பகவானுடைய அவதார சரித்திரம், லீலைகள் எல்லாமே பாவத்தைப் போக்கடிக்க கூடியவை.

408

கிருஷ்ணாவதாரத்தில் பல இடங்களில் நவநீத சௌர்யம் (வெண்ணை திருடுதல்) என்கிற பெரிய விருத்தாந்தம் சொல்லப்பட்டிருக்கிறது.

வெண்ணையிலே பகவானுக்கு விருப்பம் அதிகம் – வெண்தயிர் தோய்த்த செவ்வாயன் அவன்!

திருட்டுத்தனம் என்பதே திருடுமா..? பகவானின் அவதார விசேஷத்தில் அது நடக்கிறது… அவன் வெண்ணை திருடுகிறான் – அந்தத் திருட்டுத் தன்மை நம் பாவம் மொத்தத்தையும் திருடிக் கொள்கிறது.

அவன் காராகிரஹத்திலே (சிறை) பிறந்தான் என்றால், நமது சிறைவாசம் விடுபடுகிறது. அவன் அந்த ராத்திரியில் பிறந்தான் என்றால் நம் அஞ்ஞான இருள் நீங்கி விடுகிறது. இப்படி கிருஷ்ண சரித்திரத்தை நினைக்க நினைக்க நமக்கு எதிர்த்தட்டான பலன்கள் கிடைக்கின்றன.

நமது சர்வ பாவங்களையும் போக்கடித்து விடுகிறான் எம்பெருமான்.

ஒரு பெரிய பானை. அதிலே பெரிய மத்தைப் போட்டுக் கடைகிறாள் யசோதை. “டர்-டர்” என்று ஒலி – புலி உறுமுகிற மாதிரி சப்தம் வருகிறது. வைகுண்ட லோகத்தில் போய் எதிரொலிக்கிறதாம் அது!

எங்கோ போய்க் கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணன், அவள் கடைகிறதைப் பார்க்கிறான். மத்து, பானைக்குள்ளே போவதும் வருவதுமாக “குங்-குங்” என்று ஓசை! வேதத்தில் கணம் சொல்கிறபோது எழுகிற மாதிரியான ஓசை கேட்கிறது.

ஓடி வந்து அம்மாவின் முதுகிலே கை வைத்தது குழந்தை!

“பானை நடுவிலே குங்-குங் என்று ஓசைவருகிறதே அது என்னம்மா? என்று கேட்டது.

நடுங்கிப் போய்விட்டாள் யசோதை! ஏனென்றால் மொத்தத்தையும் துவம்சம் பண்ணிவிடும் குழந்தை! வெண்ணையை வைத்திருந்து மெதுவாகக் கொடுக்க வேண்டும் என்பது அவளுக்கு ஆசை. குழந்தையை வெளியே துரத்த வேண்டும் என்பதற்காக, “அதுக்குள்ளே பூதம் இருக்கு.. உன்னைப் பிடிச்சுக்கும். வெளியிலே ஓடிப் போய்விடு” என்று மிரட்டினாள்.

குழந்தையோ, வெளியிலே ஓடாமல், பானை பக்கத்திலே போய் அதைப் பிடித்துக் கொண்டு நிற்கிறது.
உலகத்தையே விழுங்கக் கூடிய பூதம், இந்த பூதத்துக்குப் போய் பயப்படுமா?

“அம்மா என்கிட்டே பொய் சொல்லலாமா? இதுக்குள்ளே நிஜமாகவே பூதம் இருக்கா..”?

“சத்யமாகக் சொல்றேண்டா! பூதமிருக்கு.. அது உன்னைப் பிடிச்சுக்கும்.”

” ஏம்மா! பூதம் உன்னைப் பிடிச்சுக்காதா”?

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை யசோதைக்கு… சமாளித்துக் கொண்டு பேசுகிறாள். “நீ சின்ன குழந்தையல்லவா? உன்னைப் பிடித்துக் கொள்ளும்; நான் பெரியவள் என்பதால் என்னைப் பிடிச்சாலும் தாங்கிக் கொள்வேன்.”

பிற்காலத்தில் உலகுக்கே கீதையைச் சொல்லவிருந்த குழந்தை, இந்த நேரத்திலே அம்மாவுக்கு ஒரு குட்டி கீதை சொல்கிறது.

“அம்மா! நீ சொல்வது நன்றாயிருக்கா? என்னை வெளியே போகச் சொல்றியே. நான் போன பிற்பாடு அந்த பூதம் உன்னைப் பிடித்துக் கொண்டால்… உலகத்திலே உள்ளவர்கள் என்னை என்ன சொல்லுவார்கள்? அம்மாவை பூதத்திடம் காட்டிக் கொடுத்த அல்பமான பிள்ளை என்று அல்லவா என்னைச் சொல்லுவார்கள்! அம்மாவை ரட்சிக்க முடியாதவன் இருந்து என்ன பயன்”

உடனே அவள் கண்களிலே தாரை தாரையாக நீர்! என்ன பேசுவதென்று தெரியவில்லை யசோதைக்கு. தழுதழுத்து, “குழந்தாய்! என்னை என்னடா செய்யச் சொல்கிறாய்..? என்று கேட்கிறாள்.

“முதலிலேயே என் யோசனையைக் கேட்டிருக்கலாம் இல்லையா.. சொல்லியிருப்பேனே! யோசனை சொல்வதற்காகப் பிறந்தவன் தானே நான்”

“இப்போது தான் சொல்லேன் உன் யோசனையை”

“அம்மா! உன் இரண்டு கைகளையும் பூரணமாகக் பானைக்குள் விடு. அதற்குள் பூதம் இருக்கு என்றாயே, அதை எடுத்து என் கையிலே கொடு.. அதை நான் விழுங்கி விடுகிறேன்” – என்று தாயாரிடம் சொல்லி, சிரித்தபடி பானையை எட்டி உதைத்து விட்டது குழந்தை! வெண்ணையை எடுத்து விழுங்கி விட்டு மோரை அலட்சியப்படுத்தி விட்டு குடுகுடுவென்று ஓடுகிறது!

எல்லோரும் குழந்தையைத் துரத்திக் கொண்டு ஓட்கிரார்கள். ஒரு கோபிகா ஸ்த்ரீ கிரஹத்திலே நுழைந்தது அது. இந்தக் கருங்குழந்தை நுழைந்ததும் அந்த இடம் மேலும் இருட்டு ஆகி விட்டது.

கறுப்புப் பானையிலே கருப்பு மடக்கு போட்டு வெண்ணையை மூடி வைத்திருக்கிறார்கள். பானையைத் திறந்து வெண்ணையை எடுத்து கொள்கிறது. அந்த நேரத்திலே கேபிகா ஸ்த்ரீ வந்து விட்டாள். நடுங்கிப் போய் விட்டது குழந்தை. இரண்டு பானைகளுக்கு நடுவிலே போய் உட்கார்ந்து கொண்டது!

உட்கார்ந்தால்.. தலையிலே இருக்கிற ஆபரணம் கிணி-கிணி என்று ஆடி ஒலிஎழுப்புகிறது. கழுத்து ஆபரணம் கண-கண என்கிறது! இடையிலே உள்ள ஆபரணம் கல-கலவென்கிறது. திருவடி ஆபரணமோ ஜில்-ஜில் என்று ஒலிக்கிறது. ஒடுக்கி ஒட்கார உட்கார, ஒலிஅதிகமாகிறது!

குழந்தை அந்த ஆபரணங்களைப் பார்த்துக் கேட்கிறது. “நான் உங்களைத் தாங்குகிறேனே… இப்படி நீங்கள் ஒலிக்கலாமா? அவள் கண்டு பிடித்தால் என் அம்மாவிடம் போய்ச் சொல்வாளே.. அப்புறம் அவர் என் முதுகில் ஒலிக்கச் செய்து விடுவாரே”! – எல்லா ஆபரணங்களையும் பார்த்துக் கைகூப்பிக் கேட்கிறதாம் குழந்தை!

அசித் விஷயங்களை, ஆபரணங்களை எல்லாம் வந்தனம் பண்ணுகிறானே பகவான்.. நாம் அவனை வந்தனம் செய்ய வேண்டாமா! ரிக் வேதம் சிரசிலே ஒலிக்கிறது. விசேஷ சக்தியுடன் இருக்கும்படியான யஜுர் வேதம் கண்டத்தில். அதர்வண வேதம் இடையிலே ஒலிக்கிறது… சாமம் திருவடியில் ஒலிக்கிறது.

ஒலிக்காமல் இருங்கள் என்று பகவான் கைகூப்புகிற அழகே அழகு!

இன்னொரு கிரஹத்திலே போய் உறியைத் தொடுகிறது குழந்தை. தொட்ட கணத்திலே கணகணவென்று மணி அடிக்க ஆரம்பித்து விடுகிறது!

“ஏ மணியே! நீ இப்படி அடித்து என்னைக் காட்டிக் கொடுகிறாயே” என்கிறது குழந்தை.

“அடியேன், அடியேன்” என்று நயமாய் பதில் சொல்கிறது மணி.

குழந்தை பானையை எடுத்து வைத்துக் கொண்டு வாயிலே வெண்ணையைப் போட்டுக் கொள்ளும் கணத்தில் மணி திரும்பவும் அடிக்க ஆரம்பித்தது.

“அடிக்க மாட்டேன் என்று சொன்னதால் தானே வாயில் போட்டுக் கொண்டேன்… இப்படி நீ அடிக்கறியே, இது பாவ்யமா!” குழந்தை கேட்டது.

மணியோ, மணியான வார்த்தையால் பதில் சொன்னது!குடுகுடுவென்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். ஊர்க் கடைசியிலே ஒரு வீடு. அந்த வீட்டுக்குள் போய்ப் புகுந்தான்.

எதிர்பாராத சமயத்திலே வந்து நிற்பதுதான் பகவானுடைய குணவிசே-ஷம்! வருவான் என்று நினைக்கும் நேரத்தில் வரமாட்டான்; வர மாட்டான் என இருக்கும்போது வந்து சேருவான்.

மணி சொன்ன மணியான வார்த்தை இதுதான் – நாம் எப்போதும் ஹ்ருதயத்திலே வைத்துக் கொள்ள வேண்டிய வார்த்தை:

“ஹே பிரபு! ஜகன்னதா! சர்வலோக சரண்யா! தங்களுக்கு நிவேதனம் ஆகிக் கொண்டிருக்கும் பொது நான் பக்கத்தில் இருந்து அடிக்காமல் போனால் எனக்கு ஏது பிரயோஜனம்?”

பகவான் வெண்ணையை வாயில் போட்டுக் கொண்டதைத்தான் நிவேதனம் என்றது அந்த மணி!

“நான் ஸ்வரூப லாபம் பெற வேண்டாமா? நீங்கள் உண்ணும் நேரம் தேவதைகள் வரவேண்டும்; ராக்ஷஸர்கள் ஓட வேண்டும். அந்த பிரணவம் த்வனிக்க வேண்டும். அதனால் தான் அடித்தேன்”. மணி அடிப்பது கூட பெரியோரிடத்திலே பழகி அடிக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெரிகிறது. ஒவ்வொருவிதமாக அடிப்பதற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.

தூரத்தில் இருப்பவர்கள் கூட, மணி அடிக்கும் விதத்தைக் கொண்டே பகவானுக்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.

மணி சொன்ன பதிலுக்கு மறு பேச்சு இல்லை பரமாத்மாவிடம்!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !