சேனைக்கிழங்கு பரங்கிக்காயாகி விட்டால் என்ன செய்வது ?

107

பிராரப்த கர்மாவை ஒவ்வொருவரும் அனுபவித்தே தீர வேண்டும்.

மஹான்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை “.

ஶ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்.

அடையபலம் ஶ்ரீ அப்பய்ய தீக்ஷிதரின் அந்திம காலத்தில், அவர் பொறுக்க முடியாத வயிற்று வலியால் துடித்தார். தனது சிவ பூஜைக்கு இந்த உபாதை இடைஞ்சலாக இருப்பதனால், ஒரு துண்டை எடுத்து இறுக்கி, வயிற்றின் மேல் கட்டிக் கொண்டு, தனக்கு எதிரே ஒரு தாம்பாளத்தில் நீர் நிரப்பி, வயிற்றில் இருந்த பெரிய கட்டியை வெளியே எடுத்து அதில் வைத்தார்.

அது ஒரு சேனைக்கிழங்கு போல் நீரில் மிதந்தது. பூஜை முடிந்ததும், ரத்தக்கட்டி வயிற்றுக்குள் பழையபடியே சென்று விடும். இது அன்றாடம் தொடர்ந்தது.

அது மாத்திரம் அல்ல. சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லித் தரும்போதோ அல்லது சில சமயங்களில் தம்மை யாராவது விஷேமாக சந்திக்க வந்தாலோ, அவர்கள் முன்பு தான் வலியால் அவஸ்தைப்படுவதை காட்டிக் கொள்ளக் கூடாது. மற்றும் கலந்து உரையாடுவதற்கு, இந்த தாங்க முடியாத வலி தடங்கலாக இருக்கக் கூடாது என்று நினைப்பார். உடனை அருகில் இருக்கும் மான் தோலினால் செய்யப்பட்ட ஆஸனத்தில், அந்த வலியை இடம் பெறச் செய்து விடுவார். அந்த மான் தோல் துடித்துக் கொண்டே இருக்குமாம். வந்தவர்கள் விடை பெற்றுச் சென்றவுடன், பழையபடி அந்த வலியை தான் மீண்டும் வாங்கிக் கொண்டு விடுவார்.

இவற்றையெல்லாம் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சிஷ்யர்களும் மற்றவர்களும், ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தீக்ஷிதர் அவர்களிடம்குருநாதா ! தங்களால் அந்தக் கட்டியை வெளியே கொண்டு வர முடிகிறதே. அதை அப்படியே வெளியே விட்டு விடக் கூடாதா ?” எனக் கேட்டனர்.

வாஸ்தவம். என்னால் அதை வெளியேற்ற முடியும். அப்புறம் சேனைக்கிழங்கு பரங்கிக்காயாகி, என்னை அடையும்போது, அதை எப்படிப் பொறுத்துக் கொள்வது ?

இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டியதை, சிவன் அருளோடு இப்போதே பொறுத்துக் கொண்டு அனுபவித்து விடுகிறேன்என்றார்.

ஒரு சமயம் அவரது இல்லத்திற்கு விஜயம் செய்த அரசன், இதைப் பற்றி பிரஸ்தாபித்தான். அதற்கு தீ்க்ஷிதர் அவர்கள் கூறிய விவரமான பதில் இதோ : ” அரசே ! சரீரம் படைத்து ஜென்மா எடுத்த நம் எல்லோருக்கும், ப்ராரப்த கர்மாவினால் ஏற்படுகின்ற அங்கப் பிரதிபந்தங்களைத் தடுக்க முடியாது. அதற்கு நானும் விதி விலக்கல்ல. அதனால்தான் ப்ராரப்த வசத்தால் எனக்கு தற்சமயம் ஏற்பட்டுள்ள இந்த ரோகம் என்னை வாட்டுகின்றது. அவசியம் நேரும்போது, அதனை இம்மாதிரி தற்காலிகமாக சிறிது நேரம் இடம் பெறச் செய்து கொள்ளுவேன். இதை நான் சிரமமாகக் கருதவில்லை ; அனுபவித்து விடுகிறேன் “.

இதைக் கேட்ட அரசன், தீக்ஷிதர் அவர்ளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்தான்.
கூடவே வைத்தியம் செய்து கொள்ளுமாறு ஒரு வேண்டுகோளையும் விடுத்தான். தீக்ஷிதர் அவர்கள் மறுத்து விட்டு, பிராரப்தத்தை நாம் அவசியம் அனுபவித்தே தீர வேண்டும் என்று எடுத்துக் கூறி, அரசனை சமாதானப் படுத்தினார்—- “மஹான் அப்பய்ய தீக்ஷிதர்

சிவ ! சிவ !