திருநல்லம் ஒரு முறை போய்ப்பாருங்கள்.

478

நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் உரைத்தார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்ச லோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்.

சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார்.

அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி தோன்றினாள்.

அவர்கள் இருவரும் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் கேட்டார்கள். இழி குலத்தோர் எனக்கருதி அறியாமையால் அங்கிருந்தவர்கள், இறைவனுக்கு தண்ணீர் தர மறுத்தனர். சிவனும், அம்பிகையும் உலைக்களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர்.

சிலையை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி, ‘உலைக் களத்தில் ஏது தண்ணீர்?. வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது, குடியுங்கள்’ என்று அந்த தம்பதிகளிடம் நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகிவிட்டனர்.

மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும், சிவகாமி அம்பாள் சிலையும் ஆக மாறிப்போனார்கள். அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.

‘இவ்வளவு அதி அற்புதமான சிலையை எவ்வாறு செய்ய முடிந்தது?’ என்று சிற்பியைக் கேட்டான். சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய்யுரை கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது.

அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது. தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும், சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான்.

‘இவ்வூர் ஆலயத்தில் உள்ள வைத்தியநாத சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால் குணமடையலாம்’ என்று ஈசன் அருளினார். அதன்படி செய்து மன்னன் குணமடைந்தான்.

அந்த நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் நீங்கள் பார்க்க வேண்டும். உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான். அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது.

கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படும் திருநல்லம் என்னும் ஊரில் உள்ள பாடல் பெற்ற தலம் தான் இந்த கோவில்.

இறைவர் திருப்பெயர் : உமா மஹேஸ்வரர், மாமனி ஈஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : மங்கள நாயகி, அங்கவள நாயகி, தேக சவுந்தரி

தல மரம் : அரசமரம், வில்வம், பிரம்ம தீர்த்தம்

தீர்த்தம் : பூமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான கூபம்

வழிபட்டோர் : புரூரவஸ் மன்னன், எமதர்மன், நந்தி பகவான், அஷ்டதிக் பாலகர்கள்,

சித்தர்கள், பூமாதேவி, வரகுணபாண்டியன்

தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்

இத்தலத்தை பூர்வ புண்ணியம் இருந்தால் தான் தரிசிக்க முடியும் என்பது அப்பர் மெருமானின் அருள் வாக்கு.

இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோயில் தல விருட்சமாக உள்ளது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 97 வது தேவாரத்தலம் ஆகும்.

கோயில் ஆயிரம் வருடத்து கோயில், ராஜராஜனும், ராஜேந்திரனும், குந்தவையும் இரண்டாம் ராஜராஜனும், குலோத்துங்கனும் வந்து போயிருக்கிற விஷயம், கல்வெட்டுகளால் தெரிந்து கொள்ளலாம்.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும். குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்…

எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள் கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்கள்.

அந்த வணக்கம் சிலை செய்ய சொன்ன அரசனுக்கா, செய்த சிற்பிக்கா, அல்லது இவர்கள் எல்லாவற்றையும் இயக்கி தன்னை உள்ளடக்கிக் கொண்டியிருக்கிற சிவனுக்கா யோசியுங்கள். திருநல்லம் ஒரு முறை போய்ப்பாருங்கள்.

திருவிடைமருதூரில் இருந்து தெற்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாவடுதுறையில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், எஸ்.புதூரில் இருந்து தெற்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது திருநல்லம்.