பெரியவா திருவடியே சரணம்.

187

உலகம் முழுதும் நல்லதும் கெட்டதும் கலந்து தான் இருக்கிறது. இது ஒன்றும் புதியதல்ல. உலகம் தோன்றிய காலத்தில்இருந்து இப்படித் தானிருக்கிறது. நாம் வாழும் இந்த பூலோகத்தை “மிச்ரலோகம்’ என்று தான் குறிப்பிடுவர். அப்படியென்றால் “கலப்பு உலகம்’ என்று பொருள். நல்லதும் கெட்டதும் கலந்ததே இந்தக் கலவை. நல்லதை விடக் கெட்டது அதிகமாகி விடாமல், நூற்றுக்கு நாற்பது சதவீதமாவது நல்லது நடக்க நாம் வழிவகுக்க வேண்டும். எந்தக் காலத்திற்கும் நல்லதற்கு நிச்சயமாக இடமுண்டு. தீமையின் பிடியிலிருந்து நல்லதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது.

மனதில் எண்ணிலடங்கா ஆசைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆசையைப் படிப்படியாக குறைக்க வேண்டும். இதனால் துன்பம் குறையும். ஆசை அடியோடு நீங்கி விட்டால், மீண்டும் மண்ணில் பிறவி எடுக்கத் தேவையில்லை. மரத்திற்கு மரம் தாவும் குரங்குக்குட்டி போல, மனம் ஆசைவயப்பட்டு, கட்டுக்கடங்காமல் அலைகிறது. அதனை “பக்தி’ என்னும் கயிறால் கட்டிப் போடவேண்டும்.

ஆசையால் உலக இன்பத்தை அடைய முயல்கிறோம். எண்ணம் நிறைவேறியதும், மனதில் ஆசை அற்றுப் போவதில்லை. மற்றொன்று முளைவிடத் தொடங்குகிறது. தீயில் விட்ட நெருப்பு கொழுந்து விட்டு எரிவது போல, ஆசையின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க பாவமும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும். உயிர்கள் அனைத்தும் கடவுளே என்ற ஞானம் வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், கவலை, பிறவித்துன்பம் ஆகியவை நம்மை விட்டு நீங்கி விடும்.

வெளியுலகில் கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு என்றென்றும் நிலைப்பதில்லை. மனதில் இருந்து உண்டாகும் மகிழ்ச்சியே என்றென்றும் நிலைத்திருக்கும். வேதம் விதித்த தர்மவழிகளில் நடந்து புண்ணியத்தைத் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்து பாவத்தை சம்பாதித்துக் கொள்ள கூடாது. சுயநலத்தைப் பெரிதாக எண்ணாமல், சமுதாய நலனுக்காக செயல்பட்டால், நம்முடைய சொல், செயல் எல்லாமே புண்ணிய கர்மமாக மாறி விடும்.

யாரையும் கோபிக்கும் தகுதியோ உரிமையோ நமக்கு இல்லை. நாமும் பல சந்தர்ப்பங்களில் தவறு செய்திருக்கிறோம். இது நம் மனசாட்சிக்கு தெரியும். பலவிதமான தீங்குகளில் தள்ளிவிடும் மோசமான எதிரி கோபம். அது நம்மை அண்டாதபடி விழிப்புடன் இருப்பது அவசியம். ஒன்று மட்டும் நாம் புரிந்து கொண்டு விட்டால் போதும், கோபம் எதிராளியை மாற்றுவதில்லை, மாறாக இருவருக்கும் இடையே வெறுப்பையும், துன்பத்தையுமே உண்டாக்குகிறது என்கிற உண்மையை உணர்ந்து கொண்டு விட்டால், பகவத் கீதை உபதேசிப்பது போல, விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் நம்மால் கடமைகளைச் சரிவரச் செய்து வர முடியும்.