இதனை நிர்குண மானஸ பூஜையென்றும் அழைக்கப்படும். நேற்றே பார்த்தது போல ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் ” ஸ்வரூப நிரூபணமாக ” தன்னையே , தன்னாலே , தன்னிலே ரமித்திடும் அழகை , ஆராதனையை சிரத்தையாக உபாஸிக்கும் சீடருக்கு இன்றும், அன்றும் , என்றும் கைகூட்டி வைக்கும் பேரருளை மீண்டும் மீண்டும் வணங்கி அடங்குதல் அன்றி வேறு என்னகைம்மாறு செய்திடல் இயலும் ?
எங்கும் நிறைந்த பரப்ரம்மமே ஸத்யம். இந்த ஜகத் என்பது இல்லவே இல்லை. என்முன்னே தோன்றும் பொருள் அனைத்திலும் ‘ ஸ்வரூப பிரகாசம் ‘ எள்ளினுள் எண்ணெய் போன்றும், பாலினுள் நெய் போன்றும் நிறைந்து காணப்படுகிறது என்றறிதலே, இந்த ஞானமே ஆஸனம்.
எல்லாம் அவன் இச்சை என்று எண்ணுவதற்கு கூட இடமில்லாத நிச்சிந்தையாக இருப்பதே அர்க்கியமாம்.
எப்போதும் எம்முடைய மனம் சங்கல்ப , விகல்பங்கள் இல்லாது இருப்பதே பரிசுத்தமாக இருப்பதே ஆசமநீயம் .
ஸதா ஸ்வரூப தியானத்தில் இருப்பதே ……….தைலதாரையாய் ப்ரம்மமாகிய உணர்வில் இருப்பதே ஸ்நானம். ஸர்வமும் ப்ரம்மஸ்வரூபம் என்ற எண்ணமே கந்தமாம்.
ஒவ்வொரு திருஷ்டியும் வெளிச்செல்லும்போதெல்லாம் …..” காண்பதெல்லாம் ப்ரம்ம ஸ்வரூபமே ” என்ற ஆசீர்வாதங்களே ஆகி, ப்ரம்ம திருஷ்டியிலிருந்து அகலாது இருப்பதே அக்ஷதையாம்.
அம்பிகை, குரு, நான் ( தானாகிய ஸ்வரூபம் ) என்ற பேதமின்றி இருப்பதே, ப்ரபஞ்சமாக உணர்வதே, அஷ்டோத்ர , ஸஹஸ்ரார அர்ச்சனையாம். எல்லாவித வாஸனா தியாகமே தூபமாம். அங்கிருந்தே பரவும் ப்ரம்ம ஸுகந்தமே…..நல்ல நறுமணம் தரும் தூபமாம். ( இன்றும் நல்ல சாதுக்களோடு கூடிய சத்சங்கம், உத்தம ஸாதகர்கள் தொடர்பும் இந்த சாந்தியை உள்ளம் நிறைப்பதை அனுபவத்தில் உணரலாம். )
தானே தானாய் ஜ்வலிக்கும் ப்ரம்ம ஜோதியே ஞான தீபம். யாம் ப்ரம்மம் , யாம் ப்ரம்மம் யாமே எல்லாம்….என்ற ப்ரம்ம லயமே நைய்வேத்யம். ராக, துவேஷ, விஷயாதிகளை என்னுள் சுடரும் பிரம்மஜோதியில் யாகமாய் மாற்றுதலே தாம்பூலம்.
அஞ்ஞானம் என்ற இருட்டு அகல, சூரிய வெளிச்சமாய் பரவி இருளை ஒழிக்கும் ” அஹம் ப்ரம்மம் ” என்றாகுதலே கற்பூரநீராஜனம்.
பரிபூரண ஆனந்தம் என்ற ” நான் ப்ரம்மம் ” என்ற பாவனையே, பேரூணர்வே புஷ்பாஞ்சலி.
ஆயிரக்கணக்கான இந்த ப்ரம்மாண்டத்தில் ” தத்வமஸி ” என்ற அதுவாகவே இருக்கிறேன் என்ற பேரூணர்வே ….இடையறாத் தியானமே ப்ரதக்ஷிணம்.
ஹம்ஸ பா’ வத்தை அறிந்ததால்,…..தொடரும் ஸோஹம் பா’ வனையாய் தொடர்ச்சியாய் எல்லா நிலைகளிலும் தியானத்தைத் தொடர்தலே ……….நான் வேறு , அம்பிகை வேறு , குரு வேறு அல்ல, என்று உணர்வுக்கு உணர்வாய் உணர்ந்துகொண்டு வாழ்தலே ….வந்தனம்.
இதனை விளைவு என்னவெனில் ? …..எல்லாவித நாமரூபங்களுக்கு அப்பாற்பட்டவனே ” யாம் ” என்ற கீர்த்தனமே …..வாழ்வின் நாம ஸங்கீர்த்தனம்.
சுருக்க சொன்னால், இதற்குப் பிறகு ….உங்களுக்கு இங்கு விளையாட்டில் விருப்பமில்லை. ஓரமாய் பால்கனியில் அமர்ந்து எல்லா ஜீவ கற்பித விளையாட்டை சாட்சியாய் பார்க்கும் அகண்ட உணர்வே நிறைந்து நிற்கும்.
