எந்த திசையில் உட்கார்ந்து உண்டால் என்ன பலன்?

148

எந்த திசையில் உட்கார்ந்து உண்டால் என்ன பலன் கிடைக்கும்?

இங்கு நாம் காணவிருப்பது சாப்பிடும் முறையைப் பற்றி நமது ஆன்மிகம் என்ன கூறுகிறது என்பதாகும். நமது முன்னோர்கள் வகுத்த உணவுப் பழக்கங்கள் எந்த அளவு நம் உடல் ஆரோக்கியத்துக்கு பயனளிக்கின்றன என்று பார்ப்போம்.

சரியாக சாப்பிடுவது எப்படி?

உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது. அதனால்தான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என கூறினார். உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் உண்கிறோம். அதனால், நாம் உண்ணும் உணவை கவனத்தோடு தேர்ந்தெடுக்கவேண்டும்.

உணவும் மனமும்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. நாம் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றலைத் தருவது உணவு. உடலுக்கு நாம் ஊட்டச்சத்துக்களை அளிப்பதன் மூலமே நமக்கு இந்த ஆற்றல் கிடைக்கிறது. இந்த ஆற்றலினால்தான் உடல் இயங்குகிறது. மனம் சிந்திக்கிறது, செயல்படுகிறது. எனவே, நமது வாழ்வையே தீர்மானிக்கும் உணவைப் பற்றி நம் முன்னோர்கள் கூறும்

நம்பிக்கைகள் என்ன, என்ன?

காலை, இரவு என்று இரண்டு வேளைகள் உண்பதை மட்டுமே இல்லறத்தாருக்கான நியதியாக இந்து மதம் கூறுகிறது.  ஒருவேளை உண்பவர் ‘யோகி’ என்றும்,
இருவேளை உண்பவர் ‘போகி’ (உல்லாசி) என்றும் மூன்று வேளை உண்பவர் ‘ரோகி’ (வியாதியாளர்) என்றும் சொல்கிறது. எனவே, மூன்று வேளை உணவு என்பது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பழக்கம்தான். ஒவ்வொரு வேளை உணவைச் சாப்பிடும் முன்பும் ஆண்டவனை வணங்கிய பிறகே உண்ணவேண்டும். அந்த உணவை தந்ததற்கு நன்றியும், தான் உண்ணும் உணவு செரித்து நல்ல உணர்வைத் தர வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ள வேண்டும். ‘இந்த உணவை பெறும் வேளையில் ஏதேனும் உயிர் துன்பப்பட்டு இருந்தால், அதற்கு மன்னிப்பைக் கோரிக் கொள்வதும்’ ஆன்றோர் வழக்கம்.

உணவு உண்ணும் திசைகள்:

சுத்தமான எளிய உணவை ஒருவர் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும். இதனால் அவரது கல்வி, திறமை, கலைகள் யாவும் வளரும். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், செல்வம் பெருகும். பீடை ஒழியும்.

தெற்கு நோக்கி அமர்ந்து உண்பதால் அழியாத புகழ் உண்டாகும், சொல்வன்மை பெருகும். ஆனால், வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அந்த உணவே நோயை உருவாக்கும். எனவே, வடக்கு நோக்கி உண்பதைத் தவிர்க்கவேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏன் என்றால், கிழக்கு திசை இந்திரனுக்கு சொந்தமானது. இதனால் அவரது கட்டளைக்குட்பட்ட புதனும், குருவும் அறிவைக் கொடுப்பார்கள். மேற்கு திசையின் அதிபதியான மகாலட்சுமி செல்வத்தை வாரி வழங்குவதில் ஆச்சர்யமில்லை. வடக்கு திசை ருத்திரனுக்கு உறைவிடம் எனவே, அது நோயை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

தெற்கு திசை எமனுக்கு உரியது. தர்மத்தின் தலைவனான எமன் நீங்காத புகழைத் தருபவன். அதைப்போலவே தனது வீட்டைத் தவிர உறவினர், நண்பர்கள் வீட்டில் உண்ணும்போது மேற்கு திசையை நோக்கி உண்ணக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அந்த உறவு கெட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.

கைகளால்தான் உண்ணவேண்டும். நன்கு சுத்தம் செய்த கரத்தால் உண்பதே பல நோய்களை வரவிடாமல் தடுக்கும். கைகளால் உணவை அள்ளி உண்ணும்போது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவைக் கைகளால் உண்ணும்போது உடலின் நரம்புகள் நாம் உணவு உண்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. இதனால், ஜீரணம் மிக எளிதாக நடை பெறுகிறது. இதை எந்த ஸ்பூனும் குச்சியும் தருவதில்லை. ஐந்து விரல்களையும் குவித்து உண்பது ஒரு சூட்சும முத்திரை நிலை. இதனால் ஜீரண மண்டலம் துரிதமாகச் செயல்படுகிறது. விரதம் இருக்கும்போதும், சந்திர சூரிய ஆதிக்கம் அதிகம் இருக்கும் நாள்களிலும் அசைவம் தவிர்ப்பது ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியலும் ஒப்புக்கொள்ளும் ஒரு நல்ல வழிமுறைதான்.

ஜோதிடப்படி சனியின் ஆதிக்கம் கொண்ட ஒருவர் காரத்தை அதிகம் உண்பதும், குருவின் ஆதிக்கம் அதிகம் இருப்பவர் இனிப்பை விரும்பி உண்பதும் சகஜம் என்கிறது. ராகு ஆதிக்கம் கொண்டவர் உணவு விரும்பியாக வறுத்தது, பொறித்தது என பலவாறு உண்பார்கள் எனவும் கூறுகிறது. எனவே, ஒருவரின் உணவு விருப்பம் கூட, கோள்களின் ஆதிக்கத்தால் நடப்பதுதான்என ஜோதிடம் கூறுகிறது.
ஒரு இல்லறத்தில் இருப்பவர்கள் முடிந்தவரை யாராவது ஒருவருக்கு உணவை தானமிட்டு விட்டு அதன் பிறகே உண்ணவேண்டும். முக்கிய நாள்களில் தெய்வங்களுக்கு பூஜை செய்த பிறகும், அமாவாசை போன்ற நாள்களில் பித்ருக்களுக்கு உணவிட்ட பிறகும், எல்லா நாள்களிலும் மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் முடிந்தவரை உணவிட்டு விட்டு பிறகே உண்ண வேண்டும்.

உண்ணும் போது செய்யக்கூடாதவை:

ஒருவரை வைத்துக்கொண்டு ஒருவன் தனியே உணவு உண்ணக்கூடாது.
விபூதி திருமண் இட்டுக்கொள்ளாமல் உண்பது,. குளிக்காமல் உண்பதோ தவறு. பேசிக்கொண்டோ, பெரும் சத்தம் எழுப்பிக்கொண்டோ, கைகளை ஊன்றிக்கொண்டோ உண்பது தவறு. உணவைச் சிந்துவதும், அலட்சியமாக உண்பதும் உணவுக்கு இழுக்கு ஏற்படும் செயல்களாகும். விரல்களைத் தாண்டி உள்ளங்கை நனைவது கூட சாப்பிடும் முறை அல்ல. ஒழுங்காக தகுந்த மரியாதையோடு பிறர் முகம் சுழிக்காத வகையில் நாம் உணவு உண்ணும் முறை இருக்க வேண்டும்.

நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுவது நல்லது. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள். பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க, கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்.

அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம். பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம். பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும். இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம். சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள். பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம். சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்.