மாங்கல்ய பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள கோயில் கந்தசுவாமி கோயில். இங்கு முருகப் பெருமான் மூலவராக காட்சி தருகிறார்.
ஆலயத்தின் வரலாறு:
பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி.
இன்று திருப்போரூரில் உள்ள கோயிலும் குளமும் முந்நூறு வருஷங்களுக்குள் உருவானவைதான், என்றாலும் இந்த இடத்தில் ஒரு பழைய முருகன் கோயில் இருந்திருக்க வேண்டும் எனப்படுகிறது. பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் எழுந்ததாக வரலாறு உள்ளது. பதின்மூன்றாவது நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டில், இவ்வூர் தொண்டை நாட்டில் ஆமூர் கோட்டத்தில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று குறித்திருக்கிறது.
விக்கிரம சோழன் ஏற்படுத்திய நிவந்தங்களையும், விஜய கண்டதேவர் நந்தா விளக்குக்காகப் பொன் கொடுத்ததையும் அறிவிக்கும் கல்வெட்டுகள் எல்லாம் இங்குள்ள தெய்வயானையார் கோயில் சுவர்களில் சிதைந்து காணப்படுகின்றன. இவைகளே இக்கோயில் பழமையானது என்பதற்குச் சான்றுகள்.
புராணக் கதை:
கந்த புராணக் கூற்றுப்படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது.
பின்பு பல நாட்களாக இத்தலம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும், தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில் கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்து முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஆலயச் சிறப்பு:
கருவறையில் உள்ள முருகன் கிழக்கு நோக்கியிருந்தாலும் கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இந்த வாயிலைக் கடந்து, வெளிப் பிராகாரத்தில் உள்ள கோபுர வாயிலையும் கடந்தே முருகன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும் . மூல மூர்த்தி பனையடியில் புதைந்திருக்கிறார். ஆதலால் புற்றிடங் கொண்ட அந்தப் பெருமானுக்கும் அவன் துணைவியாருக்கும் புனுகுச் சட்டமே சாத்தி அலங்கரிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது, உருவங்களும் மொழு மொழு வென்றே இருக்கும்.
இந்த மூல மூர்த்திகளுக்கு முன்னால் மிகச் சிறிய வள்ளி தெய்வயானை சமேதனாகக் கந்தனை உருவாக்கி நிறுத்தி யிருக்கிறார்கள். இந்தக் கந்தன் கரங்களிலே உடம்பிடி, குலிசை முதலிய ஆயுதங்கள் இல்லை. தூக்கிய திருக்கரங்களிலே ஜபமாலையும் கமண்டலமுமே காணப்படுகின்றன. இங்குள்ள முருகன், பிரணவப் பொருள் அறியாத பிரமனைச் சிறையில் அடைத்த பின், தானே சிருஷ்டித் தொழிலை மேற்கொண்டிருக்கிறான். சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோவில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது.
கந்தசாமியின் சிறப்புகள்:
கந்தசுவாமி, சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. கந்தசுவாமி இத்தலத்தில் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தியாக அருளுகிறார். கோவிலுக்கு அருகிலுள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோவில் உள்ளது. இவ்வாறு மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த தலம் இது.
இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம்.
வள்ளி தெய்வானை உடன் முருகன்:
இங்கே வள்ளியும் தெய்வானையும் உடன் உள்ளனர் என்றாலும், அவர்களுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. இக் கோயிலில் இருபத்து நாலு தூண்களோடு கூடிய ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. ஒவ்வொரு தூணிலும் ஒரு கையில் கேடயமும், ஒரு கையில் வாளும் உடைய நவவீரர் முதலியோரது உருவங்கள் உண்டு. இது போர் ஊர் அல்லவா? சூரபதுமனின் துணைவர்களான அசுரர்கள் போருக்கு எழுந்த போது, அவர்களை இங்குதான் சமர் புரிந்து வென்றார் என்பதுதானே வரலாறு. ஆகையால் சமரபுரி முருகன் சந்நிதியில் இவ்வீரர்களை யெல்லாம் உருவாக்கி நிறுத்தியிருக்கின்றனர்.
பக்தர்களின் பிராத்தனை:
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள யந்திர முருகனை வழிபடுகின்றனர். மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர். இங்குள்ள சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்தும், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
