Tuesday, October 17, 2023
HomeAanmeega Thagavalgalசெல்வங்களை இழந்த குபேரன், தன் செல்வங்களை மீட்டெடுக்க வழிபட்ட ஸ்தலம்!

செல்வங்களை இழந்த குபேரன், தன் செல்வங்களை மீட்டெடுக்க வழிபட்ட ஸ்தலம்!

செல்வங்களை இழந்த குபேரன், தன் செல்வங்களை மீட்டெடுக்க வழிபட்ட ஸ்தலம்!

பெரம்பலூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இந்த ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் செல்வம் வழங்கும் குபேரனுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

ஆலய வரலாறு:

முற்காலத்தில் இந்தப் பகுதி கடம்ப மரங்கள் நிறைந்த, கடம்ப வனமாக இருந்திருக்கிறது. இந்தக் கடம்ப வனத்தில் தினமும் நள்ளிரவு வேளையில் தீம்பிழம்பு தோன்றுவது வாடிக்கையாக இருந்துள்ளது. ஒரு முறை நள்ளிரவு நேரத்தில் இந்தக் கடம்ப வனம் வழியாக வணிகன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று அங்கு ஒரு தீம்பிழம்பு தோன்றி, அதில் இருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்த சிவலிங்கத்தை தேவர் களும், முனிவர்களும் வழிபட்டனர். இந்தக் காட்சியைக் கண்ட வணிகன் பரவசம் அடைந்தான்.

தான் கண்ட காட்சியைப் பற்றி, அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த பராந்தகச் சோழ மன்னனிடம் போய் கூறினான் வணிகன். அந்த நேரத்தில் சோழ மன்னனின் அரண்மனையில் குலசேகர பாண்டியன் விருந்தினராக தங்கியிருந்தார். வணிகன் கூறியதைக் கேட்டு ஆச்சரியம் கொண்ட சோழ மன்னனும், பாண்டிய மன்னனும் தங்கள் பரிவாரங்களுடன் கடம்ப வனப் பகுதிக்கு வந்தனர்.

பின்னர் அந்த வனத்திற்குள் சிவலிங்கத்தைத் தேடி அலைந்தனர். அப்போது கையில் செங்கரும்பை ஊன்றியபடி ஒரு முதியவர் வந்தார். அவர் சிவலிங்கம் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டி விட்டு ஜோதி வடிவாக மறைந்தார். இதைக் கண்டு மெய்சிலிர்த்த பராந்தக சோழனும், குலசேகர பாண்டியனும் ஏக ஜோதியின் இடையில் தோன்றிய ஏகாம்பரேஸ்வரருக்கு தனி ஆலயம் கட்ட தீர்மானித்தனர். அதற்கு முன்பாக சிவலிங்கத்தை தேடி எடுத்தனர்.

ஆலயத்தின் சிறப்பு “தொடர்ந்து 96 அடி உயரம் கொண்ட 7 நிலை ராஜகோபுரத்துடன் இறைவனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஏக்கர் நிலப் பரப்பில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இறைவனுக்கு ஏகாம்பரேஸ்வரர் என்று பெயரிட்டனர். அம்மனுக்கும் தனிச் சன்னிதி அமைத்து காமாட்சி அம்மன் என்று பெயரிட்டு அழைத்தனர்.

ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்குள் நுழையும் முன்பாக கம்பீரமான தோற்றத்துடன் கூடிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால், பிரமாண்டமான ஸ்தபன மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் உள்ள சிற்பக் கலை, திருச்சி ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்களில் உள்ள சிற்பங்களை கண் முன் நிறுத்துவதாக அமைந்துள்ளன.

இந்த மண்டபத்தில் ஆலயத்திற்கு திருப்பணி செய்த மன்னர்களின் சிலைகள், மண்டப தூண்களில் யாளி மீதும், குதிரைகள் மீதும் அமர்ந்திருக்கும் வீரர்களின் சிற்பம், மண்டபத்தின் மேல் விதானத்தில் திருஞானசம்பந்தர், பதஞ்சலி முனிவர், பிருங்கி முனிவர், வியாக்ரபாதர் மற்றும் சிவனடியார்கள் பலரும் சிவபூஜை செய்யும் காட்சி, சித்திரகுப்தர் ஓலைச்சுவடியுடன் நிற்க, எருமை வாகனத்தில் வரும் எமதர்மனை சூலாயுதத்தால் தடுக்கும் சிவபெருமான் ஓவியம் என்று கண்களை கொள்ளைகொள்ளும் காட்சிகள் ஏராளம்.

இந்த அழகை ரசித்தபடி நடந்தால் கொடிமரம் உள்ளது. அதைக் கடந்தால் மகா மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் ஓசை எழுப்பும் கல் தூண்கள் அமைந்துள்ளன. அதற்கு அடுத்தாற்போல் மூலவரின் கருவறை இருக்கிறது. கரு வறையில் ஏகாம்பரேசுவரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் உத்திராயண காலத்தில் 2 நாட்கள், மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும்படி இறைவனின் கருவறையை அமைத்திருப்பது நமது முன்னோர்களின் அறிவுக்கூர்மையை பறைசாற்றுகிறது. வாரத்தில் அனைத்து தினங்களிலும் நடைதிறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது. மூலவர் கருவறையின் வடமேற்கில் காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது.

குபேரனுக்கு தனி சன்னதி:

இந்த ஆலயத்தில் அம்மன் சன்னிதிக்கு எதிரே மகா குபேரனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இங்கு சித்திரலோகா சமேதராக வீற்றிருந்து மகா குபேரன் அருள் பாலிக்கிறார்கள். ஆலயத்தின் ஸ்தபன மண்டபத்தில் 12 ராசிக்காரர்களும் வழிபட, மீன் வாகனத்தில் 12 குபேரன் சிலைகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. அவரவர் ராசிக்குரிய குபேரனை, தங்களது ஜனன நட்சத்திரத்தன்று வழிபடுவது நன்மை தரும். மேலும் குபேரனுக்கு உகந்த பச்சை வஸ்திரமும், பச்சை குங்குமமும்

சாத்தி, நிவேதனம் செய்து வழிபட்டால், யோகம் பெருகி தொழிலில் விருத்தி ஏற்படும். செல்வச் செழிப்பு மிகுந்த வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். குபேரனின் ஜன்ம நட்சத்திரன் பூசம் ஆகும். ஆனால் ஒரு முறை குபேரன் தன்னுடைய சக்திகளை இழந்து, செல்வங்களையும் பறிகொடுத்தான். பின்னர் இத்தலத்தில் உள்ள காமாட்சி அம்மனை வழிபட்டு இழந்த செல்வங்களை மீட்டெடுத்தான். செல்வங்களை மீட்ட தினம் பூரட்டாதி நட்சத்திரமாகும். எனவே அந்த நட்சத்திரத்தன்று மகா குபேரனுக்கு அபிஷேகங்களும், யாகமும் நடைபெறுகிறது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்திருந்து வழிபாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

திருவிழாக்கள்:

இந்தக் கோவிலின் தல விருட்சம் ‘வில்வ மரம்’ ஆகும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, பங்குனி உத்திர திருவிழா, திருவாதிரை திருநாள், மார்கழி அதிகாலை வழிபாடு, சோம வார வழிபாடு போன்றவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 20 =

Most Popular