Saturday, October 14, 2023
HomeArthamulla Aanmeegamசிரஞ்சீவியாக வாழும் 8 பேர்!

சிரஞ்சீவியாக வாழும் 8 பேர்!

சிரஞ்சீவியாக வாழும் 8 பேர்!

1.அனுமன்
2.விபீஷணர்
3.க்ருபாசார்யார்
4.மகாபலி சக்கரவர்த்தி

5.மார்க்கண்டேயர்
6.வேத வியாசர்
7.பரசுராமர்
8.அசுவத்தாமன்

அனுமன்:

இராமரின் தீவிர பக்தனாக இருந்த வாயுபுத்திரன் அனுமன் இராவணனுக்கு எதிராக இராமர் நிகழ்த்திய போரில் ராவணனை கொல்ல முக்கிய காரணமாக இருந்தார். இவர் மகாபாரத போரிலும் அர்ஜுனின் தேரில் உள்ள கொடியில் இருந்தார். யுகங்கள் பல கடந்தும் இன்றும் இவர் சிரஞ்சீவியாக இவ்வுலகில் வாழ்ந்து வருவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அதற்கு காரணம் இராமர் ஆஞ்சனேயருக்கு அளித்த சாகா வரமும், அவர் இட்ட அன்பு கட்டளையும்தான்.

பரசுராமர்:

விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் பரசுராமர். அனைத்து போர்கலைகளுக்கும், வேதங்களுக்கும், திவ்ய அஸ்திரங்களுக்கும் இவர்தான் முன்னோடி ஆவார். கல்கி புராணத்தில் சொல்லியுள்ளபடி உலகம் அழியும் தருணத்தில் இவர் மீண்டும் வருவார். அதன்பின் தோன்ற போகும் திருமாலின் இறுதி அவதாரத்திற்கு அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து திவ்ய அஸ்திரங்கள் பெற உதவி மனிதகுலத்தை காப்பாற்றுவார் என கல்கி புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

அஸ்வத்தாமன்:

அஸ்வத்தாமன் பெற்ற இந்த சாகாவரமானது அவனின் நல்ல செயலுக்காக வழங்கப்பட்டதல்ல. அவன் பெற்ற இந்த சாகா வரம் வரம் என்பது அவனுக்கு அளிக்கப்பட்ட சாபமாகும். இந்த சாபமானது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அஸ்வத்தாமனுக்கு வழங்கப்பட்டது.

மகாபாரதத்தில் பாண்டவர்களின் ஐந்து பிள்ளைகளையும் கொன்று வெறி அடங்காத அசுவத்தாமன் அர்ஜுனனின் மகனும் அபிமன்யுவின் மனைவியுமாகிய உத்திரையின் கருவில் இருந்த குழந்தையை கொல்ல பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். மன்னிக்க முடியாத இந்த குற்றத்தை செய்ததற்காக கிருஷ்ணர் அவனுக்கு மரணம் நேரக்கூடாது என சபித்து விட்டார். அஸ்வத்தாமன்வாழும் காலம் முழுவதும் வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் வாழ வேண்டுமென்று அவர் இந்த சாபத்தை கொடுத்தார்.

மகாபலி சக்கரவர்த்தி:

இவரை மகாபலி என்றும் கூறுவார்கள். மூன்று உலகத்தையும் ஆண்ட இவர் அசுர குல அரசன் பிரகலாதனின் பேரன் ஆவார். ஒவ்வொரு வருடமும் ஓணத்தின் போது மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களை பார்ப்பதற்காக வருவார் என்று கேரளத்தில் நம்பப்படுகிறது. இவருக்கு சாகாவரத்தை கொடுத்தது திருமால் ஆவார்.

விபீஷணன்:

விபீஷணன் இராவணனின் சகோதரன் ஆவார். இராமாயண போர் தொடங்கும் முன்பே விபீஷணன் தன் அண்ணன் ராவணனின் செயல் பிடிக்காமல் இராமர் பக்கம் சென்று விட்டார். போரின் முடிவில் இராமர் கையால் இராவணன் கொல்லப்பட்ட பிறகு இவர் இலங்கையின் அரசனாக முடிசூட்டப்பட்டார். இவர் மகாயுகம் முடியும் வரையான நீண்ட காலம் வாழும் வரத்தை பெற்றிருந்தார்.

வியாசர்:

மிகப்பெரிய ஞானி, முனிவர் மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை கொடுத்த வியாசரும் சாகாவரம் பெற்றவராவர். ஞானம் மற்றும் அறிவாற்றலின் சின்னமான இவர் பராசர முனிவரின் மகனும், வசிஷ்ட மகரிஷியின் பேரனும் ஆவார். தீதாயுகத்தின் கடைசியில் பிறந்த இவர், துவாபர யுகம் முடிந்து, கலியுகத்திலும் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

கிருபாச்சாரியார்:

இவர் சந்தனு மன்னனால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். போர்க்கலைகளையும், வேதங்களையும் கற்ற இவர் பின்னாளில் இளவரசர்களுக்கு குருவாக மாறினார். பாரத போரின் முடிவில் கௌரவர்கள் சார்பில் இருந்த ஒரே வீரர் இவர்தான். குரு வம்சத்தின் கடைசி வாரிசான அபிமன்யுவின் மகனான பரிக்ஷித்துக்கு எல்லா கலைகளையும் கற்றுக்கொடுத்தது இவர்தான்.

மார்க்கெண்டேயன்:

மார்க்கெண்டேயன் சிவபெருமானின் தீவிர பக்தர் ஆவார். இவருக்கு மரணமில்லா பெரு வாழ்வை சிவபெருமானும், எமதர்மனும் வழங்கினர். மரணமில்லா வாழ்வு மட்டுமின்றி என்றும் இளமையாக இருக்கும் வரத்தையும் இவர் பெற்றுள்ளார். தன் பக்தருக்காக சிவபெருமான் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு மார்க்கெண்டேயனின் கதை ஒரு சிறந்த உதாரணமாகும்.

RELATED ARTICLES

Most Popular