Thursday, November 2, 2023
HomeAanmeega Thagavalgalஅக்னி நக்ஷத்திரத்தில் ... என்ன செய்யலாம்! என்ன செய்யக்கூடாது?

அக்னி நக்ஷத்திரத்தில் … என்ன செய்யலாம்! என்ன செய்யக்கூடாது?

சிவன், விஷ்ணு, அம்மன், குமரக்கடவுள் வழிபாடு செய்யலாம். குமரன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் நீங்கும்.

கோடையைத் தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்த
வேண்டும். ஏழைகள், அந்தணர்கள் மற்றும் இயலாதவர்களுக்கு விசிறி, காலணி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம்.

கோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பதும் சிறப்பு.

விஷ்ணு கோயில்களில் வசந்த உற்சவங்கள் நடைபெறும். பகல் பத்து, ராப்பத்து உற்சவங் களும் நடைபெறும். பரணிக்கு உரிய துர்கை, ரோஹிணிக்கு உரிய பிரம்மா இருவருக்கும் சந்தனக்காப்பு செய்வது சிறப்பு.

இந்த காலங்களில் உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு, ‘அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!’ என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு.

சிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது ஐதீகம்.

இந்த நாட்களில் செடி- கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உறிக்கக்கூடாது, விதை விதைக்கக் கூடாது, கிணறு, குளம், தோட்டம் அமைக்கக் கூடாது. நிலம் மற்றும் வீடு பராமரிப்பு பணிகளைச்
செய்யக்கூடாது. அதேபோல் நீண்ட தூர பிரயாணம், பூமி பூஜை, கிரகப் பிரவேசம், மொட்டை போடுதல் ஆகியவற்றையும் தவிர்க்கவேண்டும்.

அக்னி பூஜை!

இரண்டு முகம் கொண்டவன் அக்னி. யாகத் தீயில் ஆசார்யர், யஜமானர் இருவரும் இடும் ஹவிஸையும் ஏற்பதற்காக இரண்டு முகங்கள். தீ வளர்த்து ஹோமம் செய்பவர் பண்டிதர்.
அதன் பலனை அனுபவிப்பவர் யஜமானர்.

அக்னிக்கு இரு மனைவிகள் ஸ்வாஹா, ஸ்வதா. மங்கள காரியங்களுக்கு ஸ்வாஹா என்றும், பித்ரு காரியங்களுக்கு ஸ்வதா என்றும் கூறி மந்திரங்களை உச்சரிப்பார்கள்.

ரிக் வேதம் அக்னியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அக்னியை கொண்டே முடிகிறது. முக்கிய குணம் – பிரகாசம், ரூபம் – ஹிரண்மயம் (தங்கத்தைப் போன்றது).

அக்னியே தேவதைகளுக்கும், ஹோமம் செய்பவர்களுக்கும் பாலமாக இருந்து, நாம் வழங்கும் ஹவிஸை (ஹோமத் தீயில் இடும்பொருட்களை) கொண்டு சேர்க்கிறார். அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள். அதனால் ஏழு தினங்களுக்கு அவரை பூஜிப்பர். அதாவது, பூஜையறையில் செங்காவியால் அக்னியின் கோலத்தை வரைந்து வாசனை மலர்களால் அர்ச்சித்து தீபமேற்றி வழிபட வேண்டும்.

பிரசாதமாக முறையே ஞாயிறு – பாயசம், திங்கள் – பால், செவ்வாய் – தயிர் மற்றும் வாழைப்பழம், புதன் – தேன் மற்றும் வெண்ணெய், வியாழன் – சர்க்கரை மற்றும் நெய், வெள்ளி-வெள்ளை சர்க்கரை மற்றும் பானகம், சனி – பசுநெய் மற்றும் தயிர்சாதம் என நைவேத்தியம் படைத்து வழிபடவேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =

Most Popular