துர்கா, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒன்றாக காட்சி தரும் கோயில்!
திருப்பூரில் கொடுவாய் என்ற ஊரில் உள்ள நாகேஸ்வரசுவாமி கோயிலில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரும் ஒன்றாக காட்சி தருகின்றனர். இந்தக் கோயிலில் நாகேஸ்வரசுவாமி மூலவராக காட்சி தருகிறார். கோவர்த்தனாம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். பிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இங்கு மட்டும் துர்கா தேவி, லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய மூவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
கருவறையில் நாகேஸ்வர சுவாமி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கிறார். கோயில் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் காட்சி தருகின்றனர். ஒரே கல்லில் தீபஸ்தம்பம், சனீஸ்வர சன்னதி உள்ளன. இதற்கு பின்னால், நவக்கிரகங்கள் உள்ளன.
நவக்கிரகங்களை சுற்றி வர பைரவர் சன்னதி. இந்த பைரவருக்கு முன்னால் சந்திரனும், சூரியனும் காட்சி தருகின்றனர். கோயிலில் இடது பக்கமாக கணபதி வீற்றிருக்கிறார். அவருக்கு முன்புறம் அம்பாள் சன்னதி இருக்கிறது. இங்கு புளியமரத்தின் கீழ் ஒரு பிள்ளையார் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
திருமணம் நடக்க இந்தக் கோயிலில் உள்ள நாகேஸ்வரசுவாமியை வேண்டிக் கொண்டால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகமாம். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் புது வஸ்திரம் சாற்றி வைத்து தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
செயற்கை குளத்தின் நடுவில் லட்சுமியும், சரஸ்வதியும் அமர்ந்த நிலையில் சுதை வடிவாக உள்ளனர். 7 அடி உயரத்திற்கு ஒரு புற்றும் உள்ளது. இது ராகு, கேது பரிகார தலமாகவும் விளங்குகிறது. ராகு மற்றும் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
பிறவியிலேயே பார்வையற்ற ஒருவன் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்தான். அந்த பார்வையற்றவன் ஏகாம்பரநாதர் மீது பக்தி கொண்டிருந்தான். தினந்தோறும் கோயிலுக்கு சென்று ஏகாம்பரநாதரை தரிசனம் செய்து தனக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்று வேண்டி வந்தான். அப்படி ஒரு நாள் அவனது வேண்டுதலை நிறைவேற்றிய ஏகாம்பரநாதர் ஒரு கண்ணில் மட்டும் பார்வையை கொடுத்தார்.
மற்றொரு கண்ணிற்கு எங்கு செல்வேன் என்று கேட்கவே, ஏகாம்பரநாதரோ, கொடுவாய் எனும் ஊரில் குடி கொண்டுள்ள கோவார்த்தனாம்பிகையுடன் நாகேஸ்வரராக அருளும் எம்மை வணங்கினால் கண் பார்வை கிடைக்கும் என்று அருளினார். இறைவன் கூறியவறே அந்த பார்வையற்ற இளைஞனும் சென்று வேண்டிக் கொண்டு பார்வை கிடைக்கப்பெற்றதாக வரலாறு கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.