நவக்கிரகம் – செவ்வாய் கதை

853

ஜோதிடத்தில் செவ்வாய் நெருப்புகிரகம். சிவபெருமானின் அம்சம், பூமி காரகன், ரத்த காரகன், போர் கிரகம், கோபம், வாக்குவாதம், பூமி, எந்திரங்கள், பழிவாங்கும் தன்மை போன்றவற்றுக்கு காரகன் இந்த செவ்வாய்.

செவ்வாயின் வரலாறு பற்றி இருவேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு.

முன்னொருகாலத்தில் அந்தகாசுரன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் சிவனை நினைத்து தவமிருந்தான். அவனது தவத்தால் சந்தோஷமடைந்த சிவபெருமான் அவன் முன் தோன்றினார்.

அந்தகாசுரன் சிவபெருமானிடம், “எனது ரத்தம் கீழே சிந்தினால், அதன் ஒவ்வொரு துளியிலிருந்தும் என்னைப் போன்ற அந்தகாசுரன் உருவாக வேண்டும். அவன் எனது எதிரிக்கெதிராக யுத்தம் செய்ய வேண்டும்” என்று வரம் கேட்டான் அந்த அசுரன். சிவனும் வரம் தந்து மறைந்தார்.

மிக பலமான வரம் கிடைத்ததால் அகம்பாவத்தில் ஆட ஆரம்பித்தான் அந்தகாசுரன், அனைவரையும் துன்புறுத்தினான். அவனை எவராலும் வெற்றிகொள்ள முடியவில்லை. வேறுவழியில்லாமல் சிவபெருமானே அவன் முன் தோன்றினார்.

சிவபெருமானுக்கும் அந்தகாசுரனுக்கும் இடையில் பயங்கர போர் நடந்தது. அந்த நேரத்தில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து (வியர்வை துளியில் இருந்து என்றும் கூறுவர்) ஒரு நெருப்பு கீழே விழுந்தது. அந்த நெருப்பு ஒரு குழந்தையாக உருவெடுத்தது. இந்த நேரத்தில் சிவபெருமான் அந்த அசுரனின் தலையை வெட்ட கீழே விழவேண்டிய ரத்தம் முழுவதையும் அந்தக் குழந்தை குடித்தது. இதனால் மேலும் அந்தகாசுரன் உருவாகவில்லை. அந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் செவ்வாயாக மாறியது.

வேறு ஒரு கதையின்படி, ரிஷி பரத்வாஜர் ஒரு தேவலோக மங்கையின் அழகில் மயங்கி அவளோடு உறவு கொண்டார். பிறந்த அந்தக் குழந்தையை பரத்வாஜரும் எடுத்து செல்லவில்லை. அந்த தேவகன்னிகையும் எடுத்து செல்லவில்லை. ஆற்றங்கரையில் விடப்பட்ட அந்தக் குழந்தையை பூமாதேவி எடுத்து வளர்த்து பெரியவனாக்கினாள். அப்படி பூமாதேவியால் வளர்க்கப்பட்டதால் செவ்வாய் பூமிகாரகன் ஆனார்.

முதல் கதையே அதிகம் பேரால் சொல்லப்படுகிறது.

எண்கணிதத்தில் செவ்வாயின் எண் 9. செவ்வாயின் அதிதேவதை முருகப்பெருமான். போரின் கடவுள் செவ்வாய். அதே நேரம் மருத்துவம், அறுவைச்சிகிச்சை, ரத்தம், இவற்றிற்கு காரகன் செவ்வாயே.

சுயஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருந்தால், மருத்துவம், காவல், ராணுவம், ரியல் எஸ்டேட் துறைகளில் ஜாதகர் வெற்றி பெறுவார். அதிக கோபம், காம உணர்ச்சி, எதிரியிடம் வெற்றி இவை அனைத்தும் உண்டாகும்.