ஊதியூர் வேலாயுத ஸ்வாமி ஆலயம்!
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஊதியூர் வேலாயுதசுவாமி திருத்தலம். கொங்கண சித்தர் தவம் இயற்றி முருகன் சிலை வடித்த தலம், திருப்புகழ் பாடல்பெற்ற தலம், இயற்கையான சூழலில் அரிய மூலிகைகள் கொண்ட மலை என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, இந்த கோவில் வரலாற்றை இத்தொகுப்பில் பார்ப்போம்.
ஆலய வரலாறு:
ஊதியூர் என இவ்வூர் அறியப்பட்டாலும், இதன் பழமையான பெயர் ‘பொன்னூதி மலை’ ஆகும். காரணம், மேலைக்கொங்கு நாட்டினை ஆட்சி செய்த, உதியர்கள் குலச்சின்னமாக ‘உதி’ என்ற மரம் விளங்கியது. இம்மரத்திற்கு ஒதி, ஓதி என்ற பெயர்களும் உண்டு. மேலும், இந்த உதி மரத்தில் பூக்கும் பூக்கள், பொன்னிறமாய் மின்னுமாம். இம்மரங்கள், இம்மலைகளில் நிறைந்திருந்தன. அதனால் ‘பொன் ஒதி மலை’ என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. அதுவே மருவி ‘பொன்னூதி மலை’யானதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
போகரின் சீடரான கொங்கணச் சித்தர், தான் தவம் புரிய ஏற்ற இடத்தை தேடிய போது, இம்மலையைக் கண்டார். உடனே அவருக்கு இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பஞ்சபூத தலமாகவும், அரிய கற்கள், பாறைகள் நிறைந்த இடமாகவும் இது இவருக்கு புலப்பட்டது. இதனால் இம்மலையிலுள்ள, சந்திரகாந்தக் கல் தூணின் மீது அமர்ந்து தவம் இயற்றினார்.கொங்கணர் இம்மலையில், வாழ்ந்தபோது, மக்களின் வறுமையை நீக்க விரும்பினார். மலையில் கிடைத்த அபூர்வ மூலிகைகளை கொண்டு, அவற்றை நெருப்பிலிட்டு, மண்குழல் கொண்டு ஊதி, அதைப் பொன்னாக்கினார். அதனால் இம்மலைக்கு ‘பொன்னூதி மலை’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆலயத்தின் அமைப்பு:
சாலையில் இருந்து பார்க்கும்போது, அழகிய மலை மீது முருகன் ஆலயம் கண்ணுக்கு விருந்தாக தெரிகிறது. சுமார் 300 அடி உயரம்உள்ள இம்மலை 150 படிகளைக் கொண்டதாகும். அடிவாரத்தில், பாத விநாயகர், அனுமந்தராயர் சன்னிதிகள் உள்ளன. படியேறும்போது வழியில் உள்ள பாறையில் பழமையான விநாயகர் புடைப்புச்சிற்பமும், அதன் அருகில் இடும்பன் சன்னிதியும் உள்ளன. பொன்னூதி மலையின் நடுப்பகுதியில் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.
திருக்கோவில் நுழைவு வாசல் தென்புறம் அமைந்துள்ளது. கிழக்கில் ராஜகோபுரம் வாசலுடன் காணப்படுகிறது. கருவறையில், உத்தண்ட வேலாயுத சுவாமி, கிழக்கு நோக்கி ஐந்தடி உயரத்தில் காட்சி தருகின்றார். இவரின் கோலம் மேற்கு நோக்கிய பழனி ஆண்டவரை தரிசித்தவாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூலவரை கொங்கண சித்தர் உருவாக்கியதாக தலவரலாறு கூறுகிறது. இவருக்கு துணையாக விநாயகப் பெருமான் மற்றும் பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.
திருவிழாக்கள்:
இந்த ஆலயத்தில் பவுர்ணமி, சஷ்டி, பங்குனி உத்திர விழாக்கள் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி நாட்களில் நள்ளிரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.
