சித்ரா பெளர்ணமியில் வீட்டுவாசலில் விளக்கேற்றுங்கள்

291

குலதெய்வம்,இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வ வழிபாடு அவசியம்….

சித்ரா பெளர்ணமியில், வீட்டில் சிரத்தையுடன் செய்யப்படும் பூஜையால், வீட்டில் இதுவரை இருந்த கஷ்டங்கள் விலகும். சுபிட்சம் நிலவும் என்பது உறுதி. சித்ரா பவுர்ணமி அற்புதநாளில், வீட்டில் பூஜையிலும், வழிபாட்டிலும் ஈடுபடுங்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சித்ரா பௌர்ணமியை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுகிற வைபவம். இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. கோயிலின் சாந்நித்யமும் சக்தியும் சித்திரை மாதத்தின் பெளர்ணமி நாளில், இன்னும் வீறுகொண்டு வெளிப்படும் என்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே, அந்தநாளில், கோயிலுக்குச் செல்லும் போது நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு, நம்மை செம்மையுறச் செய்யும் என்பது நம்பிக்கை.

அதேபோல், சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பன்மடங்கு வீரியம் அதிகம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

#சித்ரா_பெளர்ணமி_நாளில்
#வீட்டில்_என்ன_செய்யவேண்டும்?

‌சி‌த்ரா பௌர்ண‌மி அ‌ன்று அதிகாலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்துவிடுங்கள். முன்னதாக, இல்லத்தை தண்ணீர் விட்டு, நன்றாகத் தூய்மையாக்கி விடுங்கள். அதேபோல், பூஜையறையில் உள்ள சுவாமி படங்களையும் தூய்மையாக்கி, சந்தனம் குங்குமம் இடுங்கள். பூக்களால் அலங்கரியுங்கள்.

உங்கள் ‌குலதெய்வத்தை வணங்குங்கள். அதேபோல், உங்களுக்கான இஷ்ட தெய்வத்துக்கு உகந்த மலர்களைக் கொண்டு அலங்கரியுங்கள். அடுத்து, வீட்டு தெய்வம் என்பார்கள். அதாவது, வீட்டில் எவரேனும் கடந்த தலைமுறைகளில், கன்னிப்பெண்ணாகவோ கர்ப்பிணியாகவோ இருந்து இறந்திருப்பார்கள். அவர்களின் படங்கள் இருந்தால், அந்தப் படங்களுக்கும் சந்தனம் குங்குமம் இடுங்கள். மலர்களால் அலங்கரியுங்கள்.

குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வம் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வதுதான் சித்ரா பெளர்ணமி நாளின் மிக முக்கியக் கடமை. எனவே இந்தநாளில், மறக்காமல் விளக்கேற்றி, இந்தத் தெய்வங்களை வழிபடுங்கள். காலை வழிபாட்டின் போது, சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், எலுமிச்சை சாதம் என நைவேத்தியம் செய்யுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு நைவேத்தியப் பிரசாதத்தை வழங்குங்கள்.

அதேபோல், மாலையில் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலில் இரண்டு அகல்விளக்குகள் கொண்டு விளக்கேற்றுங்கள். மீண்டும், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வங்களுக்கு தீபதூப ஆராதனைகள் செய்யுங்கள். முடிந்தால், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது. பூஜை செய்த பிறகு, நிறைவாக, பயறு வகைகள் கொண்டு சுண்டல் அல்லது கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது அவல் பாயசம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குங்கள். அப்படியே வீட்டு வாசலில் இருந்தபடி, சந்திர தரிசனம் செய்யுங்கள். மனதார சந்திர பகவானிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

இதுவரை உங்கள் வீட்டில் இருந்த குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகள் அடியோடு விலகிவிடும். அமைதி தவழும். ஐஸ்வர்யமும் சுபிட்சமும் குடிகொள்ளும்.