பன்னீர் இலை விபூதியின் அருட்பிரசாத மகிமைகள்!
வேறெங்கும் கிடைக்காத திருசெந்தூர் முருகன் கோவில் விஷேச பன்னீர் இலை பிரசாதம். விசுவாமித்திர மகரிஷி இங்க வந்து தரிசித்து இலை விபூதிப் பிரசாதம் பெற்றார் அவருடைய நோய் நிங்கிற்று என்பது ஸ்தல புராணம். வலிப்பு குன்மம் ஷயம் நிரழிவு முதலிய கொடுமையான வியாதிகளும், பூத பிசாசங்கள் பற்றியதால் உண்டாகும் துன்பங்களும் உன்னுடைய இலை விபூதி பிரசாதத்தை பூசிக் கொண்ட மாத்திரத்தில் மறைந் து விடுமே என்கிறது ஆதிசங்கரர் அருளிய சுப் பிரமணிய புஜங்கம்.
“அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே”
முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும்.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகளின் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி கோயில் திருப்பணியை மேற்கொள்ளும்படி ஆணையிட்டாராம். அதன்படி அவர் இங்கு தங்கி கோபுரம் கட்டி முடித்திருக்கிறார். அவ்வாறு கோபுரம் கட்டியபோது அந்தப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு கூலி கொடுக்க அவரிடம் பணமில்லை. மனதார முருகனை வேண்டிக்கொண்டு, அவர் பிரசாதமான விபூதியை இலையில் மடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.
தூண்டுகை விநாயகர் கோயிலைக் கடந்து சென்றதும் அந்த இலையைப் பிரித்துப் பார்க்குமாறு கூறினார். பணியாளர்களும் அப்படியே பார்த்தபோது தங்களுக்கான ஊதியம் அந்த இலை விபூதிக்குள் இருந்தது கண்டு அதிசயத்தனர். அதாவது அவரவர் செய்த வேலைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் முருகனின் அருளால் தனித்தனியே தங்கக் காசுகளாக ஊதியமாக கிட்டியது.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.
“என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்” என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.
“இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்”
என்று பாடுகிறார்.
விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
“ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று…”
என்று பாடுகிறார். நாமும் “ஆறுமுகம்” என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.
