விட்டிலாபுரம் பாண்டுரங்க பெருமாள் கோயில்!

77

விட்டிலாபுரம் பாண்டுரங்க பெருமாள் கோயில்!

திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள்.

தென் நாட்டு பண்டரிபுரம் என்று சிறப்பிக்கப்படும் விட்டிலாபுரம் பாண்டுரங்க பெருமாள் கோயில்.

மூலவர் – பாண்டுரங்க விட்டலேஸ்வரர்
உற்சவர் – பாண்டுரங்கன்
தாயார் – ருக்குமணி, சத்யபாமா,
தீர்த்தம் – தாமிரபரணி.

மூலவர் பாண்டுரங்க விட்டலர் பழமையும், புதுமையும் இணைந்தது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விட்டிலாபுரம் பாண்டுரங்கர் ஆலயம். இங்குள்ள மூலவர் ‘பாண்டுரங்க விட்டலர்’ என்ற திருநாமத்துடன் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார். அருகில் ருக்மணி, சத்யபாமா வீற்றிருந்து அருள்கிறார்கள். உற்சவரின் அருகில் ருக்மணி, சத்யபாமா, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீலாதேவி ஆகியோரும் வீற்றிருக்கிறார்கள்.

இங்கு மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா, முற்காலத்தில் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்த கோவில் பூலோக வைகுண்டமாக போற்றப்படுவதால் இங்கு பரமபத வாசல் கிடையாது. விட்டலாபுரத்தில் நம்மாழ்வார் விக்கிரகம் எழுந்தருளிய காலத்தில் இக்கோவில் மிகச் சிறப்பாக விளங்கியுள்ளது. இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்துக்கு முன்பு, பாண்டுரங்க விட்டலரை வணங்கிச் சென்று தங்களது அரங்கேற்றத்தினை நடத்துகிறார்கள்.

இங்கு இறைவனுக்கு படைக்கப்படும் திரட்டுப்பால், பால் பாயசம் மிக விசேஷம். திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் இக்கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள். கல்வி -கேள்விகளில் குழந்தைகள் சிறந்து விளங்க சில பக்தர்கள் பால் பாயசம் அளித்தும் வழிபடுகிறார்கள்.

பாண்டுரங்கனை வழிபட்ட புரந்தரதாசர், ராமதேவர், துக்காராம் ஆகியோரது வாரிசுகள் இன்னும் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். இத்தலம் தட்சிண பண்டரிபுரம் என்பதற்கு ஏற்ப இங்குள்ள சிவன் கோயிலில் விருபாஷீஸ்வரர், அம்பாதேவி அருள் பாலிக்கிறார்கள்.

விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோயில் தல வரலாறு:

பழங்காலத்தில் விஜய நகரப் பேரரசு மிகவும் சிறப்பாக விளங்கியது. அந்த காலத்தில் விட்டலராயர் என்னும் அரசன், தாமிரபரணி ஆற்றின்கரையில் உள்ள பகுதியை முறப்பநாட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவரயன் வடக்கே உள்ள பண்டரிபுரத்தில் உறையும் பாண்டுரங்க பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டவன். அவனுக்கு தினமும் பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கிபி 1547 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் பாண்டுரங்க விட்டலீஷ்வரா கோயில் கட்டப்பட்டது.

ஒருநாள் விட்டலராயன் பாண்டுரங்கரை நினைத்து கொண்டிருக்கையில் அவனுக்கு தான் தனது பகுதியில் பாண்டுரங்கனுக்கு ஓர் கோவில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தான் வணங்கும் விட்ட பாணுடுரங்கனை தன் மக்கள் அனைவரையும் வழிபடச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் தோன்றவே அதற்கான நேரத்திற்காக காத்திருந்தான்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் அரசன் கனவில் தோன்றிய பாண்டுரங்கரன், “மன்னா! தாமிரபரணி ஆற்றின் குறிப்பிட்ட ஓர் இடத்தில் எலுமிச்சம் பழம் ஒன்று மிதக்கும். அதற்கு மேலே வானில் கருடன் வட்டமிடும் என்றும் மிதக்கம் பழத்தை பின் தொடர்ந்து சென்றால் ஓரிடத்தில் அந்த பழம் சுழன்று, தண்ணீரில் அப்படியே நிற்கும். அங்கே என்னுடைய விக்கிரகம் கிடைக்கும். அந்த விக்ரகத்தை கண்டெடுத்து மேலே பறக்கும் கருடன் வழிகாட்டும் இடத்தில் பிரதிஷ்டை செய்வாயாக” என்று கூறி மறைந்தார்.

பாண்டுரங்கனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த அரசனுக்கு இது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. உடனே தாமதிக்காமல் தன் வீரர்களுடன் தாமிரபரணி ஆற்றிற்கு சென்றான். அப்போது தாமிரபரணி ஆற்றில் பெருமாள் கனவில் கூறிய படியே, ஒரு எலுமிச்சை பழம் மிதந்து சென்றது. வானில் மேலே கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அரசனும் படை வீரர்களும் அந்தப் பழத்தைப் பின் தொடர்ந்து சென்றனர். அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுழன்று நின்றது.

அங்கு ஆற்றிற்குள் இறங்கி தேடிய போது, பாண்டுரங்கனின் அழகிய திருமேனி கிடைத்தது. பின்னர் கருடன் சென்ற பாதையை பின் தொடர்ந்து, பாண்டுரங்கனை எடுத்து சென்ற மன்னன், கருடன் அடையாளம் காட்டிய பகுதியில், பாண்டுரங்கனை பிரதிஷ்டை செய்து கோவில் ஒன்றையும் சிறப்பாக எழுப்பினார். அந்த கோவிலை சுற்றி ஊர் ஒன்றையும் உருவாக்கிட, அது விட்டலராய அரசன் பெயரால் ‘விட்டிலாபுரம்’ என அழைக்கப்பட்டது.

தான் கட்டிய அந்த கோவிலில் அரசன் விட்டலராயன் தினமும் அங்கு நித்ய பூஜைகள் நடைபெற ஏராளமான நில புலன்களை எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது. வடக்கே உள்ள பண்டரிபுரம் செல்ல முடியாதவர்கள், இங்கு வந்து வழிபடலாம் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் விட்டிலாபுரம் கிராமம் உள்ளது. திருநெல்வேலி – திருச்செந்தூர் மெயின் ரோட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து டவுண் பஸ் வசதியும் உள்ளது.