தேவீ பாகவத மாஹாத்ம்யம்

91

பாகவதம் என்பது தேவீ மஹாபாகவதமே என்பது சாக்தோபாஸகர்களின் கொள்கை. ஶ்ரீமத் பராசக்தியின் வைபவத்தினை சொல்லக்கூடியதான பாகவதமே பாகவதம் என்றும் பாகவத லக்ஷணங்கள் தேவீ மஹாபாகவத்திற்கே பொருந்துகிறது என்றும் ப்ரமாணங்கள் சிவபுராணம், ஸ்காந்தபுராணம், மத்ஸ்யபுராணம் மற்றும் ஆதித்ய உப புராணம் ஆகியவற்ளில் தெள்ளந்தெளிவாக உள்ளன. மேலும் காத்யாயனி தந்த்ரம் முதலிய தந்த்ரங்களிலும் துர்கோபாஸனகல்பத்ருமம், துர்கார்ச்சனதரங்கினி போன்ற உபாஸனை விஷயமான நூல்களிலும் தேவீபாகவதத்தின் பெருமை விஸ்தாரமாகக் கூறப்படுகின்றது.

மேலும் ஶ்ரீபாஸ்கராச்சார்யாள் வரிவஸ்யா ரஹஸ்யத்திற்கு பாஷ்யமியற்றும் ஸமயம் தேவீபாகவதமே பாகவதம் என்பதன் ப்ரமாணமும் கூறியிருக்கிறார். தர்மார்த்த காம மோக்ஷங்களை அளிக்கும் பராசக்தியான ஶ்ரீபுவனேச்வரியின் வைபவத்தினைச் சொல்லும் ஶ்ரீமத் தேவீபாகவதத்தின் மாஹாத்ம்யத்தினை ஸ்காந்த மஹாபுராணமானது எவ்விதம் கூறுகின்றது என்பதை முதலில் சிந்தித்துப் பின் தேவீபாகவத கதாம்ருதத்தினை சிந்திப்போம்.

ஸ்காந்த புராணம் மானஸ கண்டத்தில் உள்ள ஶ்ரீதேவீ மஹாபாகவத மாஹாத்ம்யம்:

ப்ரஹமதேவன் ச்ருஷ்ட்டிக்கும் ஸமயம் அவரிடம் ச்ருஷ்ட்டி சக்தியாகவும், மஹாவிஷ்ணு பாலிக்கும் சமயம் அவரிடம் ஸ்திதி சக்தியாகவும், ருத்ரன் ஸம்ஹரிக்கும் ஸமயம் அவரிடம் ஸம்ஹார சக்தியாகவும் விளங்கும் ஶ்ரீபுவனாம்பிக்கைக்கு நமஸ்காரங்கள்.

ப்ரஹ்மா, விஷ்ணு , ருத்ரன் முதலியோர் பரதேவதையின் ஏவலினால் தம்தம் தொழில்களை செய்து வருகின்றனர். அப்பராம்பிகைக்கு நமஸ்காரம்

மோக்ஷம் எனும் பரமபுருஷார்த்தத்திற்கு காரணமான அகண்டாகார வ்ருத்தியானது நாதம், பிந்து, கலா, வைகரீ என்று விளங்கிவருகிறது. இந்த நான்கு சக்திகளே பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ என்று விளங்கிவருகின்றது முறையே மூலாதாரம், ஹ்ருதயம், விசுத்தி, வாய் ஆகிய ஸ்தானங்களிலே விளங்கி வருகிறது. இந்நான்கு ரூபங்களும் ஶ்ரீமத் பராசக்தியின் வடிவங்களாம்.

இவ்விதமான வடிவங்களுடன் விளங்கும் ஶ்ரீபராசக்தி துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி எனும் வடிவங்களைத் தாங்கிக்கொண்டு ச்ருஷ்ட்யாதி கார்யங்களைச் செய்கின்றாள்.

இவ்விதமான ஸ்வரூபங்களைத் தாங்கின ஶ்ரீபுவனேச்வரி அம்பாளையே த்யானித்துக்கொண்டு ஶ்ரீவ்யாசாச்சார்யாள் தேவீ மஹா பாகவதம் எனும் அற்புதமான க்ரந்தத்தினைத் தொடங்குகின்றார்.

ஶ்ரீபராசக்தியான ஜகன்மாதாவை த்யானித்துக்கொண்டு ஶ்ரீஸூதமஹாருஷி நைமிசவனத்தில் வீற்றிருக்க, சௌனகாதி மஹாரிஷிகள் ஸூதரைப் பார்த்து வினவுகின்றனர்.

“ஓ!! ஸூதரே நீங்கள் பரிபாலன தெய்வமான நாராயணரின் சரித்ரங்களைக் கூறியுள்ளீர்கள்!! பரமேச்வரரின் லீலா விநோதங்களையும், பஸ்மருத்ராக்ஷாதிகளின் மஹிமைகளையும் கூறியுள்ளீர்கள். ஆயினும் புண்யசரித்ரங்களை கேட்கும் ஆவல் எங்களுக்கு போக வில்லை. புண்யமான ரஹஸ்யமான கதாம்ருதத்தை பானம் செய்ய காத்திருக்கிறோம். எந்தவொரு உபாயத்தினால் ச்ரமமில்லாமல் புக்தியையும், முக்தியையும் அடைய முடியுமோ அத்தகைய சரித்ரத்தை தாங்கள் கூறியருளவேண்டும்!!”

ஸூதர் கூறியது
“மஹர்ஷிகளே!! புண்ய தீர்த்த ஸநாநங்களோ, மற்ற தேவதைகளின் புராண ச்ரவணங்களோ, யஞ்ஞாதிகளோ தேவீ பாகவதத்தை ஒரு தரமாவது ச்ரவணம் பண்ணாதவர்களுக்கே புண்யமாய்த் தோன்றும். தேவீ பாகவத்தை ச்ரவணம் செய்தவனுக்கு மற்ற புண்யங்கள் புண்யமாகவே தோன்றாது.

ஶ்ரீதேவீ மஹாபாகவதம் எனும் பெரிய கோடாலி கிடைக்குமாயின் பெரும் பாபங்களாகிற காடுகளை அழித்து விடலாம். ஸகல வ்யாதிகளும் தேவீ பாகவத ச்ரவணத்தினாலேயே அழிந்து விடுகின்றன”.

இவ்வாறு கூறிவிட்டு ஶ்ரீஸூத மஹாமுனி தேவீமஹாபாகவதத்தினை சொல்வதாக ப்ரதிஞ்ஞை செய்தார். ஸகல மஹர்ஷிகளும் ஶ்ரீஸூதரை நமஸ்கரித்து வ்யாஸ பீடத்திலே அமர்த்தி ஆனந்தபாஷ்பம் பெருக ஶ்ரீதேவீ மஹாபாகவத்தின் மஹிமையை ச்ரவணம் செய்யத் தொடங்கினார்கள்.

தொடரும்..

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம: