வறுமையை போக்கும் நல்லதங்காள் ஆலயம்

503

அண்ணன்-தங்கை பாசத்தின் வெளிப்பாட்டில், இறையருளால் பொலிந்த அன்புத் திருக்கோவிலே ‘நல்லதங்காள் திருக்கோவில்’ ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

அன்பே சிவம் என்பார்கள். அந்த சிவபெருமானின் மீது அன்பர்கள் வைக்கும் அன்பை ‘பக்தி’ என்கிறோம். அதுவே அன்பர்கள் மீது சிவ பெருமான் வைக்கும் அன்பை ‘கருணை’ என்கிறோம். நாயகன் மீது நாயகி வைக்கும் அன்பு ‘காதல்’, குழந்தை மீது தாய் வைக்கும் அன்பு ‘பாசம்’ எனப்படும். அதே போல அண்ணன்- தங்கை அன்புக்கும் இங்கே ஒரு உணர்வுப்பூர்வமான இடம் இருக்கிறது.

அண்ணன்-தங்கை பாசத்தின் வெளிப்பாட்டில், இறையருளால் பொலிந்த அன்புத் திருக்கோவிலே ‘நல்லதங்காள் திருக்கோவில்’ ஆகும். ஸ்ரீவில்லி புத்தூர் அடுத்துவரும் வத்திராயிருப்பு அருகில் உள்ளது அர்ச்சுனாபுரம். இப்பகுதியினை பதினைந்தாம் நூற்றாண்டில் ஆண்டுவந்தவர் மன்னர் ராமலிங்க சேதுபதி. இவருக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என இரு குழந்தைகள். பெற்றவர்களை சிறுவயதிலேயே பறிகொடுத்த நல்லதங்காள், தன் அண்ணன் நல்லதம்பியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள்.

காலங்கள் பல கடந்தன. அப்போது அப்பகுதியை நல்லதம்பி ஆண்டு வந்தான். அக்காலத்தில் பெண் களுக்கு ஏழு வயதிலேயே திருமணம் செய்துவிடுவார்கள். நல்லதம்பியும், தன் அன்பு தங்கையை, மானா மதுரைப் பகுதியை ஆண்டுவந்த மன்னன் காசிராஜனுக்கு மிகுந்த சீர்வரிசைகளுடன் மணம் முடித்துக் கொடுத்தான். தங்கையை பிரிய வேண்டிய நிலை வந்ததால் நல்லதம்பி கண்ணீர் வடித்தான். அண்ணனை பிரிந்து கணவன் வீட்டிற்குச் சென்று, நல்லமுறையில் குடும்பம் நடத்தி வந்தால், நல்லத்தங்காள்.

காசிராஜனுக்கும், நல்லதங்காளுக்கும் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. காலங்கள் கடந்தது. மானாமதுரையில் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் மழை பொய்த்துப் போனது. மக்கள் பலரும் வறுமையில் வாடினர். பலர் மாண்டு போயினர். நல்லதங்காள் குடும்பத்திற்கும் அந்த நிலை உருவானது. மக்களுக்கு உணவளித்து வந்த காரணத்தால், அவர்களின் செல்வம் கரைந்தது. நல்லதங்காளின் பிள்ளைகள் அனைத்தும் பசியால் வாடின.

நல்லதங்காள், தன் கணவரிடம், “பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன் அண்ணன் வீட்டிற்குச் செல்லலாம்” என்று அழைத்தாள். ஆனால் பெண் எடுத்த வீட்டில் தங்க காசிராஜன் மனம் ஒப்பவில்லை. அதனால் மனைவியையும், பிள்ளைகளையும் மட்டும் அனுப்பி வைத்தான்.

நல்லதங்காள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வந்தபோது, அவளது அண்ணன் இல்லை. வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தான். அண்ணி மட்டுமே வீட்டில் இருந்தாள். அவள் நல்லதங்காளை அவமானப்படுத்தி வெளியே அனுப்பினாள். இதனால் மனம் உடைந்த நல்லதங்காள், ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் வந்து முறையிட்டாள். பின்னர் அங்கிருந்த கிணற்றில் பிள்ளைகளை வீசி, தானும் விழுந்து உயிர்விட்டாள்.

இந்த நிலையில் மானாமதுரையில் மழை பொழிந்து, ஊர் செழிப்பானது. இதையடுத்து மனைவி, பிள்ளைகளை அழைத்துச் செல்ல வத்திராயிருப்பு வந்தான், காசிராஜன். அங்கு தன் மனைவியும், பிள்ளைகளும் இறந்து போனதை அறிந்த அவன், கிணறு இருந்த இடத்திற்குச் சென்று, மனைவி, பிள்ளைகளின் உடலை எடுத்து, பத்ரகாளியின் முன்பாக கிடத்தி நியாயம் கேட்டான்.

இதையடுத்து இத்தல அன்னை, நல்லதங்காள் அவளது பிள்ளைகளை தெய்வ நிலைக்கு உயர்த்தினாள். காசி ராஜனையும் தன்னுள் இழுத்துக்கொண்டாள். தங்கையின் முடிவு பற்றி அறிந்து பதறி வந்த நல்லதம்பி, பத்ரகாளி அன்னையிடம் அழுது தொழுதான். இதையடுத்து அவனும் அன்னையின் ஜோதியில் கலந்தான்.

இந்த ஆலயத்தில் மூலவராக பத்ரகாளி வடிவில் நல்லதங்காள் அருள்பாலிக்கிறாள். எதிரில் ஏழு குழந்தைகள் சன்னிதி உள்ளது. இங்கு படுகொலையான் எனும் திருநாமத்தில், தனி சன்னிதியில் அருள்கிறார், நல்லதம்பி. தரித்திர நிலை உள்ளவர்கள், பணம் கையில் தங்காதவர்கள், இத்தல அன்னையிடம் முறையிட்டு, 8 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும்.

அமைவிடம்

சிவகாசி அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் வத்திராயிருப்பு நல்லதங்காள் திருக்கோவில் அமைந்து உள்ளது.