அக்ஷய திருதியை ஸ்பெஷல் !

361

அட்சய திருதியையன்று சொல்ல வேண்டிய அலைமகள் துதி !

தேவி பாகவதத்தில் மகாவிஷ்ணுவே மகாலட்சுமியைப் போற்றிச் சொன்ன சில ஸ்லோகங்கள் எளிய தமிழ் விளக்கத்துடன் இங்கு தரப்பட்டுள்ளது. அட்சய திருதியை தினத்தில் அகம் முழுக்க அலைமகளை நினைத்து இந்தத் துதியைச் சொல்லி வழிபடுங்கள். அல்லது இதன் எளிய தமிழ் அர்த்தத்தை மட்டுமாவது சொல்லுங்கள். பொன்மகள் அருளால் உங்கள் வாழ்வில் புத்தொளி பிறக்கும்.

ஊர்ணநாபாத் யதாதந்து: விஸ்புலிங்கா: விபாவஸோ
ததா ஜதத் யதேதஸ்யா: நிர்கதம்தாம் நமாம்யஹம்

பொருள் : சிலந்தியின் வாயிலிருந்து அழகிய நூல் வருவது பால, பெரும் தீயிலிருந்து பொறிகள் பல எழுவது போல, எந்தத் தாயின் பாதங்களிலிருந்து ஞாலமாகிய பல்லாயிரம் அண்டங்கள் பெருகி எழுந்தனவோ அந்தத் தாயின் இணையடிகளைப் போற்றுகிறேன்.

யன் மாயாசக்தி ஸம்ஸப்தம் ஜகத் சர்வம் சராசரம்
தாமசிதாம் புவநாதிதாம் ஸமராம கருணார்ணவாம்

பொருள் : இந்த உலகின் இயக்கத்தையே தன் மாயா சக்தியால் அசைவின்றி நிற்கச் செய்யும் அரிய ஆற்றலை தன்னகத்தே கொண்டு இயங்குபவள். தன்னால் மயங்கிய அண்டங்களையெல்லாம் மீண்டும் இயங்க வைக்கும் புவனங்களின் தாய் அவள்.

யதக்ஞாநாத் பவோத்பத்தி: யதக்ஞாநாத் பவநாஸநம்
ஸம்வித்ரூபாம்சதாம் தேவீம் ஸ்மராம: ஸா ப்ர சோதயாத்

பொருள் : அஞ்ஞானத்தால் எந்த தேவியின் பெருமையை அறியாமல் விட்டவர்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொள்கிறார்களோ; எவளின் அருமையை உணர்ந்து போற்றித் தொழுபவர்கள், பலர் போற்றும் வகையில் வாழ்கிறார்களோ, அந்த தேவியின் அருளை வியந்து நெஞ்சாரப் போற்றுகின்றேன்.

மாதர்நதாஸ்ம புவநார்த்தீஹரேப்ரஸீத
மந்நோ விதேஹி குரு கார்யமிதம் தயார்த்ரே
பாரம் ஹரஸ்வ விநிஹத்ய ஸுராரி வாக்கம்
மஹ்யா மஹேஸ்வரி ஸதாம் குரு சம்பவாநி

பொருள் : தாயே வணங்கிப் பணிகிறேன். புவனத்தின் கஷ்டங்களைத் தீர்ப்பவளே போற்றி. எங்கள்பால் அன்பு வைத்து இன்னல்களைத் தீர்ப்பாயாக. துன்பச் சுமைகளைக் குறைக்கின்றவளே போற்றி. நல்லோரின் எதிரிகளை அழித்து நன்மைகளைத் தருபவளே போற்றி. எங்களுக்கு இன்பத்தைத் தரும் மஹேஸ்வரியே போற்றி.

மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே
ஸர்வ சக்த்யை ச தீமஹி
தந்நோ தேவீ ப்ரசோதயாத்

பொருள் : மகாசக்தியாகவும், உயிர்களை உய்விப்பவளாகவும் நன்னெறியில் நம்மை நடத்திச் செல்பவளாகவும் உள்ள தேவி எங்களைக் காத்திடட்டும். எங்கள் செயல்களை அவளே ஊக்குவிக்கட்டும்.

ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸிநீம் பராம்
சரத் பார்வண கோடீந்து ப்ரபாம் முஷ்டிகராம் பராம்

பொருள் : ஆயிரம் இதழ்த் தாமரையில் அமர்ந்தவளே! கருஞ்சிவப்பு நிற ஆடை உடுத்தியவளே! கோடிக்கணக்கான சரத் கால சந்திரனைப் போல் ஜொலிப்பவளே-எழிலார்ந்த அன்னையே.. உன் திருவடிகளைப் போற்றுகிறேன்.

ஸ்வ தேஜஸா ப்ரஜ்வலந்நீம் ஸுகத்ருஸ்யாம் மநோ ஹராம்
ப்ரதப்த காஞ்சந்திப சோபாம் மூர்த்திமதீம்ஸதீம்

பொருள் : சுயமான அவள், தன் ஒளியால் ஒப்பில்லா மணியாகப் பிரகாசிப்பவள். தவறில்லாத இன்பத்தைத் தரும் மனோகரமானவள். மாசில்லா பொன்னுக்கும் மேலானவள். ஜோதியே உருவானவள். கற்பில் சிறந்தவள். அப்படிப்பட்ட அலைமகளுக்கு வணக்கம்.

ரத்ந பூபஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாசஸா
ஈஷத் தாஸ்யாம் ப்ரஸந்தாஸ்யாம் சச்வத் ஸுஸ் திரயௌவனாம்
ஸர்வ சம்பத் ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்

பொருள் : ரத்னமயமான ஆபரணங்களை அணிந்து ஒளிர்பவளே. மங்களகரமான மஞ்சள் வண்ணப் புடவை உடுத்துபவளே. பணிபவர்களின் கோரிக்கைகளை ஒன்றுக்குப் பன்மடங்காகத் தருபவளே. குறையாத இளமையும், வளமுடையவளே. அனைத்துச் செல்வங்களையும் தருபவளே. அன்னையாம் மஹாலக்ஷ்மியே, உனைப் போற்றி வணங்குகிறோம்.

ஓம் மகாலக்ஷ்ம்யை நமஹ !