அம்மை நோய் நீங்க வழிபட வேண்டிய கோயில்!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றுக்கால் என்ற ஊரில் உள்ள கோயில் பகவதி அம்மன் கோயில். இங்கு பகவதி அம்மன் மூலவராக காட்சி தருகிறாள். ஆண்டுதோறும் மாசி மாதம், பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று நடைபெறும் பொங்காலை விழாவில் பங்கேற்று பொங்கலிட்டால் வேண்டிய காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
கின்னஸ் சாதனை படைத்த கோயில்:
கடந்த 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இது இந்தக் கோயிலின் முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது. ஆற்றுக்கால் கோயிலில் குடிகொண்ட பகவதியின் மேல் பக்தர்கள் கொண்ட நம்பிக்கையே இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகும்.
பிரார்த்தனை:
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கண் திருஷ்டி நீங்கவும், மன அமைதிக்காகவும், எதிரி தொல்லை நீங்கவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், திருமணத் தடை உள்ளவர்களும் இந்தக் கோயிலில் வந்து வழிபாடு செய்கின்றனர். அப்படி வழிபாடு செய்து நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் துலாபாரம் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து கொள்கின்றனர்.
பகவதி அம்மன் (கண்ணகி) கோயில் வரலாறு:
மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுபவர் பரசுராமர். இவர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோயில்களையும் நிறுவியதாக கூறப்படும் இடம் தான் கேரளா. இப்படி இறைவனின் ஆட்சியோடு சேர்ந்து இயற்கையின் ஆட்சியும் நடப்பதால் கேரளாவிற்கு கடவுளின் தேசம் என்று பெயர். இங்கு ஏராளமான பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. ஆண்கள் மட்டுமே வழிபாடு செய்யும் சபரிமலை ஐயப்பன் கோயிலைப் போன்று பெண்கள் மட்டுமே பொங்கலிடும் கோயிலும் உள்ளது. அந்தக் கோயில் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் நடைபெறும் பொங்காலை திருவிழா உலகம் முழுவதும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த விழாவின் மூலமாக லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடி பொங்காலை இடுவதன் மூலமாக இந்தக் கோயிலானது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு மிக அருகில் கிட்டத்தட்ட 2 கிமீ தொலைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆற்று வழியாக கிடைத்த தேவி குடி கொண்டுள்ள இடம் என்பதால், ஆற்றுக்கால் என்று இருந்து தற்போது ஆட்டுக்கால் என்று மருவியுள்ளது. இங்குள்ள பகவனி அம்மன் கண்ணகி என்று அழைக்கப்படுகின்றாள்.
பகவதி அம்மன் வரலாறு:
காந்தளூர் அருகில் உள்ள கிள்ளியாற்றங்கரைக்கு அருகில் 13 வயது சிறுமியாக தேவியானவள் வந்து நின்றாள். அப்போது, தன்னை அந்தக் கரையில் சேர்க்கும்படி முல்லு வீட்டு நாயரிடம் கூறி மறைந்தாள். தேவியை காணாத மனவேதனையடைந்த அவரது கனவில் தோன்றி, தோப்பின் மேற்குக் கோடியில் 3 கோடுகள் இழுக்கப்பட்ட இடத்தில் தனக்கு கோயில் கட்டி வழிபாடு செய்யுமாறு கூறிச் சென்றாள். அதன்படியே அந்த இடத்தில் முல்லு இல்லத் தலைவர் ஓலைவீட்டில் அன்னையை எழுந்தருளச் செய்தார். இதன் பின் திருவிதாங்கூர் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜா காலத்தில் 1899 இல் கேரள பாணிக்கோயிலாக இந்தப் பகவதி அம்மன் கோயில் கட்டப்பட்டது.
தல வரலாறு:
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் பாண்டிய மன்னன் நீதி தவறினான் என்பதற்காக மதுரையை எரித்த கண்ணகியே கேரளாவின் ஆற்றுக்கால் பகவதி என்றும் புராணம் கூறுகிறது. மதுரையை தீக்கிரையாக்கி விட்டு ஆவேசம் பொங்க தெற்கு நோக்கி புறப்பட்ட கண்ணகி, கன்னியாகுமரி வந்து அங்கிருந்து கேரள மாநிலத்தில் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில், திருவனந்தபுரம் சென்றார். அங்குள்ள கிள்ளியாற்றங்கரையில் கண்ணகி இளைப்பாறினார். இதன் நினைவாகவே இங்கு பிற்காலத்தில் கோயில் ஒன்று உருவானதாகவும், கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே பகவதி அம்மன் என்றும் இந்தக் கோயிலின் தல வரலாறு கூறுகிறது.
பராசக்தி மீது பற்று கொண்ட பக்தர் ஒருவர் கிள்ளியாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தெய்வீக அம்சம் கொண்ட சிறுமி ஒருவர் திடீரென்று அவர் முன்பு தோன்றினார். அந்த சிறுமியின் காந்த சிரிப்பில் தன்னை மறந்து நின்ற பக்தரிடம் தன்னை ஆற்றின் அடுத்தகரையில் கொண்டு சென்று விட முடியுமா? என்று கேட்டுள்ளார். சிறுமியை உடனே அனுப்ப மனம் விரும்பாத பக்தர், சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினார். இதற்காக சிறுமியின் கையை பிடித்து அழைத்துச் செல்ல திரும்பிய போது சிறுமி திடீரென மாயமாகி விட்டார். மனம் நொந்த பக்தர், வீட்டிற்கு சென்று கண்மூடி தூங்கினார்.
அப்போது மீண்டும் அந்த சிறுமி, பக்தரின் கனவில் தோன்றி, கிள்ளியாற்று கரையில் தென்னை மரங்களுக்கிடையே 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் எனக்கு கோயில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறியபடி மறைந்து போனார். அதன் பிறகு தான் பக்தருக்கு சிறுமி வடிவில் வந்தது சாட்சாத் பகவதி என்று தெரிந்தது. அந்த பக்தரின் முயற்சியால் கட்டப்பட்ட கோயிலே இன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலாக திகழ்கிறது.
பெண்களின் சபரிமலை:
இந்தக் கோயிலானது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் முக்கிய விழா பௌர்ணமி நாளில் நடைபெறும் பொங்கல் விழா. மாசி மாதத்துப் பெண்களால் மட்டும் நடத்தப்படும் ஒரு விழாவாகும். இந்தப் பொங்கல் விழா வழிபாடு தொடங்குவது மாசி மாதத்துக் கார்த்திகை நட்சத்திரத்தில் ஆகும். இந்தப் பெரங்கல் விழா முடிவு பெறுவது மாசி மாதத்துப் பௌர்ணமி கூடிய பூரம் நட்சத்திரத்தில் ஆகும். மொத்தம் ஒன்பது நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தப் பொங்கல் விழாவில் சாதி, மத பேதமின்றி, ஏழை, பணக்கார வித்தியாசமின்றி அனைத்துப் பெண்களும் அருகருகே அமர்ந்து அடுப்பு மூட்டிப் பொங்கல் பொங்கி தேவிக்குப் படைப்பது வழக்கம்.
சூரன் குத்து:
புத்தாடை அலங்காரத்தில், இடுப்பின் இருபுறம் குத்தியிருக்கும் உலோக அலகுகளுடன், பண்டைய நரபலியை நினைவூட்டும் ‘சூரன் குத்து’ நடக்கும். இத்தனை சிறப்புகள் மிக்க இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் பலாமரத்தால் செய்யப்பட்டது ஆகும். இந்த அம்மன் நான்கு கைகளுடன் காட்சி தருகிறாள். இந்த நான்கு கைகளிலும் சூலாயுதம், வாள், கங்காளம் (எலும்புக்கூடு), கேடயம் ஆகியவை உள்ளன. இந்த அம்மனுக்குக் கீழே நாக்கு நீட்டிய பூதகணம் உள்ளது.
சிறுவர்களின் குத்தியோட்டம்:
கோயில் பொங்கல் விழாவில் சிறுவர்களது குத்தியோட்டம் சிறப்பு மிக்கது. இந்த வழிபாட்டை 13 வயது சிறுவர்கள் நடத்துகிறார்கள். திருவிழா தொடங்கிய 3ஆம் நாள் சிறுவர்கள் தலைமை அர்ச்சகரிடம் பிரசாதம் பெற்று, கோவிலில் தனி இடத்தில் 7 நாட்கள் தங்கியிருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். அந்த 7 நாட்களில் தினமும் நீராடி அம்மனுக்கு சன்னிதியில் ஈர உடையுடன் நின்றபடி 1008 நாமங்களை சொல்லி வழிபட வேண்டும். இந்த விரதத்தை மேற்கொள்வதால், சிறுவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.
சிறுமிகளின் ஊர்வலம்:
பொங்கல் விழா நடைபெறும் அன்று காலையில், சிறுவர்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இதனை தாலிப்பொலி என்பார்கள். தாலம் என்றால் தட்டு. பொலி என்றால் கதிர். சின்னப் பெண்கள் அரச குமாரிகள் போல் கிரீடமணிந்து, தட்டுகளில் சிறு விளக்கும், புதுக்கதிரும் (நெற்கதிர் அல்லது கமுகம் குலை) ஏந்திப் புத்தம் புது மலர்களாக ஊர்வலம் போவார்கள்.
இவ்வாறாக ஆற்றுக்கால் தேவிக்குத் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. சிறுமிகளுடன் அவர்களது பெற்றோர், உறவினர்கள் வருவார்கள். இந்த வழிபாட்டால், சிறுமிகளுக்கு நோய் நொடி வராது. அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நல்ல வரன்கள் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
