திங்களூர் சந்திரன் கோவில்

214

தமிழ்நாட்டிலுள்ள நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது திங்களூர் சந்திரன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

திங்களூர் சந்திரன் கோவில்
திங்களூர் சந்திரன் கோவில்
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திங்களூர், தமிழ்நாட்டிலுள்ள நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது. மேலும், இத்தலம் ஒரு தேவார வைப்புத் தலமும்கூட. திருநாவுக்கரசரும், சுந்தரரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைக் குறிப்பிட்டுள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரத் தலம் என்ற பெருமையும் திங்களூருக்கு உண்டு.

இறைவன் பெயர்: கைலாசநாதர்

இறைவி பெயர்: பெரியநாயகி

தல வரலாறு

நவக்கிரக ஸ்தலங்களில் திங்களூர் இரண்டாவது ஸ்தலம். தட்சன் தனது 27 புத்திரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 மனைவிகளும் தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த ஸ்தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான். ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து சந்திரனின் சாபத்தைப் போக்கினார்.

சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்றதால், இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஒளி மூலவர் கைலாசநாதர் திருமேனியில் விழுவதை இன்றும் காணலாம். பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில், கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதை தொடர்ந்து தனி சன்னதியில் அமைந்துள்ள சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.

இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனை அபிஷேகம், அர்ச்சனை, நெய் விளக்கு ஏற்றி வழிபட, சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பெளர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும்.

திங்களூர் தலத்தில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்துவந்தார். ஒருமுறை, திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், தமது பெயரில் பாடசாலை, கோசாலை, தர்மசாலை, தண்ணீர்ப்பந்தல், அன்னசாலை எனப் பலவும் இருப்பது கண்டு வியப்புற்றார். இவற்றை அமைத்தவர் அப்பூதி அடிகள் என்பதை அறிந்து அவர் வீட்டுக்குச் சென்றார்.

திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக்கொண்டார். அதற்காக, தோட்டத்துக்குச் சென்று வாழை இலை கொண்டுவருமாறு, சிறுவனான தமது மகனை அப்பூதி அடிகள் அனுப்பிவைத்தார். ஆனால், வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்துவிட்டான். மகன் இறந்தது தெரிந்தால், அப்பருக்கு அமுது படைப்பது தடைபடும் என்று கருதிய அப்பூதி அடிகள், மகன் இறந்ததை மறைத்து அப்பரை உணவு உண்ண அழைக்கிறார்.

அப்பர் தம்முடன் அப்பூதி அடிகளின் மகனையும் உணவு அருந்த அழைக்க, அப்பூதி அடிகள் மகன் இறந்துவிட்ட தகவலைச் சொல்கிறார். மகன் இறந்ததைக் கேட்ட அப்பர் பெருமான், “ஒன்று கொலாம்” என்று தொடங்கும் பதிகம் பாடி, இறந்த சிறுவனை உறக்கத்தில் இருந்து விழித்தவனைப்போல் எழச்செய்து உயிர்ப்பிக்கிறார். இந்த அற்புதம் நிகழ்ந்த தலம் திங்களூர் ஆகும். திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் “விடம் தீரத்த திருப்பதிகம்” என்று போற்றப்படுகிறது..

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கி உள்ள ஆலயத்துக்குத் தெற்கிலுள்ள வாயிலே பிரதான நுழைவாயிலாக உள்ளது. கருவறையில் இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அம்பாள் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு முன் சந்திர தீர்த்தம் உள்ளது. வெளிப் பிராகாரம் வலம் வரும்போது, விஷம் தீர்த்த விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி, கோஷ்டத்தில் அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி சந்நிதி மற்றும் சண்டிகேஸ்வரர் உடன் சண்டிகேஸ்வரி சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. இத்தலத்தின் ஷேத்திர பாலகரான சந்திரன், மேற்கு திசைநோக்கி இறைவனைப் பார்த்தபடி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.

திருக்கோயில் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதி அடிகள், அவருடைய மனைவி, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோருடைய மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குழந்தைகளுக்கு முதன்முதலாக அன்னம் ஊட்டுவதற்கு தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.

இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திருப்பழனம் (பாடல் பெற்ற தலம்) ஊரை அடுத்து சிறிது தூரம் சென்றால், திங்களூர் செல்லும் சாலை பிரிகிறது. அதில் சென்று ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.

ஆலய முகவரி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்,
திங்களூர்,
திருப்பழனம் அஞ்சல்,
வழி திருவையாறு,
திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613 204.