ஆதிசங்கரர் ஜெயந்தி ஸ்பெஷல் !

388

கயிலை நாயகனின் அம்சமாகக் காலடியில் அவதரித்த மகான் ஜகத்குரு ஆதிசங்கரர். பாரத தேசம் முழுவதும் விஜயம் செய்து, இந்து தர்மத்தை நிலைநிறுத்தினார். அனைத்து ஜீவன் களிலும் இறைவனை தரிசித்து, அத்வைதம் என்னும் அரிய தத்துவத்தை – மனிதகுலம் உய்வடைவதற்கான ஒப்பற்ற தத்துவத்தை உபதேசித்த மகா ஞானி!

அனைத்து உயிர்களிலும் ஒன்றேயான இறைவனை அவர் தரிசித்தாலும், மக்களின் மன இயல்புக்கேற்ப காணாபத்யம், சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம் என்னும் ஆறு வகையான வழிபாட்டு முறைகளை வகுத்துத் தந்துள்ளார்.

அனைத்து தெய்வங்களைக் குறித்தும் பல ஸ்தோத்திரங்களை ஆதிசங்கரர் இயற்றி யுள்ளார். அவருடைய ஸ்தோத்திரங்களுள் சிவானந்த லஹரி தனிச் சிறப்புக் கொண்டது என்றே சொல்லலாம். அவர் யாருடைய அம்சமாகத் தோன்றினாரோ, அந்த கயிலை சங்கரனைப் பற்றிய ஸ்தோத்திரம் என்பதால் மட்டுமல்ல, வறட்சியுடன் அலைபாயும் நம் மனதை, சிவானந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கச் செய்து, சிவனாரின் திருவருளை நமக்குப் பெற்றுத் தரும் அருட்களஞ்சியமும் ஆகும்.

இறைவனிடம் நமக்கு தூய பக்தி ஏற்படவேண்டும். இறைவனை அடைவதற்கு பக்தியை விடவும் வேறு சிறந்த சாதனம் இல்லை. இந்த பக்தியில் பதினொரு வடிவங்கள் இருப்பதாக ஆதிசங்கரர் கூறுகிறார். இறைவனின் கல்யாண குணங்களைப் போற்றுவது, உருவத்தை தியானிப்பது, பூஜை செய்வது, இடைவிடாமல் நினைப்பது, சேவை செய்வது, நட்பு கொள்வது, காதலால் கசிவது, குழந்தையைப் போல் நேசிப்பது, தன்னையே அர்ப்ப ணம் செய்வது, இறைவனின் பிரிவைத் தாங்கமுடியாதிருப்பது, தன்வயமாகிவிடுவது என்று பக்தியின் பதினொரு நிலைகளை அழகாகவும் எளிமையாகவும் விவரித்திருக்கிறார்.

சிவானந்த லஹரியை இயற்றவேண்டுமென்றால், சிவபெருமானை தியானம் செய்யவேண்டுமல்லவா? எனவே ஆதிசங்கரரும் சிவபெருமானை தியானம் செய்கிறார்.

எப்படி?

‘மூன்று வேதங்களால் அறியத் தக்கவரும், மனதிற்கு இனியவரும், முப்புரங்களை அழித்த வருமாகிய சிவபெருமானை நான் வழிபடுகிறேன்’ என்று வர்ணித்துக்கொண்டே போகிறார்.

ஈசனின் திரிபுர சம்ஹாரம் நமக்குத் தெரியும். தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களை அவர்கள் வாழ்ந்து வந்த இரும்பு, வெள்ளி, பொன்னாலான கோட்டைகளுடன் சேர்த்து அழித்தார். முப்புரங்கள் என்பது ஸ்தூலம், சூக்ஷ்மம், காரணம் ஆகிய மூன்று தேகங்களைக் குறிப்பதாகும். அவற்றை அழித்து, பிறப்பும் இறப்பும் இல்லாத முக்தி நிலையை அருள்பவர் சிவபெருமான் என்பதுதான், சிவனாரின் திரிபுர சம்ஹாரம் உணர்த்தும் தத்துவமாகும்.

இறைவனின் கருணையைப் பெற்று, முக்தி நிலை அடையவேண்டுமானால், நம்முடைய கர்மாக்கள் அனைத்தையும் இறைவனுக்கே சமர்ப்பித்துவிடவேண்டும். எப்படி சமர்ப் பிப்பது?

‘பரமசிவனே, என்னுடைய மனம், தாமரை போன்ற உமது திருவடிகளிலும், என் வாய் உமது புகழைப் பேசுவதிலும், இரு கைகளும் உமக்கு அர்ச்சனை செய்வதிலும், காதுகள் உமது மகிமையைக் கேட்பதிலும், கண்கள் உம்முடைய திருமேனி அழகிலும், புத்தியா னது உம்மை தியானிப்பதிலும் நிலைபெறட்டும்’ என்று ஆதிசங்கரர் குறிப்பிடுவது போல் நம்முடைய செயல்கள் அனைத்தையும் ஈசுவரனுக்கே அர்ப்பணம் செய்துவிட்டால், நாம் அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.

குறிப்பாக இறைவனின் திருவடி தரிசனம் என்பது பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தாக அமையும். திருவடிகளின் மகிமைகளை விவரிக்கவே முடியாது. பக்தியினால் சிவனாரின் திருவடிகளை சிக்கென்று பற்றிக்கொண்டால், முக்தி நிச்சயம்.

ஈசனுக்கும் மிகவும் உகந்த மலர்கள் கொன்றையும் தும்பையும்.

ஒருமுறை தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தும்பை என்பவள், சிவபெருமானை நோக்கி தவமிருந்தாள். மனப்பூர்வமான பக்தியுடன் தவம் செய்த தும்பைக்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அவளுக்கு தரிசனம் கொடுத்ததுடன், ‘உனக்கு வேண்டும் வரம் என்ன?’ என்று கேட்டார். சிவபெருமானை பிரத்யட்சமாக தரிசித்துவிட்ட பதற்றத்தில் இருந்த தும்பை, ‘ஐயனே, நின் திருமுடியின்மேல் என் திருவடி இருக்கவேண்டும்’ என்று கேட்டுவிட்டாள். ஈசனும் அப்படியே வரம் அருளினார். அதற்குள் தான் சிவபெருமானைப் பற்றி அபசாரமாகப் பேசிவிட்டதை அறிந்துகொண்ட தும்பை, ‘ஐயனே, எம்பெருமானே! தங்களை நேரில் தரிசித்த பதற்றத்தில் நாம் தவறாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்து அருள்புரியுங்கள் பிரபு’ என்று பிரார்த்தித்தாள்.

கருணைக் கடலான சிவபெருமான் மென்மையாகப் புன்னகைத்தபடி, ‘தும்பையே, உன் பக்தியின் பெருமையை விவரிக்க முடியாது. நீ பூவாகப் பிறந்து என் திருமுடியை அலங்கரிப்பாய்’ என்று அருள்புரிந்தார். அது முதல் ஈசனுக்கு ஐந்து விரல்களைப் போன்ற இதழ்களைக் கொண்ட தும்பைப் பூ இறைவனுக்கு மிகவும் பிரியமானதாகிவிட்டது.

இறைவனைக் கள்வன் என்று நாம் அழைக்கத் துணிவோமா?

இதோ, ஆதிசங்கரர் இறைவனைக் கள்வன் என்று அழைக்கிறார். ‘கள்வர்களின் தலைவரே! மங்கலத்தைச் செய்பவரே! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவரே! பேராசை முதலிய கெட்ட குணங்களைக் கொண்டு, பிறர் பொருளை அபகரிப்பதிலேயே வசப்பட்டு, பணம் படைத்தவர்கள் வீட்டில் புகுவதில் முயற்சி செய்வதாய் என் மனம் அலைபாய்கிறது. இந்த மனமாகிய திருடனை உமக்கு அடங்கியதாக செய்துகொண்டு, குற்றமற்ற எனக்கு அருள்புரிவாயாக’ என்று இறைஞ்சுகிறார்.

ஆழ்ந்த பக்தியின் காரணமாகவே ஆதிசங்கரர் ஈசனை, ‘கள்வன்’ என்று அழைக்கிறார். சிவபெருமானை ‘கள்வர்களின் தலைவன்’ என்று ஶ்ரீருத்ரம் போற்றுகிறது. அவர் கள்வர்களின் தலைவராக இருப்பதால், கள்வனைப் போன்று இயங்கும் நம் மனதை அடக்க வல்லவர் என்கிறார் சங்கரர். தன்னிடம் பக்தி கொண்டவர்களின் மனதை அவர்களுக்குத் தெரியாமல் கவர்ந்துகொள்ளவும் செய்கிறார். ‘காடுடைய சுடலைப் பொடி பூசி, என்னுள்ளங்கவர் கள்வன்’ என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடியிருக்கிறார்.

நம்முடைய கர்மபலன்கள் அனைத்தையும் ஈசனுக்கு அர்ப்பணித்து, ஈசனின் திருவடி தரிசனம் பெற்றதும், நாம் எதை ஈசனுக்குக் காணிக்கையாகத் தருவது? ஆதிசங்கரர் நம் மனமே சிறந்த காணிக்கை என்கிறார்.

‘மலையில் உறைபவரே, உம் கையில் பொன்மலை இருக்கிறது. அருகில் செல்வத்துக்கு அதிபதியான குபேரனும், கற்பக விருட்சம், காமதேனு, சிந்தாமணி ஆகியவையும், திருமுடியின் மேல் குளிர்ந்த கிரணங்களைக் கொண்ட சந்திரனும், உம் இரண்டு திருவடிகளில் அனைத்து மங்களங்களும் நிலைத்திருக்க, எளியவனாகிய நான் எந்தப் பொருளைத்தான் உமக்குக் காணிக்கையாக்க முடியும்? என் மனமே உமக்கான காணிக்கையாக அமையட்டும்’

ஆம், தூய்மையான பக்தியினால் நிரம்பப்பெற்றிருக்கும் நம் மனமே ஈசனுக்கு சிறந்த காணிக்கையாகிறது.

செய்யும் செயல்கள் அனைத்தையும் ஈசனுக்கு அர்ப்பணித்து, ஈசனின் திருவடி தரிசனம் பெற்று, நம் தூய மனதைக் காணிக்கையாக்கிட அடிப்படையான தேவை தூய பக்தி ஒன்றுதான். அப்படிப்பட்ட தூய பக்தி இருந்தால் நம்முடைய குறைகள் எல்லாம் நீங்கிவிடும். இதைத்தான் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றின் மூலமாக ஒரு ஸ்லோகத்தில் கூறுகிறார் ஆதிசங்கரர்.

‘கண்ணப்பரின், வழி நடந்து தேய்ந்த செருப்பு, பரமசிவ மூர்த்திக்கு அபிஷேகத்துக்கு முன்பாக சிவபெருமானின் திருமுடியின்மேல் வைக்கப்படும் கூர்ச்சமாக அமைகிறது; வாயில் இருந்து கொப்புளித்த நீரால் நனைப்பது, திரிபுர சம்ஹாரம் செய்த ஈசனுக்கு தெய்வத் தன்மை வாய்ந்த அபிஷேகம் ஆகிறது; கடித்துப் பார்த்த இறைச்சித் துண்டு புதிதான நைவேத்தியமாகிறது. காட்டில் வசிக்கும் வேடன் பக்த சிரேஷ்டனாகிறான்! ஆஹா, தூய பக்தி எதைத்தான் செய்யாது?’ என்று பக்தியின்பெருமையை விவரிக்கிறார்.

இப்படியாக, ஜகத்குரு ஆதிசங்கரர் தம்முடைய சிவானந்த லஹரியில், சிவபெருமானின் கருணைத் திறத்தைப் பலவாறாகப் போற்றியிருக்கிறார்.

சிவபெருமானின் மகிமைகளைப் போற்றும் சிவானந்த லஹரி, நம் உள்ளத்தில் நிலைபெற்றிருக்கவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.

‘சம்புவாகிய ஈசனே, உமது திவ்விய சரிதம் என்னும் புனித நதியினின்றும் பெருகி வந்து, பாவங்களாகிய புழுதியை அடித்துச் செல்வதாகவும், புத்தியென்னும் வாய்க்காலின் வழியாகப் பாய்ந்து சென்று, இந்த உலக வாழ்க்கையாகிய பிறவிச் சுழலில் ஏற்படும் பெரும் துன்பங்களைப் போக்கி, அமைதியை அளிப்பதாகவும், என் உள்ளத்தில் வந்து தேங்கி நிற்பதாகவும், உன் சிவானந்த வெள்ளம் எப்போதும் வெற்றியுடன் திகழட்டும்’

ஸ்ரீ குருப்யோ நமஹ !