வெள்ளை பிள்ளையார் கோயில்!

49

வெள்ளை பிள்ளையார் கோயில்!

தஞ்சாவூரில் உள்ள விநாயகர் கோயில் தான் இந்த வெள்ளை பிள்ளையார் கோயில். தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகில், அதுவும் நகரின் முக்கியமான பகுதியில் இந்த வெள்ளை பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இந்த வெள்ளை பிள்ளையார் கோயிலும் ஒன்று. இதே போன்று திருவலஞ்சுழியிலும் வெள்ளை பிள்ளையார் கோயில் இருக்கிறது. ஒரே மாவட்டத்தில் உள்ள இரு வெள்ளை பிள்ளையார் கோயில்கள் இதுவாகும்.

கணபதி வெள்ளைப் பிள்ளையாராக கிழக்கு நோக்கி இருக்கிறார். மேலும், வல்லபையுடன் எழுந்தருளியிருப்பதால் வல்லபை விநாயகர் என்றழைக்கப்படுகிறார். ஆனால், பேச்சு வழக்கில் இந்த வல்லபை விநாயகர், வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலில் விநாயகருக்குள் வல்லபா தேவி ஐக்கியமாகி காட்சி தருவதாக கூறப்படுகிறது.

சாபம் பெற்ற வல்லபை அரக்கியாக மாறி தேவர்கள் மற்றும் முனிவர்களை அச்சுறுத்தி வந்தாள். இதன் காரணமாக தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானோ, அரக்கியை அழிப்பதற்கு முருகப் பெருமானை அனுப்பி வைத்தார். ஆனால், முருகன் அரக்கியைக் கண்டு பயப்படுவது போன்று நடித்து தனது அண்ணன் விநாயகரை அனுப்பி வைத்தார். தன்னை அழிக்க தைரியத்தோடு வந்த விநாயகரைக் கண்டு மெய்சிலிர்த்த அரக்கியை, அப்படியே தனது துதிக்கையால் தூக்கி விநாயகப் பெருமான் தனது மடியில் போட்டுக் கொண்டார்.

ஏற்கனவே மனித உடலும், மிருக முகமும் கொண்ட ஒருவரால் சாபத்திலிருந்து விமோட்சனம் கிடைக்கும் என்பதை அறிந்திருந்த வல்லபை அந்த நிமிடமே தனது பழைய உருவம் பெற்றாள். விநாயகரையே திருமணமும் செய்து கொண்டாள். வல்லபை மற்றும் விநாயகர் இருவருக்கும் இந்த கோயிலில் வைத்து தான் திருமணமும் நடந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியன்று இந்த விநாயகருக்கு சந்தனக் காப்பு இல்லாமல், அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெறும். 3ஆவது நாளில் தான் விநாயகப் பெருமான் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது சிறப்பம்சம்.

இந்த கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தின் போது திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தாலிச்சரடு பெற்றுக் கொண்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

திருமணத் தடை, குழந்தையின்மை, வியாபாரம் விருத்தி ஆகியவற்றிற்கு இந்த பிள்ளையாரை வழிபாடு செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு காய்ச்சல், பயம் நீங்க விபூதி பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. தினந்தோறும் விநாயகப் பெருமானை வழிபட்டால் அற்புதங்கள் நிகழும். வெள்ளிக்கிழமை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். இதுவே பௌர்ணமி நாளில் வழிபட்டால் பாவங்கள் நீங்கும். சதுர்த்தியில் வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.