திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்!
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை என்ற ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இத்தலத்தின் புராணக் கதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்…
ஆலயத்தின் சிறப்பு:
இத்தலத்தின் புராணப் பெயர் உடையார் கோவில் ஆகும். இவ்வாலயத்தில் மூலவர் சாரபரமேஸ்வரர் என்கிற செந்நெறியப்பர் ஆவார். அம்பாள் ஞானாம்பிகை என்கிற ஞானவல்லி என்ற பெயரில் அருள்பாளிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் மாவிலங்கை ஆகும். தீர்த்தம் மார்கண்டேயன் தீர்க்கும், ஞான தீர்த்தம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம் ஆகும்.
ஆலயத்தின் தனிச்சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இங்குள்ள பைரவருக்கு அப்பர் தனியாக தேவார பாடல் பாடியுள்ளார்.
இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன.இங்கு தலவிருட்சமான மாவிலங்கை வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
ஆலய அமைப்பு:
வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பக்கம் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் அவனது துணைவியராக ஸ்ரீ ஞானவல்லி அம்பாள் அமைந்துள்ளதாக புராணச்செய்தி மூலம் அறிய முடிகிறது. உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தெட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன.
மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதி ஆகும். இவருக்கு அடுத்து ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சன்னதியும் பாங்குற அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் சோழ மகாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.
செந்நெறியப்பர்:
மனிதனுக்கு செம்மை தரும் நெறியை – முக்தி நெறியை அளித்தருளும் இறைவன் வெளிப்படும் தலமிது என்ற பொருளில் திருச்சேறை பெருமானுக்கு “”செந்நெறியப்பர்’ என்ற பெயர் வழங்கப்படுவதும் சிறப்பானதாகும். பஞ்ச க்ஷேத்திரம் எனும் பெருமாள் கோயில் அருகில் இருப்பதால் நமது இறைவன் ஸ்ரீ செந்நெறியப்பரையும் ஸ்ரீ சாரபரமேஸ்வர் என அழைக்கலாயினர்.
நவக்கிரஹத்தை தரிசித்து, நடராஜபெருமான் சன்னதிக்கருகில் சென்றால் பைரவர் அருள்காட்சியளிக்கிறார். எந்த சிவாலயத்திலும் இல்லாத தனி சிறப்பு இங்குள்ள பைரவருக்கு அப்பரால் பாடல் பெற்ற தனி தேவார பாடல் இங்கு மட்டும் உள்ளது. மற்றும் இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும்.
சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறும் தேவாரப் பாடலாகும். ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று வடைமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரஹ தோஷங்கள் நீங்குதல் ஆகியவற்றின் பிரார்த்தனா மூர்த்தியாய் ஸ்ரீ பைரவர் விளங்குவது மிக சிறப்பான அம்சமாகும்.
புராணக் கதை:
இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், விநாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும். (ரிண- கடன், விமோசனம் – நிவர்த்தி. கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் – ரிண விமோசன லிங்கேஸ்வரர்) மனித பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய ஜீவிதத்தில் சுகமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள்.
ஒருவர் பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வியுடையவராகவும் இருந்தாலும் வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேர்ப்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆகும். இவ்விறைவர், ரிண விமோசன லிங்கேஸ்வரரை 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிக்ஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை நிறைவேறும்.
பிரார்த்தனைகள்:
கடன், பிணி தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பொருள் வசதி படைத்தோர் அன்னதானம் செய்தும், திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
