கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய கோயில்!
பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் ஒருவந்தூர் என்ற ஊரில் உள்ளது. இங்கு செல்லாண்டியம்மன் தான் மூலவர்.
தல வரலாறு:
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் மற்றும் இதன் சுற்றுப்பகுதி உப்பு மண் நிலமாக இருந்தது. ஒருமுறை அங்கு வசிக்கும் ஊர் மக்கள் அந்த உப்பு மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒருவரது மண்வெட்டி ஒரு பொருளின் மீது சத்தத்துடன் மோதியது. பின் அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பயத்துடன் தோண்டி பார்த்த போது அங்கே அழகு மிளிர ஒரு அற்புத அம்மன் விக்ரகம் வெளிப்பட்டது.
எந்த தவமும் செய்யாமல் தங்களை தேடி வந்த அம்மனை கண்டு மெய் சிலிர்த்து நின்றனர் அந்த சுற்றுப்புற மக்கள். பின் அம்பாளுக்கு பச்சை பந்தல் போட்டு பூஜை செய்தனர். அந்த இடத்திலேயே ‘பிடாரி செல்லாண்டி” என்ற திருநாமம் கொண்டு நிரந்தரமாக தங்கி விட்டாள் அம்பிகை. காலப்போக்கில் அம்பிகையின் அருளாலும், பக்தர்களின் முயற்சியாலும் இப்போதுள்ள கோயில் உருவானது.
தல பெருமை:
இந்தக் கோயிலில் அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறாள். சிவனுக்கு ரிஷபமே வாகனம். ஆனால், இங்கு குதிரை வாகனமாக சுவாமி வந்துள்ளது விசேஷ அம்சம். சிவனும் பார்வதியும் இணைந்த சக்தியின் ரூபமே செல்லாண்டியம்மன் ஆகும். செல்லாண்டியம்மன் வடக்கு நோக்கி நாமக்கல் மற்றும் மோகனூர் பகுதியை பார்த்திருப்பதால் இந்த ஊர்கள் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது மக்களின் நம்பிக்கை.
சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிக்காக கோயிலை தோண்டும் போது ஒரு நீண்ட கல் தென்பட்டது. அதில் ஒரு குதிரையும், ஒரு மரமும், அதன் கீழ் உள்ள லிங்கத்தை பார்வதி தேவி பூஜை செய்வது போலவும் செதுக்கப்பட்டிருந்தது.
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்க இத்தல அம்மனை பிரார்த்தித்து நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை பூர்த்தி செய்யலாம்.
