை நாட்களிலும், ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷ நட்சத்திர நாட்களிலும் இங்கு வந்து மஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

இனம் புரியாத பயம் தானாய் விலகும். சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள் குறையும். தீயவை அனைத்தும் விலகும். நல்லன அனைத்தும் நடக்கும். சனிக்கிழமைகளில் வழிபட சனிக்கிரக தோஷங்கள் யாவும் விலகும். சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலை, வில்வ மாலை, சந்தன மாலை, மஞ்சள் செவ்வந்தி மாலை சாற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.

சிறப்பு மூலிகைகளை கொண்டு ஹோமம்:

இவ்வாலயத்தில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பவுர்ணமி நாட்களில் காலை வேளையில் கால பைரவர், அஷ்ட பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமம் சர்வ காரிய சித்தி, சொர்ண சித்தி தரும் சிறப்பான மூலிகைகளை கொண்டு நடத்தப்படுகிறது. இதில் கலந்து கலந்து கொண்டு குருவருளையும், இறைப்பேரருளையும் பெற்றுச்செல்லலாம்.