24 மணி நேரமும் திறந்திருக்கும் முனியப்பன் கோவில்!
சேலம் மாவட்டம் வெண்ணங்கொடியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த முனியப்பன் கோவில். இங்கு அருள்பாளிக்கும் முனியப்பன் கோவில் 500 வருடங்களாக இருக்கும் பழம்பெரும் கோவில் ஆகும்.
ஆலய வரலாறு:
முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். பின்னர் தேவி பராசக்தி அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவாகி கலியுகத்தில் மக்களைக் காப்பதற்காக பூமிக்கு வந்தனர்.
இவர்களது அம்சமாக விளங்குபவர் தான் இந்த முனியப்பன். இவர் கனல் கக்கும் வீரக் கண்களும், அருள் ஒளிரும் மேனியழகும், அஞ்சேல் என அபயம் காட்டும் அருளழகும் பொங்க விளங்குகிறார். நீண்டதூர பயணம் புறப்படுபவர்கள் தங்கள் வாகனங்களுடன் இங்கு வந்து முனியப்பனை வணங்கிய பிறகு பயணம் செல்கின்றனர். தங்களுடன் பாதுகாப்பாக அந்த முனியப்பனே வருவதாக நம்புகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது.
இரவில் காவல் காக்கும் முனியப்பன்:
சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் இவர், இரவில் சேலம் நகரின் காவல் பணிக்கு செல்வதாக நம்பப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து டில்லிக்கு செல்லும் லாரி டிரைவர்கள் விபத்தின்றி சென்று வர முனியப்பனை வேண்டிக் கொள்கின்றனர். இரவு நேரங்களில் லாரிகள் அதிகம் வரும் என்பதால் கோயில் 24 மணிநேரமும் திறந்திருக்கிறது.
முனியப்பன் ஸ்லோகம்:
ஓம் ஹம் ஜடா மகுடதராய
உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய
சத்ரு சம்ஹாரனாய
ஜடா முனீஸ்வராய நமஹ
இந்த துதியை தினமும் காலை 3 முறை துதித்து வெளியே செல்வது நல்லது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள கிராம கோயிலுக்கு சென்று முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இத்துதியை 27 முறை அல்லது 108 முறை துதித்தால் உங்களுக்கு எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை ஏவல்களின் கடுமையான பாதிப்புகள் நீங்கும்.
வீட்டில் அண்டியிருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும். உடல் நலக்குறைவு, மனகுழப்ப நிலை நீங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும். ஊரில் முனீஸ்வரர் கோயில் இல்லாதவர்கள் வீட்டிலேயே முனீஸ்வரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை துதித்து வழிபடலாம்.
