கிருஷ்ணனைப் போன்று விவேகமாக இருக்க வழிபடும் கோயில்!
குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிட்டி அம்பாஜி. இது பார்வதி தேவியின் பெயராகவும் விளங்குகிறது. புகழ்பெற்ற சக்தி வாய்ந்த கோயில்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோயிலானது அம்மே பவானி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு கருவறையில் இறைவனின் திரு உருவம் என்று எதுவும் இல்லை. ஆனால், பீடம் மட்டுமே உள்ளது. அந்த பீடத்தின் மேல் அம்பாள் பவானியின் ஆடை ஆபரணங்களும் அவர் உருவம் இருப்பது போன்றே வைக்கப்பட்டு ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன. அதுவே அம்பாவின் காட்சியாகவும் தரிசிக்கப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஜெய் அம்பே என்று கோசம் போட்டு பக்தியுடன் வழிபாடு செய்கிறார்கள்.
அம்மன் சன்னதிக்கு எதிரில் நாகேஸ்வரர், நாகராஜர் சிலைகள், அனுமன் சிலைகள் உள்ளன. இதற்கு தீர்த்தம் ஊற்றி, பூ தூவி அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்யலாம். கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் கண்ணனாக விளையாடி மகிழ்ந்த போது, அவரது 3ஆவது வயதில் அவருக்கு இங்கு தான் முடி காணிக்கை தரப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. நந்த கோபனும், யசோதை தாயும் அவரை இந்தக் கோயிலுக்கு கூட்டி வந்து மொட்டை போட்டுள்ளனர்.
அன்று முதல் இன்று வரை இந்தக் கோயிலில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே மொட்டை போடும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. பெண் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்தக் கோயிலில் மொட்டை போடுவதில்லை. குழந்தை பிறந்த நாள் வரும் போது அந்த நாளுக்கு அடுத்த நாள் ஆண் குழந்தைகளுக்கு மொட்டை போட்டால் காலம் முழுவதும் செல்வ செழிப்புடனும், கிருஷ்ணனைப் போன்று விவேகத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.
மேலும் இங்கு வந்து வழிபட்டால் வேண்டுதல் யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அம்பாஜி கோயில் கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிள் கல்லால் ஆன கலசமும், 3 டன் எடையில் தங்க கவசத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பிரசாதமாக லட்டு உருணை இல்லாமல் புட்டு போன்று பிரசாதமாக கொடுப்பதாக கூறப்படுகிறது.