மீன் விற்ற கிழவிக்கு தேரை கொடுத்த ராஜ ராஜ சோழன்

113

ஒருமுறை இராஜராஜன் தேரில் சென்று கொண்டிருந்தார்.

அது தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் சாலை. அச்சாலை காவிரி ஆற்றங்கரையோரமாகவே செல்லும். இருகரை தொட்டு வெள்ளமெனப் பாய்ந்தோடும் காவிரியைப் பார்த்துக் கொண்டே பயணம் செய்வது சுகமான அனுபவம். சாலையின் இருபுறமும் இருந்த ஓங்கி வளர்ந்த மரங்களில் இருந்து வீசிய குளிர் காற்று மாமன்னர் இராஜராஜனின் உடலைத் தழுவி மனதை இதமாக்கியது.

அப்போது எங்கிருந்தோ வந்த மீன் பொரிக்கும் வாசனை இராஜராஜன் மூக்கைத் துளைத்தது. பொரித்த மீனை நினைக்கும் போதே நாவில் எச்சில் ஊறியது. உடனடியாக தேரை நிறுத்தினார் இராஜராஜன். அவர் தேரின் பின்புறம் சென்று அரச உடை களைந்து சாதாரண உடைக்கு மாறினார்.

மீன் பொரிக்கும் வாசனை வந்த திசை நோக்கி நடந்தார். அங்கு ஒரு கிழவி காவிரி ஆற்றில் இருந்து பிடித்த மீன்களை பொரித்து விற்றுக் கொண்டிருந்தார்.

பாட்டி இது மீன்கறியா?” என்று கேட்டார்.

இல்ல. ஆமைக்கறி பார்த்தா எப்படி தெரியுது?” எனக் கோவமாகக் கூறினார் பாட்டி.

தனது இராஜ்ஜியத்தில் பெண்களும் தைரியமாக இருப்பதை நினைத்து மனதில் பெருமை கொண்டார் இராஜராஜ சோழன்.

எனக்கு ரெண்டு துண்டு கொடுங்கள்என கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். சுவை மிகவும் பிரமாதமாக இருந்தது. சோழ நாட்டு மீன்சுவைக்கு சான்றிதழும் வேண்டுமா?

உண்டு முடித்த பின் தான் கவனித்தார், பொற்காசுகளை அரச உடையுடன் சேர்த்து தேரிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார்.

பாட்டி, தற்போது காசு இல்லை. வீட்டிற்குச் சென்று எடுத்துவரவா?” என்று கேட்டார்.
ஏற்கனவே கோபத்தில் இருந்த பாட்டிஎத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க?” என ஆரம்பித்து திட்டித் தீர்த்தார்.
ஒழுங்கா சாப்பிட்ட காசுக்கு மசாலா அரைத்துக் கொடுத்துவிட்டு போஎன இராஜராஜனை அம்மிக் கல்லில் அமர வைத்துவிட்டாள். வேறு வழி இல்லாமல் இராஜராஜனும் மீன் மசாலா அரைக்க ஆரம்பித்தார்.

வெகுநேரமாகியும் மன்னர் திரும்பி வராததால் அமைச்சர்கள் பதட்டமடைந்து தேடி வந்தனர். காவிரி ஆற்றங்கரையில் மன்னர் மசாலா அரைப்பதைக் கண்டதும் வாளெடுத்து
ஏய் கிழவி அவர் யார் தெரியுமா? சோழப் பேரரசர். அவரை மசாலா அரைக்கச் சொல்கிறாயா?” எனக் கோபமாகக் கேட்டனர்.
தெரியும். இவர் மன்னர் என்பது தெரிந்து தான் மசாலா அரைக்கச் சொன்னேன். ஒரு பேரரசர் இப்படி சிறிய செயலில் கவனக் குறைவாக இருக்கலாமா? நாட்டை இராஜராஜன் காப்பாற்றுவார் என்று தானே நாங்கள் நிம்மதியாக உறங்குகிறோம். அவரே இப்படி கவனக் குறைவாக இருந்தால் என்ன செய்வது? அதற்காகத் தான் அப்படிச் செய்தேன்என்றார்.
தன் மீது அந்த கிழவி வைத்திருந்த பாசத்தை நினைத்து நெஞ்சுருகிய இராஜராஜ சோழன் அந்தத் தேரை அவருக்கு பரிசாக அளித்து விட்டு நடந்து சென்றார்