பெருமாளுக்காக துளசியைப் பறிக்கிறார் ஒருவர். ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே பறித்தாலும் கையிலே வேகம்! கொத்து கொத்தாகச் செடியிலிருந்து பெயர்ந்து வருகிறது துளசி! அப்புறம் அதை அர்ச்சனை பண்ணப் போகிறார்.
அப்படிப் பறிக்கலாமா துளசியை..!?
பறிக்கையில் சொல்கிற சுலோகம் என்ன சுலோகம்..?
‘துளஸி! அமிர்த ஜன்மாஸி! சதாத்வம் கேசவப்ரியே!”
அம்மா தாயே! துளசி! நீ அமிர்தத்தின் உறைவிடம் அல்லவா! உன்னிடத்தில் அல்லவா அந்த கேசவனுக்கு ரொம்பப் ப்ரியம். உன்னைச் சாற்றிக் கொண்டு அவன் எத்தனை ஆனந்தப்படுகிறான்! உன்னால் அவனுக்குப் பெருமையா? அவனால் உனக்குப் பெருமையா? அதை நீதான் சொல்ல வேண்டும்!
இந்த தளத்தை எடுக்கப் போகிறேன். அவ்வாறு எடுக்கும் போது உனக்கு நோகும். உன்னை ஹிம்ஸை பண்ணுகிறேன். யாருக்காக…? எனக்காக அல்ல.. கேசவனுக்காக.
இதைச் சொன்னவுடனே துளஸிக்கு அவ்வளவு சந்தோஷமாம்! ‘கேசவனின் பொருட்டா..? இதோ என்னை அர்ப்பணம் பண்ணுகிறேன்..’ என்று ஆனந்தமாய் துளசி கையில் வந்து உட்காருகிறாளாம்.!
மூன்று தளங்கள் உடையதாய், அழகான அந்த கிருஷ்ண துளசியை (கருந்துளசி) மேலேயுள்ள குமுசத்தோடு பறித்து பகவானுக்கு அர்ச்சனை பண்ணினால் அவன் மிகுந்த சந்தோஷப்படுவான்.
கட்டை விரலையும், பவித்ர விரலையும் உபயோகித்து நகம் படாமல் சதை மட்டும் படும்படியாகத் துளசியைப் பறிக்க வேண்டும்.
நகம் பட்டாலோ உருவியெடுத்தாலோ பகவான் அதை ஏற்கமாட்டான்.
இதனால் இரண்டு வித அபசாரங்கள் ஏற்பட்டுப் போகும். துளசியினடமும் அபசாரம். பகவானிடமும் அபசாரம்.
எனவே ரொம்ப ஜாக்கிரதையாக எடுத்து துளசியை அவன் திருவடியிலே அர்ப்பணம் பண்ண வேண்டும்.
புஷ்பத்தையோ, துளசியையோ எடுத்து ஹ்ருதயத்துக்கு நேரே வைத்து, இந்த என் ஹ்ருதயம் அமிர்தமயமானது. இந்த ஹ்ருதயத்தை உனக்குச் சமர்ப்பிக்கிறேன். என்னையே உனக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அர்ப்பணிக்க வேண்டும்.
ஹ்ருதய சமர்ப்பணம் என்பது ‘தடாலென்று’ நிகழ்ந்து விட முடியுமா?
இப்படி ஹ்ருதய ஸ்தானத்தில் புஷ்பத்தை வைத்து சமர்ப்பிக்கிறேன். என் ஹ்ருதயத்தை ஏற்றுக் கொள்’ என்று புஷ்பார்ச்சனை மூலமாக நிகழ்கிறது.
நெஞ்சமெல்லாம் கொள்ளை கொண்ட பெருமான்; நெஞ்சில் நிறைந்தவன் அவன்!
‘நெஞ்சு நிறைய வந்து புகுந்தாய்’ என்கிறார் ஆழ்வார்.
‘இனிமேல் இந்த நெஞ்சுக்குள்ளே நுழைய வேறு எதற்கும் இடம் இருக்கிறதா? நீயே நிரம்பி வழிகிறாயே! ஹ்ருதயம் பூர்த்தியாக நிரம்பி வழியும்படியான இந்த நிலையில் புஷ்பத்தை எடுத்து பகவானுடைய திருவடியிலே அப்படி அர்ச்சனை பண்ண வேண்டும்.
அர்ச்சனை என்கிற காரியத்தில் இந்த்ரியம் வேலை செய்கிறது. வாக்கு நாமாவைச் சொல்கிறது. கண்கள் பகவானுடைய திருவடியைப் பார்க்கின்றன; கை அர்ச்சனை செய்கிறது. அந்தப் புஷ்பம் போய் பகவானுடைய திருவடியிலே விழுகிறது.
ஆத்மார்ப்பணம் என்கிற காரியம் நடக்கிறது.
அதோடு கூட என்ன நடக்க வேண்டும்?
அஹிம்ஸா பிரதமம் புஷ்பம்
புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ:
ஸர்வ பூத தயா புஷ்பம்
க்ஷமா புஷ்பம் விசேஷத:
சாந்தி: புஷ்பம் தப: புஷ்பம்
ஞானம் புஷ்பம் ததைவச
சத்யம் அஷ்ட விதம் புஷ்பம்
விஷ்ணோ: ப்ரீதி கரம்பவேத்
அஹிம்சை – எந்த உயிர்க்கும், யார் மனதுக்கும், தனது உட்பட, துன்பம் தராமல், மன,உடற் பசிப்பிணி அகற்றி உதவுதல், மாலனுக்குப் மிகப் பிடித்த உயர்ந்த புஷ்பம்.
இந்திரிய நிக்ரஹ – ஐம்புலன்களையும், ஆமை ஆணவ முகத்தை வெளிக் காட்டாமல், ஓட்டுக்குள் உள்ளடக்குவது போல், நிறுத்தி, உயர்ந்த தேவைகளுக்கு மட்டும், உபயோகித்தல்.
சர்வ பூத தயா – மற்ற உயிர்/உயிரற்ற எவையுமே, மாலன் படைத்தது தான், என்று எண்ணி, அவற்றிடம் கருணையுடனும், தயையுடனும் வாழ்தல்.
க்ஷமா – மற்றோர் தவறுகளை மன்னித்து வாழ்தல், மிகவும், சிறந்த புஷ்பமாம். நாம், யாருக்கும் நீதிபதி ஆகாத வரையில், நமக்கு நீதி சொல்ல யாரும் கிளம்ப மாட்டார்கள்.
ஞானம்: பரம புருஷனான மாலன் ஒருவனே பரம்பொருள் என்றும், எல்லாமே அவன் செயல்கள் தான் என்றறிந்து, அமைதி காத்தல்,
தப: – தான் யாரென்று அறிவதற்கும், நாரணன், திருவடி வழி செல்வதற்கும், தொடர்ந்து ஆழ் நிலைத் தியானத்தில் ஈடு படல்.
ஷாந்தி: நிர்மல அமைதியில் இன்பம் காணுதல். மற்றோர் அமைதிக்கு ஏதுவாய் இருத்தல்.
சத்யம்: எப்போதும் மனத்துக்குள் உண்மையனாய், மனத்துக்கண் மாசிலானாய் இருத்தல்.
விஷ்ணுவுக்குப் ப்ரீதியான புஷ்பம் இதுதான்.
ஓம் நமோ நாராயணாய !
