சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்!
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலானது முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு. இது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கிமீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் முருகன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் இவர் சிவனுக்கே ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்ததால் இங்கு மூலவர் குருவாக அருளுகிறார். தகப்பன்சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்கு தமிழில் உள்ள 60 ஆண்டுகளை விளக்கும் விதமாக 60 படிகள் உள்ளது. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் மலை மீது இருப்பது சிறப்பு ஆகும். இங்கு ஐயப்பன் கோவில் போல தமிழ் வருட பிறப்பில் படி பூஜை செய்யப்படுகிறது. ஆறுபடை வீடுகளில் இங்கு தான் முருகன் உயராமாக உள்ளார். சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது சிறப்பு ஆகும். முதல் 3 படை வீடுகளில் சிவபெருமான் தனியாக எழுந்தருளுகின்றார்.
ஆனால் இங்கு முருகனே சிவபெருமான் வடிவில் அருளுவது சிறப்பு ஆகும். இங்கு மூலவருக்கு வாகனமாக யானை உள்ளது. இங்குள்ள முருகனுக்கு அலங்காரம் சிறப்பு பெற்றது. விபூதி அபிஷேகத்தின் போது பழுத்த ஞானியாக காட்சி தருகிறார். பழனி போலவே இங்கும் முருகன் மட்டும் தனித்து உள்ளார். இங்கு ஸ்தல விருக்ஷம் நெல்லி ஆகும். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும் கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது.
சுவாமிநாதசுவாமி கோயிலுக்கு மற்றொரு பெயரும் உண்டு. திருவேரகம் என்றும் இந்தக் கோயிலானது அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால், சுவாமிமலை என்று பெயர் நிலைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என்று பெயரில் உள்ளதால், இந்தக் கோயிலானது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதரும், நக்கீரரும் இந்த ஊரில் முருகனைப் போற்றி பாடல்கள் பாடியுள்ளனர்.
ஐந்து நிலையுடன் கூடிய ராஜகோபுரம் தெற்கு நோக்கி உள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரம் ஆகும்.கொடி மரத்தின் அருகில் கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார். உள் சுற்றில் தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோரது சிலைகள் உள்ளன. சுவாமிநாத சுவாமியின் சன்னதிக்கு எதிராக மயிலுக்குப் பதிலாக இந்திரன் அருளிய யானை வாகனம் உள்ளது. கருவறையில் முருகன் வலது கரத்தில் தண்டம் ஏந்திய நிலையில் ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார்.
