சுந்தர காண்டம் பகுதி-9

318

நேற்றைய தொடர்ச்சி…

சுந்தரகாண்டத்தை பாராயணம் செய் என்று சொல்பவர்கள் அயோத்தியா காண்டத்தை யோ யுத்த காண்டத்தையோ இன்னும் பிற காண்டங்களையோ படி என சொல்லவில்லை. காரணம் என்ன?

அத்தனை காண்டங்களின் சாறும் சுந்தரகா ண்டத்திலே விரவிக்கிடக்கிறது.ஆஞ்சநேயர், தான் சந்திக்கும் நபர்களிடம் எல்லாம், ராமனைப் பற்றியும், சீதையைப் பற்றியும், தசரதரைப் பற்றியும் விலாவாரியாகச் சொல்கிறார்.

இதிலேயே பிற காண்டங்களின் பொருள் எல்லாம் அடங்கி விடுகிறது. சுந்தரகாண்டம் படித்தால் மொத்த ராமாயணத்தையும் படித்த திருப்தி ஏற்படுகிறது. மேலும், பல படிப்பினைகளை அது தருகிறது.

ஆஞ்சநேயர், இலங்கையில் புகுந்து அங்குலம் அங்குலமாக அளந்து பார்க்கிறார். எப்படி அந்த நகருக்குள் கால் வைத்தாராம்தெரியுமா? இடது காலை முதலில் தூக்கி வைத்தாராம். ஒரு சுபநிகழ்ச்சியாக இருந்தால் வலதுகாலை தூக்கி வைத்து வரச்சொல்வார்கள்.
வலதுபா தத்தை ஊன்றி நடக்கும்போது, நரம்புகளின் உணர்வுகள் தூண்டப்பட்டு மன வலிமை அதிக ரிக்கும் என்பதும், பூமி வலமாக சுற்றுவதால் இயற்கையை மதித்து வலது பாதத்தை முதலில் தரையில் ஊன்ற வேண்டும் என்ற அறிவியல் காரணங்களே, ஆன்மிகத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், ஆஞ்சநேயர் இடது பாதத்தை தூக்கி வைத்து இலங்கைக்குள் நுழைந்தார். வலது என்பது நமக்கு நன்மை கிடைக்க. இடது என்பது எதிரிக்கு தோல்வியை உண்டாக்க.
நீதிசாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி, எதிரி ஒருவனை ஜெயிக்க வேண்டுமானால், அவன து ஊர் அல்லது நாட்டுக்குள் நேரடி வழியில் செல்லாமல், ஏதோ ஒரு குறுக்கு வழியில் நுழைய வேண்டுமாம். அவனது எல்லைக்குள் கால் வைக்கும் போது, இடதுகாலை ஊன்றி செல்ல வேண்டுமாம்.
இதன்படி, லங்காதேவதையை வெற்றி கொ ண்ட ஆஞ்சநேயர், கோட்டை வாசல் வழியே நுழையாமல், மதில் சுவர் ஏறிக் குதித்து, இடது பாதத்தை தரையில் ஊன்றிச் சென்றார்.
அந்த நகரை முழுமையாக சுற்றி வந்தார். எங்கும் வாத்திய இசை, மக்கள் மகிழ்ச்சியுடன் சிரித்து மகிழ்ந்திருந்தனர். காரணம் ராவண ராஜ்யத்தில் பஞ்சத்திற்கு இடமேது. எல்லா தேவர்களுமே அவன் கைக்குள். பிறகென்ன செழிப்புக்கு பஞ்சம்.

இதில் இன்னொரு சூட்சுமம் வேறு, லட்சுமியி ன் மறுஅவதாரமான சீதாவும் அந்த தேசத்துக் குள் இருக்கிறாளே! விரும்பினாலும், விரும்பா விட்டாலும் அவள் அங்கே இருப்பதால் வந்த களை வேறு அந்த நாட்டை பிரகாசிக்கச் செய்தது.
பூக்களின் மணம் அனைவரையும் கவர்ந்தது. பெண்கள் பாடும் அற்புதமான பாடல்கள், விண்ணுலகில் அப்சரஸ்கள் பாடுவது போல் தேனாய் இனித்தது.
ராட்சஷர்களாக இருந்தாலும் பல வீடுகளில் வேத அத்யயனம் நடந்து கொண்டிருந்தது விசேஷத்திலும் விசேஷம்.

சிலர் தங்கள் மன்னன் ராவணனின் கீர்த்தி யைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒரு சில இடங்களில் அல்ப ஆசைகளை நிறைவே ற்றிக் கொள்ளும் பொருட்டு பசுத்தோலை உடுத்திக் கொண்டு சிலர் யாகம் செய்து கொண்டிருந்தனர்.

சில வீரர்கள், ஆயுதமில்லாமல் தங்கள் பலத்தை நம்பி சக வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். இப்படியே பல்வேறு தரப்பு மக்களையும், இடங்களையும் பார்த்த ஆஞ்ச நேயரின் கண்களில் ராவணனின் அழகிய பொன்கூரை வேயப்பட்ட அரண்மனை தெரிந்தது.
தாமரை மலர் நிறைந்த அகழிகளால் அது சூழப்பட்டிருந்தது. அரண்மனை மதில் சுவர்க ள் விண்ணை முட்டுமளவு எழுந்திருந்தது. அழகிய குதிரைகள், நான்கு தந்தங்களைக் கொண்ட அதிசய யானைகள். இப்படி செல்வக் களஞ்சியமாகத் திகழ்ந்த ராவணனின் அரண் மனைக்குள் ஆஞ்சநேயர் நுழைந்தார்.

அவர் வந்த வேலை சீதையைத் தேட மட்டும் தான். அவள் எங்கிருக்கிறாள் என கண்களில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு, இவர் தேட வேண்டியது தானே.இவர் என்னவோ இலங்கைக்கு சுற்றுலா வந்தது போல, வீடு வீடாக, தெருத்தெருவாக நோட்டம் விடுவானேன்.

இவர் தூதர் பணியை மட்டும் செய்யவில்லை. இந்த இடங்களை நோட்டம் விட்டு வைத்துக் கொண்டால், ராமன் போருக்கு வரும் சமயத்தி ல் அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு சவுகரியமாக இருக்கும் என்பதால் இவ்வாறு செய்தார்.

ஒரு ஊருக்குப் போனால், அந்த ஊரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோ மதுரைக்கு போனோம், மீனாட்சி கோயி லை மட்டும் பார்த்தோம், சென்னைக்குப் போனோம் கடற்கரையோடு திரும்பி விட்டோம் என்று இருக்கக்கூடாது.

அவ்வூர் சரித்திரம் முழுவதையும் தெரிந்து வர வேண்டும். அப்படியானால் தான் பயணம் போன திருப்தியும் கிடைக்கும், எதிர்காலத்தில் நாம் யாரையேனும் அங்கே அழைத்துப் போகும் போது அவர்களுக்கும் சொல்ல வசதியாக இருக்கும்.

சிறு விஷயமாக நமக்குப் படுவதில் கூட, எவ்வளவு பெரிய நன்மை அடங்கியுள்ளது என்பதை சுந்தரகாண்டம் சுட்டிக்காட்டுவதைக் கவனியுங்கள்.

ஆஞ்சநேயர் ராவணனின் இல்லத்தை அடையு ம் போது, மாலைநேரம் வந்து விட்டது. வானத் தில் சந்திரன் உலா வரத் துவங்கி விட்டான். இந்த மாலை நேரம் இருக்கிறதே. இது தான் மக்களின் மனதை மயக்கும் நேரம்.

நம் வீடுகளில் குத்துவிளக்கேற்றி, இறை சிந்தனையுடன் பூஜை செய்கிறோமே…ஏன் தெரியுமா? மாலை நேரத்தின் தகாத சிந்தனை களை மறக்கத்தான். ராட்சஷர்கள் தங்கள் அன்றாடத் தொழிலை நிறுத்தி விட்டார்கள்.

எல்லோரும் மதுபானங்களை குடம் குடமாய் குடித்தார்கள். தங்கள் ஆசை நாயகியருடன் கூடிக்களித்தார்கள். சில வீடுகளில் உத்தம ஸ்திரீகளும் இருந்தார்கள். அவர்கள் தங்கள் நாயகர்களுக்குரிய பணிவிடையை இனிதே செய்தார்கள்.

பல ரகப் பெண்களை ஆஞ்சநேயர் பார்த்தார். ஆனால், தர்மத்தை விட்டு சற்றும் வழுவாத ராஜரிஷி ஜனகரின் புத்திரியான சீதாதேவி யை மட்டும் அவரால் காண முடியவில்லை.
அவளை அவர் பார்த்ததில்லை எனினும், அங்க அடையாளத்தைக் கொண்டே அவள் இன்னாரென கணித்து விடும் நிபுணரல்லவா அந்த மகாபுத்திமான். அவர் சற்றே சோர்வடைந்தார்..

ஸ்ரீ ராம.. ஜெய ராம.. ஜெயஜெய ராமா…

நாளை தொடரும்…